உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழில் சிறு பத்திரிகைகள்/பாராட்டப்பட வேண்டிய முயற்சிகள்‌

விக்கிமூலம் இலிருந்து

47. பாராட்டப்பட வேண்டிய முயற்சிகள்


அதிக சர்க்குலேஷனையே முக்கிய நோக்கமாகக் கொண்டு, அதற்காக வாசகர்களைக் கவரும் மசாலாத்தனங்களைத் திணித்து, மக்களின் ரசனைத் தரத்தை மலினப்படுத்தியபடி முன்னேற முயல்கின்றன. வணிகப் பத்திரிகைகள்.

அவை தமக்குள் போட்டி வளர்த்து மினுமினுப்பாகக் ’காகிதரேஸ்’ நடத்திக் கொண்டிருக்கிற காலத்திலேயே இலக்கிய உணர்வுடைய ரசிகர்கள் தங்கள் இலக்கிய ஆர்வத்தை வெளிப்படுத்தும் முயற்சிகளில் உற்சாகமாக ஈடுபடுவது நாடு நெடுகிலும் நடந்து வருகிறது.

அத்தகையவர்கள் மாதம்தோறும் கூடுகிறார்கள். கவிதைகள் படிக்கிறார்கள். சிறுகதை எழுதி வாசிக்கிறார்கள். பத்திரிகைக் கதைகளை விமர்சனம் செய்கிறார்கள். கையெழுத்துப் பத்திரிகை தயாரிக்கிறார்கள். சிலசமயம் ’சைக்ளோஸ்டைல்’ பத்திரிகையாகக் கொண்டுவர முடிகிறது சிலரால். உற்சாகமும் ஊக்கமும் மிகுதிப்படுகிறபோது அச்சுப் பத்திரிகை நடத்தவும் முற்படுகிறார்கள்.

இவற்றில் எல்லாம் இலக்கியத்தரம் உயர்வாக இருப்பதில்லை என்பது இயல்பான விஷயமாக இருந்தபோதிலும், இத்தகைய முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவையே ஆகும். மசாலாத்தனப் பத்திரிகைகளின் பகட்டிலும் பளபளப்பிலும் தங்களை இழந்துவிடாமலும், இலக்கிய உணர்ச்சி மழுங்கிப் போகும்படி விட்டுவிடாமலும், இளைஞர்கள் தங்கள் ரசனையைக் காப்பாற்றிக் கொண்டு வருவதும், அதை வளர்ப்பதற்கான வழிகளில் ஊக்கத்தோடு ஈடுபடுவதும் உண்மையிலேயே பெரிய விஷயங்கள்தான்.

இந்தவிதமான முயற்சிகள் பலவும் பரவலான கவனிப்புக்கு வருவதில்லை. அவை குறித்த சில வட்டாரங்களில் உள்ள உற்சாகிகள் மத்தியிலேயே இயங்குகின்றன என்றே சொல்ல வேண்டும்.

சிற்சில முயற்சிகள் வெளியார்களின் கவனத்துக்கும் கொண்டு வரப்படுகின்றன.

அப்படிப்பட்டவைகளில் ’சோலைக் குயில்கள்’ என்ற மாத வெளியீடும் ஒன்று ஆகும். இது திருச்சியிலிருந்து வருகிறது.

திருச்சியில், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள், ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று கூடுகிறார்கள். கவிதை பற்றிய விமர்சனங்களை வரவேற்கிறார்கள். தங்களைச் 'சோலைக் குயில்கள்' என்று கூறிக் கொள்கிறார்கள்.

மாதம்தோறும் கவி அரங்கத்தில் படிக்கப்பட்ட கவிதைகளில் தேர்ந்தெடுத்த சிலவற்றைச் ’சோலைக் குயில்கள்’ என்ற சிறு இதழாக (10 பக்கங்கள் ) அச்சடித்து வெளியிடுகிறார்கள். நான்கு வருடங்களாக இது நடைபெற்று வருகிறது.

சமுதாயப் பார்வை கொண்ட கவிதைகளே மிகுதி. இரண்டாம் ஆண்டின் முடிவில் ’சோலைக் குயில்கள்’ பெரிய அளவில் ஒரு மலர் தயாரித்து வெளியிட்டது. தரமான கட்டுரைகளும் கவிதைகளும் அதில் இடம் பெற்றிருந்தன.

தஞ்சை மாவட்டம் குத்தாலம் என்ற இடத்தில் உள்ள இலக்கிய அன்பர்கள் ’கேமரா'’ என்ற பெயரில் ’சைக்ளோஸ்டைல்’ பத்திரிகை ஒன்றை நடத்தினார்கள். அந்தப் பத்திரிகைக்கு முக்கியப் பொறுப்பேற்றிருந்த கேசவன், மனோகரன், ராஜசேகர் ஆகியோரது பெயர்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு கேமரா என்ற பெயர் உருவாக்கப்பட்டது.

