தமிழில் சிறு பத்திரிகைகள்/சரஸ்வதி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

8. சரஸ்வதி


தேசிய விடுதலைப் போராட்டம், சமூக சீர்திருத்த இயக்கம் இவற்றைச் சார்ந்து 1930 களில் மொழி மறுமலர்ச்சி வேகமும் ஏற்பட்டது முன்னரே கூறப்பட்டிருக்கிறது.

பாரதி காட்டிய பாதையில் முன்னேறி, தமிழ் இலக்கியத்தில் புது வளர்ச்சி கண்டு, மொழியை வளம் செய்ய முற்பட்டவர்கள் மறுமலர்ச்சி இலக்கியவாதிகள்.

1940 களின் பிற்பகுதியிலிருந்து, தமிழ் எழுத்தாளர்களிடையிலும் தமிழ்ப் பத்திரிகை உலகிலும் வேறு இரண்டு நோக்குகளும் போக்குகளும் வளரத் தொடங்கின.

ஒன்று 'திராவிட இயக்க' வளர்ச்சி, பார்ப்பனிய எதிர்ப்பு, பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு, வடவர் ஆதிக்க எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, மத ஒழிப்பு: மூடநம்பிக்கைகள், வறுமை, விபசாரம், பெண் அடிமைத்தனம் ஆகியவற்றின் ஒழிப்பு: இந்தி எதிர்ப்பு: தமிழ்-தமிழர் இன உயர்வு, சமூக சீர்திருத்தம் முதலியவற்றை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்ட ‘திராவிட இயக்க' மனோபாவம் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இத்தகைய இன உணர்வுடன் தமிழில் பத்திரிகைகள் தோன்றியது பற்றி முன்பகுதியில் குறித்திருக்கிறேன்.

மற்றது, முற்போக்கு இலக்கிய நோக்கு இது 'வர்க்க உணர்வை’ வலியுறுத்தும் பொருளாதார தத்துவப் பார்வையை - மார்க்சியக் கண்ணோட்டத்தை- அடிப்படையாகக் கொண்டது. கம்யூனிஸத்தையும், கம்யூனிஸ்டுக் கொள்கைகளையும் சிலாகிப்பது, முதலாளித்துவ எதிர்ப்பு, முதலாளி வர்க்க ஒழிப்பு, பாட்டாளி வர்க்க உயர்வு, பொருளாதார சமத்துவம் முதலியவற்றை லட்சியமாகக் கொண்டது. .

இந்த நோக்கை கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகைகள் 'ஜனசக்தி' ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்தது. 'ஜனயுகம்', 'புதுமை இலக்கியம்' போன்ற சில பத்திரிகைகள் தோன்றி, சிறிது காலம் பணிபுரிந்து விட்டு மறைந்து போயின.

முற்போக்கு இலக்கிய மனோபாவம் தமிழ்நாட்டில் சிறிது சிறிதாகப் பரவி வந்தது. என்றாலும், முற்போக்கு இலக்கியப் பத்திரிகை என்று எதுவும் இல்லாமலிருந்தது.

அதனால், வ. விஜயபாஸ்கரன் அப்படி ஒரு இலக்கியப் பத்திரிகை தொடங்க முன்வந்தார்.

பத்திரிகைத் துறையில் நல்ல அனுபவம் பெற்றவர் அவர். 1950-51 -ல் அவரே 'விடி வெள்ளி' என்ற பத்திரிகையை நடத்தி, நிறுத்தியிருந்தார். அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்னைகளை அலசி ஆராய்ந்த வாரப் பத்திரிகை அது. .

பிறகு, அவர் 'ஹனுமான்' வாரப் பத்திரிகையின் கடைசி கால ஆசிரியராகப் பணிபுரிந்தார். அத்துடன் ‘சக்தி' யின் துணை ஆசிரியராகவும் பொறுப்பு வகித்து அனுபவம் கண்டவர். -

இருப்பினும், விஜயபாஸ்கரன் துணிந்து ஒரு இலக்கியப் பத்திரிகை நடத்த முன்வந்தார். 1955 மே மாதம் ‘சரஸ்வதி' யின் முதல் இதழ் வந்தது.

