உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழில் சிறு பத்திரிகைகள்/மானுடம்‌

விக்கிமூலம் இலிருந்து

25. மானுடம்



'கலை இலக்கிய உலகில் பூத்தது' என்று கூறிக்கொண்டு திருச்சி யில் 1979- ல் தோன்றியது 'மானுடம்'. கனமான விஷயங்களைத் தருவதில் அக்கறை கொண்ட இந்த இரு மாதம் ஒரு முறை சிற்றேடு தனது இரண்டாவது இதழில் கலைப்படைப்பு என்பதை பசியைப் போல் ஒரு தேடலை வெளிப்படுத்துவதாக உணர்ந்து திரைப்படங்களை உருவாக்கிய இங்மர் பெர்க்மன் எழுதிய ஒவ்வொரு படமும் எனது இறுதிப் படம் என்ற கட்டுரையின் தமிழாக்கத்தை முழுமையாக வெளியிட்டது.

3-வது இதழில் எஸ். ஆல்பர்ட் எழுதிய 'புதுக் கவிதையின் பாடு பொருள்' என்ற ஆய்வுக் கட்டுரை இலக்கிய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆற்றல் பெற்ற எஸ். ஆல்பர்ட் பின்னர் கவிதைகள், மொழி பெயர்ப்பு முதலியன எழுதியுள்ளார்.

'படித்தல் என்பது உண்மையைத் தேடுவது. அந்தத் தேடல் சுலபமற்றதும் முடிவுறாததும் ஆகும் ( ஜார்ஜ் கிஸ்ஸிங்) என்ற சிந்தனையை ‘மானுடம் பிரகடனம் செய்தது.

‘மானுடத்தில் தரமான படைப்புக்கள்-சமூக விழிப்புணர்வு, சமுதாய மாற்றத்திற்கான உந்துதல்கள்-இவற்றில் நம்பிக்கை கொண்டு செயல் படுபவர்களிடமிருந்து வந்தாலும்...அத்தகைய நோக்கங்களை மறைமுகமாகக் கொண்டு, கலை இலக்கியம் மூலமாய் வாழ்வின் தீவிரத்தை உணர்த்துவோரிடமிருந்து வந்தாலும்.அவைகளின் இலக்கியத் தரம் கருதி வெளியிடத் தயாராயிருக்கிறோம். மானுடம்- படைப்பிலக்கியம், இலக்கிய விமர்சனம், நவீன திரைப்படம், ஓவியம் பற்றிய கட்டுரைகளையும், அரசியல் விமர்சனக் கட்டுரைகளையும் வரவேற்கிறது. படைப்பாளிகளின் மீதான விமர்சனங்களை வெளியிடுவதற்கில்லை என்று ஒரு இதழில் (இரண்டாவது ஆண்டின் முதல் இதழில் ) அறிவித்திருக்கிறது.

‘புதிய பரிமாணங்களில் தெரு நாடகங்கள்; அவற்றின் மீதான சில எதிர்பார்ப்புகள்'; 'ஓவியத்தில் கருக்க நிகழ்முறை'; 'சார்த்தின் தத்துவத்தில் மனிதனின் குணாதிசயம்' (அம்ஷன் குமார் ), 'மேடை நாடக வளர்ச்சி' (எஸ். ஆல்பர்ட்)-கதைகள், கவிதைகள். மொழி பெயர்ப்புக் கவிதைகள் தவிர, 'மானுடம்' இதழ்களில் வந்த கட்டுரைகள் இவை.