கதை, கட்டுரை, கவிதைகளோடு இலக்கிய விமர்சனங்களும் கேமராவில் பிரசுரமாயின. ’மணிக்கொடி காலம்’, ’சரஸ்வதி காலம்’ நூல்களிலிருந்து சேகரம் செய்த தகவல்களையும் அது வெளியிட்டது. அது நீண்ட காலம் பிரசுரம் பெறவில்லை.

முகம்— சென்னை, கருணாநிதி நகர் இலக்கிய வட்டம் அன்பர்கள் மாதம்தோறும் கூடி இலக்கிய சர்ச்சை செய்கிறார்கள். சிறப்புச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்கிறார்கள். அத்துடன் ’முகம்’ என்றொரு மாத இதழையும் வெளியிடுகிறார்கள்.

நான்கு ஆண்டுகளாக நடைபெறும் ’முகம்’ மாமணி என்ற இலக்கிய ரசிகர்—எழுத்தாளரின் உற்சாகமும் ஊக்கமும் நிறைந்த உழைப்பின் விளைவால், தரமான இதழாகப் பிரசுரம் பெறுகிறது. எண்ணதாசன் என்ற பெயரில் அவர் கவிதைகள் எழுதுகிறார். கிந்தனார் பதில்கள் என்ற சுவாரஸ்யமான கேள்வி-பதில் பகுதி இந்தச் சிற்றேட்டின் சிறப்பு அம்சமாக விளங்குகிறது. மாமணி எழுதும் கதைகள், வெங்கடேசன் எழுதும் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள், பேட்டிக் கட்டுரைகள், கவிதைகள் ‘முகம்‘ பத்திரிகைக்கு உயிரூட்டுகின்றன.

கேரளத் தமிழ் : திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் ‘கேரளத் தமிழ்’ என்ற சிறு பத்திரிகையைப் பிரசுரித்து வருகிறது. பிரபல எழுத்தாளர் ஆ. மாதவன் இதன் ஆசிரியப் பொறுப்பை வகிக்கிறார். முக்கியமாக சங்கத்தின் நிகழ்ச்சிகள், அறிக்கைகள், திருவனந்தபுரம் செய்திகளைப் பிரகரிக்கும் இந்த இதழில் இலக்கியம் சம்பந்தமான கட்டுரைகளும் அவ்வப்போது இடம் பெறும் ‘கேரளத் தமிழ்‘ ஆண்டு மலர் இலக்கிய ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். அதன் ஒரு மலர் எழுத்தாளர் தி. ஜானகிராமன் நினைவில் ‘சிறுகதைச் சிறப்புமலர்’ என்று தயாரிக்கப்பட்டிருந்தது. அதில் அருமையான சிறுகதைகள் பல இடம் பெற்றிருந்தன.

அரும்பு என்ற மாதப் பத்திரிகையை விசேஷமாகக் குறிப்பிட வேண்டும். -

பல வருடங்களாக, ஒரு கிறிஸ்துவ சங்கப் பத்திரிகையாக வெளிவருகிறது ‘அரும்பு‘ 1983 ஜூன் முதல் இலக்கியத் தரமான இதழாக மலரத் தொடங்கியது.

1985 ஏப்ரல்-மே இதழில் அதன் சாதனைகள் குறித்து ‘அரும்பு‘ மகிழ்ச்சியோடும் பெருமையோடும் குறிப்பிட்டுள்ளது !

‘இலக்கியத் தரமான விஷயங்களை வெளியிட்டு தமிழ் இலக்கியத் துறையைப் புதிய பரிமாணங்களுடன் முன்னெடுத்துப் போகப் போகின்றோம் என்ற பிரகடனத்துடன் தொடங்கி சில இதழ்களைக் கனமாயும் தரமாயும் வெளியிட்ட பின் வியாபாரச் சந்தையிலே சமரசம் செய்து நீர்த்துப் போயும், இலக்கியக் குமுதங்களாயும் ஆகிவிட்ட சஞ்சிகைகளின் நடுவே, கடந்த இரண்டாண்டுக் காலமாகத் தீர்மானமான இலக்கியக் கருத்துடனும் பிடிவாதத்துடனும் இயங்கி வந்தது அரும்பு‘

இதற்கு அமிர்தராஜ் என்ற எழுத்தாளரின் உற்சாகமான உழைப்பும், இலக்கியவாதிகளுடன் நட்பு உணர்வோடு அவர் கொண்ட தொடர்புகளும் முக்கிய காரணம் ஆகும்.

செ. யோகநாதன், வண்ணதாசன், வல்லிக்கண்ணன், கர்ணன், பிரபஞ்சன், கார்த்திகா ராஜ்குமார், பாவண்ணன் முதலிய படைப்பாளிகளின் கதைகளை அரும்பு இக்கால கட்டத்தில் பிரசுரித்தது. மற்றும் மசாலாப் பத்திரிகைகளில் வருகிற கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, புதுமையான- பரிசோதனை ரீதியான-கதைகள் எழுதுகிற எழுத்தாளர்களின் படைப்புகளை ஒவ்வொரு இதழிலும் வெளியிட்டது.