கம்யூனிஸ்ட் ஆன விஜயபாஸ்கரன் நடத்துவதால் கம்யூனிஸ்ட் பத்திரிகை என்ற பெயர் புதிய பத்திரிகைக்கு ஏற்பட்டு விடக்கூடாது; அரசியல் நிறம் கொஞ்சமும் தெரியாத கலை இலக்கியப் பத்திரிகைதான் என்பது தெளிவாகத் தெரியும்படியான- 'கலைமகள்' போன்ற ஒரு பெயராக இருக்க வேண்டும் என்று அவர் கருதினார். இந்திய முற்போக்கு எழுத்தாளர்களின் முதல்வரும் முன்னோடியுமான பிரேம்சந்த் நடத்திய 'சரஸ்வதி' யின் பெயரையே அவர் தனது பத்திரிகைக்கும் தேர்ந்தெடுத்தார். மேலும், அது அவருடைய மனைவியின் பெயராகவும் இருந்தது.

மேலை நாட்டில் வளர்ந்து வரும் புத்தம் புதிய கருத்துக்களைத் திரட்டித் தமிழர்களுக்குத் தருவது, மறைந்து வரும் நமது கலைச் செல்வங்களைத் தேடி எடுத்து வெளியிடுவது, தமிழில் சிறந்த சிறுகதைகள், கவிதைகள் வெளிவருவதற்கு ஆவன செய்வது- இவை 'சரஸ்வதி' ஆசிரியரின் நோக்கங்களாக இருந்தன.

பாராட்டத்தகுந்த வகையில் 'சரஸ்வதி' இவற்றை நிறைவேற்றவும் செய்தது.

அயல்நாட்டுச் சிறுகதைகளின் தமிழாக்கம், சிறந்த உலக நாவல்கள் பலவற்றின் சுருக்கம், சுயமாக எழுதப்பெற்ற அருமையான சிறுகதைகள், சிந்தனைக்கு வளம் சேர்க்கும் கருத்துச் செறிவுள்ள கட்டுரைகள், தத்துவம், கலாச்சாரம், விஞ்ஞானம், பொருளாதாரம் சம்பந்தமான பலப்பல கட்டுரைகள், நல்ல கவிதைகள்-இப்படி எவ்வளவோ விஷயங்களை 'சரஸ்வதி' அதன் காலத்தில் வழங்கியிருக்கிறது.

தலைசிறந்த ஒலிப்பதிவாளர்களில் ஒருவரான நிமாய்கோஷ் திரைப்படத் தொழில் பற்றிக் கட்டுரைகள் எழுதினார். சதுரங்கம் குறித்தும், போட்டோக் கலை பற்றியும் விளக்கக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

எழுத்தாளர் ஜெயகாந்தன் வளர்ச்சிக்கு 'சரஸ்வதி' பெரிதும் உதவியது. சுந்தர ராமசாமி, வல்லிக்கண்ணன், கிருஷ்ணன் நம்பி மற்றும் இலங்கை எழுத்தாளர்கள் டொமினிக் ஜீவா, கே. டானியல், காவலூர் ராசதுரை முதலியோரின் சிறந்த கதைகள் பலவற்றை 'சரஸ்வதி' பிரசுரித்திருக்கிறது.

தகழி சிவசங்கரப் பிள்ளையின் 'தோட்டியின் மகன்' நாவல் சுந்தர ராமசாமியின் தமிழாக்கமாகத் தொடர்ந்து வந்தது. சுந்தர ராமசாமியின் 'புளியமரம்' நாவலின் முதல் பாதி வெளிவர வசதி செய்தது. வல்லிக்கண்ணன் எழுதிய ‘அடிவானம்' நாவலின் ஒரு பகுதியை வெளியிட்டுள்ளது.

