உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழில் சிறு பத்திரிகைகள்/ஒரு விளக்கம்‌

விக்கிமூலம் இலிருந்து

26. ஒரு விளக்கம்


மறுமலர்ச்சி இலக்கியம் என்ற பிரயோகம் 1930 களிலும் 40 களிலும் தமிழ்நாட்டில் அதிகச் செல்வாக்கு பெற்றிருந்தது.

'மணிக்கொடி' தமிழ்நாட்டின் முதலாவது மறுமலர்ச்சி இலக்கியப் பத்திரிகை என்ற மதிப்பை அடைந்திருந்தது. மணிக்கொடி எழுத்தாளர்கள் தங்களை 'மறுமலர்ச்சி எழுத்தாளர்கள்' என்று பெருமையுடன் அறிவித்தார்கள்.

தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் மகாகவி கப்பிரமணிய பாரதியார். அவர் படைப்பிலக்கியத்தில் புதிய சுவை, புதிய பொருள், புதிய வளம், புதிய சொற்கள் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டு எழுதினார். எளிமையும் இனிமையும் சேர்த்து மொழியை உயிரும் உணர்வும் உள்ளதாக ஆக்கினார். பழகு தமிழ்ச் சொற்களைப் படைப்புகளில் கலந்து எழுத்துக்குப் புதிய அழகும் வேகமும் தந்தார்.

பாரதியாருக்கு முற்பட்ட காலத்தில் தமிழ் இலக்கியம் பண்டிதர்களின்- மெத்தப் படித்த மேதாவிகளின்-தனி உடைமையாகக் கருதப்பட்டு வந்தது. பண்டிதர்கள் கம்பனும் திருவள்ளுவரும்தான் தமிழ் மொழியின் 'கதி' என்றும், கம்பராமாயணமும் திருக்குறளும்தான் மொழிக்கு வளம் அளிக்கும் இலக்கியம் என்றும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அந்தக் குறுகிய நோக்கிற்கு மாற்று கண்டவர் பாரதியார். எனவே அவரை இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என்றும் 'பொன் ஏர் பூட்டிய முதல்வன்' என்றும், தங்களுக்கு முன்னோடி என்றும் மணிக்கொடி எழுத்தாளர்களும் அவர்கள் காட்டிய பாதையில் முன்னேற முற்பட்ட மறுமலர்ச்சி எழுத்தாளர்களும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.

வெகுநாட்கள் வரை பண்டிதர்கள் பாரதியாரைக் கவிஞராகவும், அவருடைய படைப்புக்களைக் கவிதைகளாகவும் அங்கீகரித்தாரில்லை. அதேபோல மறுமலர்ச்சி இலக்கியத்தையும் மறுமலர்ச்சி எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் பழிப்பதையும் பரிகசிப்பதையுமே தங்கள் முக்கிய வேலையாகக் கொண்டிருந்தார்கள்.

‘தமிழுக்குக் கதி கம்பராமாயணமும் திருக்குறளும்தான் என்ற கருத்தைப் பிரசாரம் செய்து கொண்டிருந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர் ரா. பி. சேதுப்பிள்ளை. அவர் மறுமலர்ச்சி இலக்கியப் போக்கை எதிர்த்தவர்களுள் ஒருவராகவும் இருந்தார். 'மறுமலர்ச்சி என்று சொல்வதே தவறானது. ஒருமுறை மலர்ந்தது மாளுமே தவிர மறுபடியும் மலராது. எனவே, மறுமலர்ச்சி எனக் கூறுவது ஆகாசத் தாமரை என்பது போலாம். அவ்விதம் எதுவும் கிடையாது என்பதனால், மறுமலர்ச்சி என்ற பெயரால் இன்றைய எழுத்தாளர்கள் செய்து கொண்டிருப்பது தமிழ் மாள்ச்சிதான்-தமிழைச் சாகடிக்கிற வேலைதான் என்று அவர் முழக்கம் செய்து வந்ததை ஒரு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

பண்டிதர்கள் இலக்கியம் என்று குறிப்பிட்டு மொழியின் வளர்ச்சியைத் தேங்க வைத்து, வளம் குறையச் செய்து கொண்டிருந்தார்கள். இது புராதனப் போக்கு.

இதற்கு மாறுபட்ட வளமான போக்கு மறுமலர்ச்சி இலக்கியப் பணி.

செய்யுள்கள் ( பாடல்கள் ), காவியங்கள் மற்றும் அவை பற்றிய விரிவுரை, விளக்கங்கள், ஆய்வுரைகள்தான் இலக்கியம் ஆகும் என்று பண்டித மனப்பான்மை உடையவர்கள் சாதித்துக் கொண்டிருந்தார்கள். 'இலக்கியப் பத்திரிகைகள்' இத்தகைய விஷயங்களையே பிரசுரித்து வந்தன.

இனிய எளிய கவிதைகளும், சிறுகதைகளும், நாவல்களும் இலக்கியம் ஆக முடியும்-ஆகும்-என்று வற்புறுத்தினார்கள் மறுமலர்ச்சி எழுத்தாளர்கள். அத்தகைய படைப்பு முயற்சிகளில் ஈடுபட்டார்கள்.

ஆற்றலும் ஆர்வமும் பெற்ற இவ்வகைப் படைப்பாளிகளுக்குச் சிறு பத்திரிகைகளே உரிய மேடைகளாகத் துணை நின்றன.

கால ஓட்டத்தில், மறுமலர்ச்சி என்ற சொல்லின் மீது அரசியல் சாயம் பூசப்பட்டது.

