உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழில் சிறு பத்திரிகைகள்/எழுத்து

விக்கிமூலம் இலிருந்து

10. எழுத்து


சி. சு. செல்லப்பா தனது பத்திரிகைக்கு 'எழுத்து' என்று பெயர் வைத்ததே துணிச்சலான காரியம்தான். ஆங்கிலத்தில் 'ரைட்டிங்', 'நியூ ரைட்டிங்' என்றெல்லாம் பத்திரிகைகளுக்குப் பெயர் இருக்கிற போது, தமிழில் 'எழுத்து' என்று பெயர் வைத்தால் என்ன கெட்டுப் போகும் என்பது அவரது வாதம்.

‘எழுத்து' என்ற வார்த்தைக்கு அகராதி ரீதியாக அக்கரம், இலக்கணம், கல்வி, கையெழுத்து, ஆதாரச் சீட்டு, ஓவியம் என்றெல்லாம் விளக்கம் இருந்தாலும் இலக்கியப் படைப்பு என்ற அர்த்தத்தில்தான் பெயர் தாங்கி வருகிறது இந்த ஏடு என்று அவர் அறிவித்தார்.

'மக்களுக்குப் பிடிக்கிறதை நாங்கள் கொடுக்கிறோம் என்ற குரல் இலக்கிய உலகத்திலும் அரித்துக் கொண்டிருக்கிற ஒரு சூழ்நிலையில், பழக்க முறையாகி விட்ட ரீதியிலேயே கருத்துக்களையும் அலுக்கும்படியாக, ஒரே விதமாக கொடுக்கும் ஒரு மனப்பாங்கு பரவியுள்ள நிலையில், மக்களுக்கு இன்னின்னவைகளைக் கொடுத்து, படிக்கச் செய்யவேண்டும், புதுப்புது விதமாக நோக்கும் பார்வையும் கொண்டு, வெளியிட்டுச் சொல்ல வேண்டும் என்ற ஒரு நினைப்பு ஒரு மொழி இலக்கியத்துக்கு அவசியமானது. அந்த நினைப்புடன் எழுத்து ஏடுகள் பரவும்' என்று கூறி, பத்திரிகையின் நோக்கங்கள் விரிவாகவே முதல் இதழில் எடுத்துச் சொல்லப்பட்டன.

'முழுக்க முழுக்கக் கருத்து ஆழமும் கனமும் உள்ள ஒரு இலக்கியப் பத்திரிகையை, இந்தப் பாமரப் பிரியமான பத்திரிகைப் பரப்புக் காலத்தில் ஆரம்பிப்பது ஒரு சோதிக்கிற முயற்சிதான்' என்று நன்கு உணர்ந்தே தொடங்கப்பட்டது எழுத்து. அதன் நிபந்தனைகளும் வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டன.

‘எழுத்து இரண்டு நிபந்தனைகளுடன் வெளி வருகிறது; 2000 பிரதிகளுக்கு மேல் அச்சாகாது. நேரில் சந்தாதாரராகச் சேர்பவர்களுக்குத்தான் கிடைக்கும் என்ற அறிவிப்புகள் நூதனமானவைதான். வாசகர்களின் தொகையைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காக அல்ல; இலக்கிய வாசகர்களைத் தேடிப்பிடிப்பதுதான் எழுத்துக்கு நோக்கம். ஏனெனில், ‘பிடித்தமானது' என்ற சாக்கில் பொது வாசகர்களைத் திருப்திப்படுத்துவதற்கான வழிகளை 'எழுத்து' கையாளும் உத்தேசம் இல்லை. 'எழுத்து எனக்குப் பிடித்து இருக்கிறது' என்று சொல்லக்கூடிய வாசகர்கள் எங்கெங்கே இருக்கிறார்களோ அவர்களைத் தேடும் 'எழுத்து'. இலக்கிய வாசகர்களின் ஆதரவை எதிர்பார்த்து ஒரு துணிச்சலான முயற்சியாக வரும் 'எழுத்து' க்குத் தமிழகம் தன் அரவணைப்பைத் தந்து, அது ஏட்டின் பின் ஏடாக அடுக்கு ஏற வகை செய்யும் என்ற நம்பிக்கையுடன் இந்த முதல் ஏடு உங்கள் முன் வைக்கப்படுகிறது'.

