தமிழில் சிறு பத்திரிகைகள்/சாந்தி
9. சாந்தி
லட்சிய வேகத்தோடும் மிகுந்த நம்பிக்கையுடனும் பிறந்த மற்றுமொரு இலக்கியப் பத்திரிகை ‘சாந்தி'.
இது தலைநகரமான சென்னையிலிருந்து வெளிவரவில்லை. திருநெல்வேலியில் தோன்றியது. இதை ஆரம்பித்து நடத்தியவர் தொ. மு. சி. ரகுநாதன்.
ரகுநாதன் பத்திரிகை ஆசிரியராகச் சென்னையில் பல வருஷ அனுபவம் பெற்றிருந்தார். முதலில் 'முல்லை' என்ற 'மாதம் ஒரு புத்தக'த்தின் ஆசிரியராக இருந்தார்.
அப்போது அவருடைய இலக்கிய நோக்கும் கொள்கைகளும் வேறாக இருந்தன. 'முல்லை'யில் வந்த கதைகளும், கட்டுரைகளும் புத்தக மதிப்புரைகளும், வர்ணச் சித்திரங்களும் ரகுநாதனின் முதல் கால கட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப இருந்தன.
“இலக்கியத்தில் புதுமையும் தனிமையும் உண்டாக்க விரும்புபவர்களுக்கு ஒரு நற்சகுனம், நம்பிக்கை” என்று கொடிவீசி வளர முயன்ற ‘முல்லை' யில் தான், புதுமைப்பித்தன் எழுதிய விபரீத ஆசை வெளி வந்தது. லா. ச. ராமாமிர்தம், எம். வி. வெங்கட்ராம் கதைகளும் வந்தன. கா. ஸ்ரீ. ஸ்ரீ. ரசமான ஒரு நெடுங்கதை எழுதினார். இலக்கியத்தில் ஆபாசம் என்ற கூச்சல் அர்த்தமற்றது, போலியானது, தமிழ் இலக்கியத்துக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது என்று விரிவாகவும் விளக்கமாகவும் கு. அழகிரிசாமி கட்டுரை எழுதினார். ஆண்-பெண் உறவு பற்றிய ஞானம் தெளிவாகக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியத்தை விளக்கியும் கு. அ. இடைசைப் புலவன் என்ற பெயரில் ஒரு கட்டுரை எழுதினார்.
இப்படி மறுமலர்ச்சி வேகத்தில் வளர முயன்ற 'முல்லை' விரைவிலேயே நின்றுபோயிற்று. அழகிரிசாமியும் ரகுநாதனும் 'சக்தி' மாத இதழில் சில வருடங்கள் பணிபுரிந்தார்கள் . 'சக்தி' நின்றுவிட்டதும் ரகுநாதன் திருநெல்வேலி சேர்ந்தார்.
1954 டிசம்பரில் 'சாந்தி' தோன்றியது. இடைக்காலத்தில் ரகுநாதன் மார்க்ஸியக் கண்ணோட்டமும், கம்யூனிஸப் பற்றுதலும் கொண்ட 'முற்போக்கு இலக்கியவாதி'யாக வளர்ந்திருந்தார்.
'சரஸ்வதி' க்கு முந்தித் தோன்றிய முற்போக்கு இலக்கிய இதழாக ‘சாந்தி' விளங்கியது ("சரஸ்வதி 1955 மே மாதம்தான் பிறந்தது).
'சொத்தைக் கருத்துக்களும் சொற்சிலம்பங்களும் மிகுந்த இலக்கியப் போலிகளை இனம் காட்டவும் வெள்ளிக்காசுக்கும் விதேசியச் சிறுமைக்கும் இதயத்தையே எடைபோட்டு விற்றுவிட்ட எழுத்துலகத் துரோகிகளை அம்பலப்படுத்தவும், நமது பண்பாட்டையும் பாஷைவளத்தையும் இழிவுபடுத்தும் நாசக் கற்பனைகளை வேரறுக்கவும், தெம்பும் திராணியும், இளமையும், புதுமையும் நிறைந்த இலக்கிய சிருஷ்டிகளை வரவேற்கவும் வளர்க்கவும் புனித சங்கல்பம் பூண்டு 'சாந்தி' தோன்றுவதாக' அறிவிக்கப்பட்டது.