சுயமரியாதை, பகுத்தறிவு வாதம், தமிழ் இன உணர்வு முதலியவற்றைப் பிரசாரம் செய்துவந்த திராவிடக் கட்சியின் மேடைகளிலும் ஏடுகளிலும் சி. என். அண்ணாதுரை தமிழ் இன மறுமலர்ச்சி, தமிழ்ப் பண்பாட்டு மறுமலர்ச்சி, தமிழர் சமுதாய மறுமலர்ச்சி என்றெல்லாம் நாவலிக்கலானார். 'எது மறுமலர்ச்சி?' என்று ஒரு சிறு புத்தகமும் எழுதி, கொள்கை முழக்கம் செய்தார்.

'ரினெய்லான்ஸ் லிட்டரேச்சர்' என்ற தன்மையில் மறுமலர்ச்சி இலக்கியம் என வழங்கி வந்த பிரயோகம் மறைந்து போயிற்று. தற்கால இலக்கியம் வெறுமனே 'இலக்கியம்' என்றே குறிக்கப்படுவதாயிற்று. சிறுகதை, நாவல், கவிதைகள், சுயசிந்தனைக் கட்டுரைகள் முதலியன ‘படைப்பிலக்கியம்' என்று பேசப்படலாயின.

1940 களில் 'முற்போக்கு இலக்கியம்' என்ற குரல் எழுந்தது. இது அரசியல் கட்சி சார்புடையதாகவே அமைந்தது. இப்போதும்கூட முற்போக்கு இலக்கியம் என்றால் கம்யூனிஸ்ட் சார்புடைய எழுத்துக்கள் என்று பொருள் கொள்வதே இயல்பாக இருக்கிறது.

சமூக உணர்வோடும்- சமுதாயப் பார்வையோடும்-மனிதாபிமானத்தோடும் (மனித நேயத்துடனும் ) எழுதப்படுகிற எழுத்துக்கள் பொதுவாக முற்போக்கு இலக்கியம் என மதிக்கப்படலாம்.

ஆனாலும், முற்போக்கு இலக்கிய ஆதரவாளர்கள் அத்துடன் திருப்தியடைய மாட்டார்கள். மார்க்ஸிய தத்துவ நோக்கில் சமூகப் பிரச்னைகளைக் கவனித்து-வரலாற்று அடிப்படையில் உண்மை ஆதாரங்களைச் சிந்தித்து- வளமான எதிர்காலத்துக்கு வர்க்க உணர்வோடு விடுதலை மார்க்கமும் நம்பிக்கை ஒளியும் காட்டக் கூடியதுதான் முற்போக்கு இலக்கியம் என வலியுறுத்துவர்.

இத்தன்மையில் முதன் முதலில் வழிவகுத்துக் காட்டியது 'ஜனசக்தி' பத்திரிகை ஆகும். அதன் வழியில் லோகசக்தி, நவசக்தி, புதுயுகம் போன்ற அநேக சிறு பத்திரிகை கம்யூனிஸக் கொள்கைகளையும் முற்போக்கு இலக்கியத்தையும் பரப்பப் பாடுபட்டன, 1940 களில்.

அவை எல்லாம், குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளை அல்லது படைப்புகளை நாட்டுக்கும் மொழிக்கும் தந்துவிடவில்லை.

கவிஞர் தமிழ் ஒளியும் தோழர் கோவிந்தன் என்பவரும் முற்போக்கு இலக்கியத்தை வளர்க்கவும் வளம் செய்யவும் 'புதுமை இலக்கியம்' என்றொரு பத்திரிகையை ஆரம்பித்தார்கள், 1949- ல், அது இரண்டு இதழ்களோடு மறைந்து போயிற்று.

ஐம்பதுகளில் கவிஞர் கே. சி. எஸ். அருணாசலம் 'நீதி' என்ற பத்திரிகையை நடத்தினார். பொள்ளாச்சியிலிருந்து வெளிவந்த இந்த மாதப் பத்திரிகை ஓரளவு கவனிப்பைப் பெற்றிருந்தது. ஆயினும் குறுகிய காலமே வாழ்ந்தது.

இப்படி, வெற்றி பெறாத பல முயற்சிகளுக்குப் பிறகு சென்னையில் 'சரஸ்வதி' தோன்றியது. 1955 ல், ஆசிரியர் : வ. விஜயபாஸ்கரன். இலக்கியப் பத்திரிகை என்ற தன்மையில் பல சாதனைகள் புரிந்து, தனக்கெனத் தனி வரலாறு படைத்துக் கொண்ட சரஸ்வதி ஏழு வருடங்கள் நடந்தது (இப் பத்திரிகை குறித்து இத் தொடரில் முன்பே எழுதப்பட்டு விட்டது).

தொ. மு. சி. ரகுநாதன் 'சாந்தி' என்ற பெயரில் முற்போக்கு இலக்கியப் பத்திரிகை ஒன்றை நடத்தினார். 1955- ல் திருநெல்வேலியிலிருந்து வெளிவந்த இம் மாசிகை ஒரு வருடமும் சில மாதங்களுமே உயிரோடிருந்தது. விந்தன் நடத்திய 'மனிதன்' என்ற மாசிகையும் முற்போக்கு இலக்கிய இதழாகவே வந்தது.

'சரஸ்வதி' நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இலக்கியப் பத்திரிகையாக ப. ஜீவானந்தம் 'தாமரை' யைத் துவக்கி வைத்தார்.