இவ்விதம் கூறிக்கொண்டு, 'எழுத்து' முதலாவது இதழ் 1959 ஜனவரி மாதம் தோன்றியது. நல்ல வெள்ளைத்தாள். அட்டை கிடையாது. 50 பைசா விலை. ஆண்டு சந்தா 5 ரூபாய்.

'புதுமை இலக்கிய மாத ஏடு' என்று பொறித்துக்கொண்ட எழுத்து இலக்கிய விமர்சனத்துக்கே முக்கியத்துவம் அளிக்க விரும்பியது.

‘இலக்கிய ரசனை கருத்துப் பரிமாறுதல்களால்தான் தெளிவுபடும், வளரும் என்பது 'எழுத்து' க்கு நிச்சயமான கருத்து. வெறுமனே சர்ச்சைக்காகச் சர்ச்சையை எழுத்து தொடராது' என்று அறிவித்து, இலக்கியவாதிகளின் அபிப்பிராயங்களை அது வரவேற்றது.

இதனாலே 'இலக்கிய விமர்சனக்குரல்' என்று இடைக்காலத்தில் தன்னை அறிவிப்பதில் பெருமை கொண்டது. அப்புறம் 'இலக்கிய விமர்சனம், படைப்புத் துறையில் சோதனைகள்- இவற்றில் அக்கறை கொண்ட மாதப் பத்திரிகை' என்று தெரிவித்துக் கொண்டது.

ஆரம்பம் முதலே, விமர்சனக் கட்டுரைகளுடன், சிறுகதைகளையும் யாப்பில்லாக் கவிதைகளையும் வெளியிடுவதில் ஆர்வம் காட்டியது 'எழுத்து'.

விமர்சனக் கட்டுரைகளும், இலக்கிய விமர்சனம் பற்றிய கருத்துரைகளும் அதிகம் பிரசுரிக்கப்பட்டுள்ளன. செல்லப்பா இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை என்ற ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட விரிவான கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். விமர்சனத்தில் சோதனை என்ற டி. எஸ். இலியட் கட்டுரையை மொழிபெயர்த்துத் தந்தார். அவற்றோடு, கமலாம்பாள் சரித்திரம் பற்றிய நீண்ட விமர்சனக் கட்டுரையையும், ராமாம்ருதம் கலைத்திறன்', 'மௌனியின் மனக் கோலம ஆகிய கட்டுரைத் தொடர்களையும் எழுதினார். இவை எல்லாம் சிறந்த இலக்கிய விமர்சனக் கட்டுரைகளாகும்.

‘ஜீவனாம்சம்' என்கிற சோதனை ரீதியான நாவலை செல்லப்பா எழுத்தில் தொடர்ந்து எழுதினார். அருமையான சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்.

மொழிபெயர்ப்பிலும் அவர் சோதனைகள் நடத்தினார். சரளமான இனிய நடையிலோ, எல்லோருக்கும் புரியக்கூடிய எளிய நடையிலோ மொழிபெயர்ப்புச் செய்வதன் வாயிலாக, ஆசிரியர்களின் எழுத்தாற்றலை வாசகர்களுக்கு உணர்த்த முடியாது. ஒவ்வொரு எழுத்தாளரின் நடை ஒவ்வொரு தினுசானது. அவரவர் தனித்தன்மையை எடுத்துக் காட்டுவதற்கு வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு செய்வதுதான் நியாயம் ஆகும் என்பது செல்லப்பாவின் கருத்து.

அதன்படி, ஹென்றி ஜேம்ஸ் எழுதிய 'புரூக்ஸ்மித்', ஆன்டன் செகாவின் 'கூஸ்பர்ரிஸ்', ஃப்ராங்க் ஓ கானரின் 'ஞானஸ்நானம்', வில்லியம் ஃபாக்னரின் 'கிரீர்ஸன்', ஜேம்ஸ் ஜாய்ஸின் 'எவலின்' போன்ற சிறந்த சிறுகதைகளை செல்லப்பா மொழிபெயர்த்தார்.

இவையும் மற்றும் சில கதைகளும் 'வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு' ஆக, மூல ஆசிரியனது உரைநடைப் போக்கிலேயே தமிழுக்கும் உரைநடையை இயைவிக்கும் ஒரு தோரணையில் அமைந்திருந்தன. அந்த மொழிபெயர்ப்பு நடை வாசகர்களைச் சிரமப்படுத்துகிற தமிழாக இருந்தபோதிலும், செல்லப்பா தன் சோதனையையும் கருத்தையும் மாற்றிக் கொள்ளவில்லை. -

பாரதியின் 'அக்னிக் குஞ்சு' கவிதைக்கு விரிவான விளக்கக் கட்டுரை எழுதியிருக்கிறார் அவர். தமிழ்ச் சிறுகதை குறித்து அநேக கட்டுரைகள் வெளியிட்டார்.