‘சிறு பத்திரிகைகள் ஒரு இயக்கமாக, எந்தத் தொடர்ந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தாவிட்டாலும், இன்று புது சினிமா, புது நாடகம் போன்று புது இலக்கியம் படைக்க விரும்புபவர்கள் சிறு பத்திரிகைத்தளத்தில் இயங்குவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. நம்மைச் சுற்றியுள்ள ஆரோக்கியமற்ற சமூக கலை இலக்கியச் சூழலைப் பற்றிய விமர்சனங்களைச் சிறு பத்திரிகைகளில்தான் நாம் தொடர்ந்து செய்ய முடியும். எனவே, சிறு பத்திரிகை ஒரு இயக்கமாக உருவெடுப்பதற்கு முயற்சி செய்வதுதான் இப்போது நாம் செய்யக் கூடியது. இன்றுள்ள சூழ்நிலையில் படைப்பிலக்கியம் படைப்பதுடன் ஒரு பிரக்ஞையுள்ள படைப்பாளியின் வேலை முடிவடைந்து விடுவதில்லை. ஒரு படைப்பிலக்கியம் சரியாகப் புரிந்துகொள்ளப்படக்கூட இங்குள்ள போலி மதிப்பீடுகள் தடையாக இருக்கின்றன. இந்நிலையில் ஒரு கட்டத்தில் இந்த சமூக கலாச்சாரப் போலிகளைத் தகர்க்கவும்- அதற்கும் மேலாக சரியான மதிப்பீடுகளை முன்வைக்க வேண்டியதும் ஒரு சிறு பத்திரிகையின் கடமை யாகிறது. படைப்பிலக்கியத்துடன் சமூகவியல், கலாசாரம்-மற்றும் சார்புடைய துறைகள் பற்றிய விமர்சனக் கட்டுரைகளை மானுடம் தொடர்ந்து வெளியிட இருக்கிறது'.

இது மானுடம் 8-வது இதழின் ஆசிரியர் அறிவித்த குறிப்பு. இதன் ஆசிரியர் ஜி. விஜயகுமார் (ஜீவி) கதை, கட்டுரை, கவிதைகள் எழுதியுள்ளார்.

1981 முதல் (8-வது இதழ்) நவீன இலக்கியக் குரல் என்று அறிவித்து வந்துள்ள மானுடம் இதுவரை பத்து இதழ்கள்தான் வந்திருக்கிறது.

10-வது இதழ் ( ஜனவரி 1983) ஒரு விசேஷ வெளியீடு ஆகும். திருச்சியில் 1982 அக்டோபரில் 'இலக்கு கலாசார இயக்கத்தின் திருச்சிக் குழு' இருநாள் கருத்தரங்கு நடத்தியது. சினிமாவும் நமது கலாசாரமும் எனும் தலைப்பில் பலர் கட்டுரைகள் வாசித்தார்கள். அக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த இதழ்.

ஆரோக்கியமான சினிமா வளர- அசோகமித்திரன்; சினிமாவும் சமுதாயப் பொறுப்பும்-அம்பை, நமது சினிமாவும் நமது கலாசாரமும்-அம்ஷன்குமார் 16 வயதினிலேயும் அதற்குப் பிறகும்- பிரபஞ்சன்பிரபஞ்சன்; மிருணாள் சென், அநீதி எதிர்ப்பு-கோ. ராஜாராம், பிராந்திய சினிமா, ஒரு மூன்றாவது சினிமாவை நோக்கி-தமிழவன்.

இவை இவ்விதழில் உள்ளன. சுவாரஸ்யமான கட்டுரைகள். சினிமா பற்றி பல்வேறு நோக்குகளில் எழுதப்பட்ட சிந்தனைகள்.

மானுடம் சில இதழ்களில் லினோகட் ஓவியத்தை அட்டையில் பிரசுரம் செய்தது.

'ஏனோ தமிழ்ச் சிற்றேடுகளில் சினிமா பற்றிய பார்வை ஏதும் சரியான முறையில் வருவதில்லை. நவீன ஓவியம் பற்றிய கட்டுரைகளும் சிறு பத்திரிகை வாசகனை மனத்தில் கொள்ளாது சரியான அறிமுகங்களின்றி வெளியிடப்பட்டுள்ளது. இதன் விளைவு நவீன ஓவியத்தை நிறைய சிறு பத்திரிகை வாசகர்கள் புதிய கலை உருவமாக ஏற்றுக் கொள்ளத் தயங்குவதாகும். மானுடன் நவீன ஓவியத்தை நமது வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய ஓரிரு கட்டுரைகள் மூலம் எளிய முறையில் முயன்றிருக்கிறது. சினிமா பற்றியும் அவ்வாறே செய்ய விரும்பி ‘இலக்கு' கருத்தரங்க கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம். தொடர்ந்து வெளியிட இருக்கிறோம்' என்று ஆசிரியர் ஜீவி அறிவித்திருக்கிறார்.

'மானுடம்' தொடர்ந்து வெளிவரும் என்று அவர் குறிப்பிட்டிருந்த போதிலும், அப்புறம் அது வெளிவரவில்லை.