க. நா. சுப்ரமணியம், சி. சு. செல்லப்பா, வல்லிக்கண்ணன், ரகு நாதன், ஜெயகாந்தன், எஸ். ராமகிருஷ்ணன், ஆர். கே. கண்ணன், சாமி சிதம்பரனார் ஆகியோர் 'சரஸ்வதி'க்காக உற்சாகத்துடன் பணி புரிந்தார்கள்.

இலக்கியவாதிகளுக்கு ஆர்வமூட்டிய விவாதங்களை சரஸ்வதி அவ்வப்போது வளர்த்தது. புதுமைப்பித்தன் இலக்கியம் பற்றி ஒரு விவாதம் சாகித்திய அகாடமி பரிசு அளிக்கிற போக்கு பற்றிய காரசாரமான கருத்துக்கள், மொழி வெறியர்கள் மற்றும் குறுகிய நோக்குடைய பண்டிதர்கள் போக்கை எதிர்த்து சூடான கட்டுரைகள், 'சென்னைக்கு வந்தேன்’ என்ற தலைப்பில் அநேக எழுத்தாளர்களது அனுபவங்கள், ‘நானும் என் எழுத்தும்' என்று பலரது எண்ணங்கள், இலக்கியத்தில் ஆபாசம் என்பது குறித்துக் கண்டனங்களும் மறுமொழிகளும்- இவ்வாறு, இலக்கியப் பிரியர்களுக்கு விருந்து அளித்திருக்கிறது.

‘நமது எழுத்தாளர் வரிசை' என்று எழுத்தாளர்களின் படத்தை அட்டையில் வெளியிட்டு, அவர்களைப் பற்றிய கட்டுரையை உள்ளே பிரசுரித்தது.

சிறந்த 'ஆண்டு மலர்' களைத் தயாரித்து இலக்கியப் பணி புரிந்துள்ளது.

'புத்தக மதிப்புரை' ப் பகுதி மூலம் ரசிகர்களுக்கு பலப்பல புத்தகங்களை அறிமுகப்படுத்தியது.

‘சரஸ்வதி' அதன் காலத்தில், பல நல்ல எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு அளித்தது. புதிய எழுத்தாளர்கள் ஏற்றம் பெற இடம் தந்தது. புதிய முயற்சிகளுக்கும் சோதனைகளுக்கும் ஊக்கம் அளித்தது. ஈழத்து எழுத்தாளர்களுக்கும் தமிழ் நாட்டு வாசகர்களுக்கும் தொடர்பு ஏற்படுத்தியது. தத்துவ ரீதியாகவும் இலக்கிய ரீதியாகவும் பிறமொழி இலக்கியங்களையும் நமது இலக்கியங்களையும் விமர்சனம் செய்தது. பல்வேறு எழுத்தாளர்களின் கருத்து மோதல்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. சிறுகதை வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றியுள்ளது.

ஆகவே, புதுமை இலக்கிய யுகத்தில் 'சரஸ்வதி' ஒரு சகாப்தத்தைத் தோற்றுவித்து விட்டது.

ஆனாலும், பொருளாதார ரீதியில் தோல்வி மேல் தோல்வியே கண்டது. மூன்றாவது ஆண்டு முதல், இத்துறை வெற்றிக்காக விஜய பாஸ்கரன் ஏதேதோ திட்டங்கள் வகுத்தும் அறிவிப்புகள் விடுத்தும் பயனில்லை. நஷ்டம் வளர்ந்து கொண்டே போயிற்று. தாங்கமுடியாத அளவு நஷ்டம் பெருகியது. அவர் 'சரஸ்வதி' யை நிறுத்திவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

1962-ம் வருஷம் நான்காவது இதழுடன் (ஜூன் மாதம்) சரஸ்வதி நின்று விட்டது.

'சரஸ்வதி' யின் விரிவான வரலாற்றை வல்லிக்கண்ணன் எழுதிய சரஸ்வதி காலம் என்ற நூல் விவரிக்கிறது.