முற்போக்குச் சிறுகதைகளுக்கு முதலிடம் அளிக்கப்பட்டது. ரகுநாதன் நெஞ்சிலே இட்ட நெருப்பு என்றொரு தொடர்கதை எழுதினார்
புதுமைப்பித்தன் கடிதங்கள் சில பிரசுரமாயின. புதுமைப்பித்தன் நினைவுச் சிறுகதைப் போட்டி ஒன்றை 'சாந்தி' நடத்தியது. அதில் சுந்தர ராமசாமியின் தண்ணீர் என்ற கதை முதல் பரிசு பெற்றது.
சுந்தர ராமசாமி, ப. சீனிவாசன், டி. செல்வராஜ் ஆகியோர் அடிக்கடி சிறுகதைகள் எழுதினார்கள். மலையாளச் சிறுகதைகள் பல சு. ரா. தமிழாக்கமாக வெளிவந்தன.
அப்பாஸ், கிருஷ்ணசந்தர், யஷ்பால், முல்கராஜ் ஆனந்த் முதலியோரின் இந்திச் சிறுகதைகள் இடம் பெற்றன.
நா. வானமாமலை, சாமி. சிதம்பரனார், எஸ். ராமகிருஷ்ணன் கட்டுரைகளை சாந்தி பிரசுரித்தது. கட்டபொம்மு, மருதுபாண்டியர் போன்ற நாட்டுப் பாடல்கள் குறித்து ரகுநாதன் விரிவான கட்டுரைகள் எழுதினார். தி. க. சி. புத்தக விமர்சனம் எழுதிவந்தார்.
1955 டிசம்பரில் 'சாந்தி' யின் பன்னிரண்டாவது இதழ் ஆண்டு மலர் என்று வெளிவந்தது. இந்த மலர் இலக்கியத் தரமான கட்டுரைகள், கவிதைகளைக் கொண்டிருந்தது.ப. ஜீவானந்தம், நா. வானமாமலை, எஸ். ராமகிருஷ்ணன், சாமி சிதம்பரனார், க. கைலாசபதி, எச். எம். பி. மொஹிதீன் கட்டுரைகள்; சுந்தர ராமசாமி, வல்லிக்கண்ணன், டி. செல்வராஜ், அகிலன், கி. ரா. ரகுநாதன் கதைகள்; கே. சி. எஸ். அருணாசலம், குயிலன், திருச்சிற்றம் பலக் கவிராயர் கவிதைகள்; தி. க. சி. எழுதிய நாடகம்; இவற்றுடன், கதகளி பற்றி எஸ். சிதம்பரம் எழுதிய நீண்ட கட்டுரை -( படங்களுடன்) இம்மலரின் உள்ளடக்கமாகத் திகழ்ந்தன.
இரண்டாவது ஆண்டில் இரண்டே இதழ்கள்தான் வெளிவந்தன. 1965 ஏப்ரலில் சாந்தி நின்றுவிட்டது.
நல்ல முற்போக்கு இலக்கியப் பத்திரிகை என்ற பெயரை ‘சாந்தி' பெற்றதே தவிர, அது எழுத்துலகில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இதுவரை ‘சிறு பத்திரிகைகள் பலவும்- 'மணிக்கொடி'யிலிருந்து ‘சாந்தி' முடிய- உண்மையில் இந்நாட்களில் சிறு பத்திரிகை என்றதும் என்ன எண்ணம் எழுகிறதோ அந்தக் கருத்தில் நடத்தப்பட்டவை அல்ல என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும்.
இப்போது ‘சிறு பத்திரிகை' என்றால் குறித்த ஒரு கொள்கைக்காக அல்லது நோக்கத்துக்காக, ஏறக்குறைய ஒத்த மனோபாவம் கொண்ட மிகச் சிலரை வாசகர்களாகக் கொண்டு, வெகு குறைவான பிரதிகளே அச்சடிக்கப்பட்டு (இருநூறு அல்லது முந்நூறு), சந்தாதார்களை மட்டுமே நம்பிப் பிரசுரமாகும் பத்திரிகை, 'தனிச் சுற்றுக்கு மட்டும்’ (For Private circulation only) என்ற நோக்கில் வெளிவருவது என்று பொருள் கொள்ளப்படுவது இயல்பாகி விட்டது.
மணிக்கொடி, கலாமோகினி, கிராம ஊழியன், தேனீ, சரஸ்வதி, சாந்தி போன்ற பத்திரிகைகள் இந்நோக்கில் பார்த்தால், சிறு பத்திரிகைகள் ஆகமாட்டா.