சிறுகதைகள் பற்றியும், உரைநடை குறித்தும் எழுத்து அதன் காலத்தில் பல்வேறு சிந்தனைகளைப் பிரசுரித்திருக்கிறது.

முதல் இதழிலிருந்தே க. நா. சுப்ரமண்யம் 'நல்ல தமிழ்ச் சிறுகதைகள்' என்று கட்டுரைகள் எழுதினார் இலக்கியத்தில் விஷயமும் உருவமும் பற்றி சிந்தனை வளர்த்தார், பாரதிக்குப் பின் என்ற தலைப்பில், வையாபுரிப் பிள்ளை, டாக்டர் சாமிநாதய்யர், மறைமலை அடிகள், திரு. வி. க. பற்றி க. நா. சு. எழுதியிருக்கிறார்.

வாழ்க்கை பற்றிய தத்துவ சிந்தனைகளைத் தொகுத்து க. சிதம்பர சுப்ரமண்யன் 'விண்ணும் மண்ணும்' என்ற தலைப்புடன் தொடர் கட்டுரை எழுதியுள்ளார்.

சி. கனகசபாபதி, பிச்சமூர்த்தி கவிதைகள் பற்றியும், புதுக்கவிதை சம்பந்தமாகவும், சங்க இலக்கியம் குறித்தும் ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட கட்டுரைகளை மிகுதியாக எழுதியிருக்கிறார்.

வெ. சாமிநாதன், தருமுசிவராமு ஆகியோரின் தீவிர சிந்தனைகளையும் எழுத்து அதிகம் பிரசுரித்துள்ளது. ந. முத்துசாமியின் சிறுகதைகளை வெளியிட்டது. மற்றும் பல திறமையாளர்களை அறிமுகம் செய்திருக்கிறது.

'எழுத்து' சாதனைகளில் புதுக்கவிதைக்கு அது ஆற்றிய பணியே முக்கியமாகக் கருதப்படுகிறது. யாப்பில்லாக் கவிதை 'புதுக்கவிதை’ என்று பெயர் ஏற்று, ஒரு இயக்கமாக வளர்ந்து பெருகுவதற்கு எழுத்து நல்ல முறையில் பணியாற்றியதை இலக்கிய ரசிகர்கள் நன்கு அறிவர். சி. மணி, தி. சோ. வேணுகோபாலன், வைத்தீஸ்வரன் முதலிய கவிஞர்களின் திறமை பிரகாசிப்பதற்கு எழுத்து தளம் அமைத்தது. பிச்சமூர்த்தி கவிதைகளை நிறையப் பிரசுரித்துள்ளது.

தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சாதனை புரிந்தவர்களை கௌரவிக்கும் முறையில் அது சிறப்பு மலர்கள் வெளியிட்டிருக்கிறது. எழுத்து 5-வது ஏடு கு.ப. ரா. நினைவு மலர் என்றும், 7-வது ஏடு புதுமைப்பித்தன் நினைவு மலர் எனவும் உருவாயின. பிறகு, பிச்சமூர்த்தி மணிவிழா சிறப்பு ஏடு என்றும் 'பி. எஸ். ராமையா மலர்’ என்றும் வெளிவந்தன. எழுத்து 117-வது ஏடு 'சங்கு சுப்ரமண்யத்தின் நினைவு ஏடு' ஆகப் பிரசுரிக்கப்பட்டது.

‘எழுத்து' தொடர்ந்து வெளியிட்ட 'எதற்காக எழுதுகிறேன்?', ‘என்ன படிக்கிறேன் ஏன்?' ஆகிய கட்டுரை வரிசைகள் ரசிகர்களுக்கு இனிய விருந்தாக விளங்கின.