இவை எல்லாம் சந்தாதார்களை மட்டுமே நம்பியிருக்கவில்லை. பத்திரிகைச் சந்தையில் விலை போக வேண்டும் என்றும் திட்டமிட்டு முயன்றன. தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் ஏஜெண்டுகள் நியமித்து, விற்பனையை வளர்ப்பதில் ஆர்வம் காட்டின. வியாபார ரீதியான ஏஜெண்டு இல்லாத ஊர்களில் தெரிந்தவர்களோ, நண்பர்களோ, வேண்டியவர்களோ ஏஜெண்டு மாதிரி செயல்பட்டனர். பத்து அல்லது இருபது பிரதிகளைப் பெற்று, விற்பனை செய்து, உரிய பணத்தை அனுப்பிக் கொண்டிருந்தனர்.
இன்றைய சிறு பத்திரிகைகள் போல் இவை மிகவும் குறைச்சலான பக்கங்களே கொண்டிருந்ததில்லை. 'பெரிய பத்திரிகைகள்' (வாணிபப் பத்திரிகைகள் ) மாதிரியே பக்க அளவில் கனமாகவும் (80 அல்லது 96; சில சமயம் அதுக்கும் மேலாகவும்) இருந்தன (64 பக்கங்களுக்குக் குறைந்ததில்லை). வாசகர்களை ஈர்க்க வேண்டும் என்று அவ்வப்போது போட்டோக்கள், சினிமா விஷயங்கள் முதலியனவும் சேர்த்து வந்தன. ஆர்ட் பேப்பர் அட்டையும், அட்டைப் படமும் கொண்டிருந்தன.
‘மணிக்கொடி' ஆயிரம் பிரதிகள் வரை அச்சிடப்பட்டிருக்கலாம். ‘கலாமோகினி' 700 முதல் ஆயிரம் வரை ஏற்ற இறக்கம் பெற்றிருக்கலாம், 'கிராம ஊழியன்' அதிகமாக 800 பிரதிகளும், குறைந்த காலத்தில் 600 பிரதிகளும் அச்சாகி வந்தது. இதர பத்திரிகைகளும் இதே தரத்தவைதான்.
ஆனாலும், சிறு பத்திரிகை என்று பேசப்படுகையில், இதுவரை கூறப்பட்ட பத்திரிகைகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன. காரணம், தன்மையினால்- செயலாற்றலால்- அவை சிறு பத்திரிகைகளாகவே இயங்கின.
அவை ஜனரஞ்சகமான விஷயங்களைப் பிரசுரிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை. தரம் குறைந்த எழுத்துகளுக்கு இடம் தந்ததில்லை. சிந்தனைகளுக்கும் உணர்ச்சிக்கும், புதுமைக்கும் சோதனைகளுக்கும் இடமளித்தன. புதிய திறமையாளர்களை வரவேற்று அங்கீகரித்தன. இலக்கிய நோக்கிற்கு வரம்பு கட்டிக்கொள்ளாமல், உலகளாவிய பரந்த நோக்குடன் செயல்பட்டன.
இத்தகைய பத்திரிகைகள் ஏன் நீடித்த ஆயுளுடன் வாழமுடிந்த தில்லை-ஏன் அல்பாயுசு மரணம் பெற்றன என்று அவ்வப்போது கேள்வி கேட்கப்படுகிறது.
போதிய பொருளாதார பலம் இல்லாமல் போனதுதான் முதல் பெரும் காரணம். அவற்றின் விற்பனைக்குப் பொறுப்பேற்ற அன்பர்கள் நாணயமாக நடந்து கொள்ளாதது மற்றொரு காரணம். பத்திரிகைப் பிரதிகள் விற்பனையான போதிலும், விற்பனையாளர்கள் ஒழுங்காகப் பணம் அனுப்பி உதவுவதில்லை. அதனால் பத்திரிகையின் பொருளாதாரம் மேலும் அதிகம் பாதிக்கப்பட்டது.
இதனால்தான் உண்மையான சிறு பத்திரிகை, விற்பனையாளர்களை எதிர்பார்ப்பதில்லை. சந்தாதார்களையே தன்பலமாகக் கொள்ள விரும்புகிறது . 200 அல்லது 300 பிரதிகள் அச்சிட்டாலே போதும்; அதனால் அதிக லாபம் இல்லாவிட்டாலும் நஷ்டம் அதிகம் ஏற்படாது என்று கருதுகிறது.
இப்படி திட்டமிட்டுத்தான் சி. சு. செல்லப்பா விமர்சனத்துக்கென்று ஒரு பத்திரிகை ஆரம்பிக்கத் துணிந்தார். அவர் ஆரம்பித்த 'எழுத்து' தான், உண்மையான- அதன் முழு அர்த்தம் உடைய- முதலாவது சிறு பத்திரிகை ஆகும்.