ஈழத்து எழுத்தாளர்கள் சிலர் எழுத்தில் அவ்வப்போது எழுதிக் கொண்டிருந்தார்கள். ஈழத்தில் இலக்கிய முயற்சி குறித்தும், விமர்சன நோக்கு பற்றியும் கே. எஸ். சிவகுமாரன், முருகையன் போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

சி. சு. செல்லப்பா இலக்கியச் சிந்தனையிலேயே பொழுதுபோக்கும் இயல்புடையவர். சதா நினைப்பும் பேச்சும் அவருக்கு இலக்கிய விஷயமாகவே இருக்கும். ஆகவே 'எழுத்து' பத்திரிகை சகல இலக்கியப் பிரச்னைகள் குறித்தும், எழுத்தாளர் விவகாரங்கள் பற்றியும், எழுத்து உலக விசேஷங்களில் ஆர்வமும் அக்கறையும் காட்டி வந்தது. அது உண்மையான எழுத்தாளர் பத்திரிகையாகத் திகழ்ந்தது. எழுத்தாளர் சம்பந்தமான விஷயம் அல்லது விசேஷம், எங்கே என்ன நடந்தாலும் “எழுத்து' அதைக் குறிப்பிட்டு அபிப்பிராயம் கூறியது.

இவ்வாறு எழுத்தாளர் மாநாடு, சங்கம், இலக்கியமும் குழுக்களும், சாகித்திய அகாடமியும் பரிசும், இரண்டாவது உலகத் தமிழ் கருத்தரங்குமாநாடு பற்றி எல்லாம் காரசாரமான கருத்துக்கள் 'எழுத்'தில் எழுதப்பட்டுள்ளன.

இப்பேர்ப்பட்ட பிரச்னைகள் பற்றிய அபிப்பிராயங்களைப் பரிமாறிக் கொள்ளும் களம் ஆக எழுத்து அரங்கம் விளங்கியது.

தன் எண்ணங்களைச் சொல்வதற்காக செல்லப்பா வாடைக் காற்று என்ற பகுதியைப் பயன்படுத்தி வந்தார்.

இவ்விதமெல்லாம் இருந்தும்கூட, செல்லப்பா எதிர் பார்த்தது போல்- தமிழ்நாட்டு வாசகர்களிடம் அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்தது-நடைமுறையில் நிகழவில்லை. இலக்கிய ஈடுபாடு கொண்ட ரசிக வாசகர்கள் 2000 பேர் தேறுவார்கள் என்று அவர் நம்பினார். நானூறு-ஐநூறு பேர் கூட 'எழுத்து' வளரத் துணை புரியவில்லை.

ஒவ்வொரு ஆண்டு நிறைவின்போதும், இதைப்பற்றி ஆசிரியர் பக்கத்தில் அவர் எழுதிக் கொண்டுதான் இருந்தார். தரமான இலக்கிய வெளியீடுகளை-நல்ல புத்தகங்களை- பரப்பும் நோக்கத்துடன் எழுத்துப். புத்தக இலக்கியச் சங்கம் (Book Club) பற்றி அறிவித்தார். ஆர்வத்தோடு பிரச்சாரம் செய்தார். அதுவும் வெற்றிபெறவில்லை.

'எழுத்து பிரசுரம்' ஆரம்பித்து நல்ல புத்தகங்களை வெளியிட்டார். அவ்வெளியீடுகளைச் சுமந்து கொண்டு ஊர் ஊராகப் போய், மாவட்டங்கள்தோறும் விற்பனை செய்யும் முயற்சியில் தீவிரமாக முனைந்தார். செல்லப்பாவின் இலக்கிய வேகமும், வைராக்கியமும், செயல்துணிவும் பிரமிக்கச் செய்பவை, போற்றுதலுக்கு உரியவை.

ஆயினும், 'எழுத்து' சோர்வுற்று வந்தது. 9¼ ஆண்டுகளுக்குப் பிறகு-பத்தாம் ஆண்டின் முதல் ஏடு (1968, ஏடு 112 )விலிருந்து 'எழுத்து' காலாண்டு ஏடு ஆக மாற்றப்பட்டது.

அப்படியும் அது வெற்றிகரமாக வளர இயலவில்லை. ஒரு தனி மனிதனின் பிடிவாதமும் உழைப்பும் கருத்து ஆழமும் கனமும் கொண்ட இலக்கியப் பத்திரிகை’ யை நீடித்து வாழ வைக்கமுடியாமல் போயிற்று. பெரும் தொகை நஷ்டம்தான் எழுத்து ஆசிரியர் கண்ட பலன்.

பன்னிரண்டாம் ஆண்டில், 119 வது ஏட்டுடன் (1970 ஜனவரி-மார்ச்) ‘எழுத்து' நின்று விட்டது.