தரமான கவிதைகளைப் பிரசுரிக்க முயன்றது. தமிழன்பன், ஆத்மாநாம், பாப்ரியா, நீலமணி, ப்ரதிபா ஜெயச்சந்திரன் முதலியவர்களின் கவிதைகள் வந்துள்ளன. பிறமொழிக் கவிதைகளின் தமிழாக்கமும் அதிகமாகவே பிரசுரிக்கப்பட்டது. பிரம்மராஜன் பல நாடுகளைச் சேர்ந்த கவிஞர்களின் படைப்புகளைத் தமிழில் தந்திருக்கிறார்.

கட்டுரைகள் தனித் தன்மையோடும் சிந்தனை கனத்தோடும், வாழ்க்கைப் பிரச்னைகளை ஆராய்ந்து இளைஞர்களுக்கு வழிகாட்டக் கூடிய விதத்திலும் அமைந்துள்ளன.

பாவண்ணன் நல்ல தொடர்கதை ஒன்றை எழுதியுள்ளார். அதன் பிறகு, சுயசிந்தனையும் தன்மானமும் தன்னம்பிக்கையும் மெய்த்துணிவும் பெற்ற பத்திரிகை நிருபர் ஒருவரை கதாபாத்திரமாகக் கொண்ட தொடர் கதையை செ. யோகநாதன் எழுதிவருகிறார்.

விசேஷமான பேட்டிகளையும் ‘அரும்பு‘ வெளியிட்டுள்ளது. வலம்புரி ஜான், வல்லிக்கண்ணன், கோமல் சுவாமிநாதன், ஓவியர் ஜெயராஜ் போன்றவர்களின் பேட்டிகள் முக்கியமானவை.

தனித்தன்மையோடு வித்தியாசமான பேட்டிகளை வெளியிடும் எண்ணத்தோடு, முடிதிருத்தும் தொழிலாளி, நடைபாதைத் தொழிலாளி, சுமை தூக்குவோர் முதலியவர்களைச் சந்தித்து, அவர்களுடைய வாழ்க்கை முறைகளையும் பிரச்னைகளையும் கேட்டறிந்து நல்ல முறையில் எதார்த்தச் சித்திரங்களாகப் பிரசுரித்துள்ளது.

அமிர்தராஜ் பாராட்டப்பட வேண்டிய கதை, கவிதை, கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

‘அரும்பு‘ வின் ஒவ்வொரு மாத அட்டைப் படமும் வித்தியாசமானவையாக அமைந்து பத்திரிகைக்கு ஒரு தனித்தன்மை அளித்துள்ளது.

தமிழ்ப் பணி : கவிஞர் வா. மு. சேதுராமன் சிறப்பாசிரியராகப் பொறுப்பு வகித்து நடத்தும் மாத இதழ். இது மரபுக் கவிதைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. வா. மு. சே. யின் கவிதைகள் மற்றும் பல கவிஞர்களின் படைப்புகள் அதிகமாக இடம் பெறும் இப்பத்திரிகையில் பேராசிரியர் டாக்டர் சஞ்சீவி, தில்லைநாயகம், நாரண துரைக்கண்ணன் போன்ற பிரபலஸ்தர்களின் கட்டுரைகள் வெளிவருகின்றன. நூலகம் பற்றிய விசேஷக் கட்டுரைகள், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்கள், தமிழின் சிறப்பை வலியுறுத்தும் கட்டுரைகள் தமிழ்ப் பணியில் பிரசுரம் பெற்றுள்ளன. புதுக் கவிதையை எதிர்த்து டாக்டர் தமிழண்ணல் எழுதிய கட்டுரைகள் இதில் தொடர்ந்து வந்தன. -

மரபுக் கவிதையைப் போற்றி வளர்க்கும் பத்திரிகைகளில் ‘முல்லைச் சரம்‘ முக்கியமானது. கவிஞர் பொன்னடியான் கருத்துடன் வளர்த்து வரும் இந்தப் பத்திரிகை பல வருடங்களாக மரபுக் கவிதைக்குப் பணியாற்றுகிறது. கவிஞரின் உணர்ச்சி பூர்வமான, கருத்து நயம் நிறைந்த கவிதைகள், இக்கவிதை ஏட்டுக்குத் தனிச் சிறப்புத் தருகின்றன. கவிதை எழுதும் ஆற்றல் பெற்ற பலரது படைப்புக்களைத் தாங்கி வருகிற முல்லைச்சரம் திறமையுள்ள இளம் கவிஞர்களையும் அறிமுகம் செய்து, வளர்ச்சிக்குத் துணை புரிகிறது.

பத்திரிகை நடத்துவது சிரமமான காரியம், நிச்சயமாக நஷ்டத்தை உண்டாக்கும் பணி என்று தெரிந்தும் கூட, புதிது புதிதாகப் பத்திரிகைகள் ஆரம்பிக்கும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டேயிருக்கின்றன. சிறு பத்திரிகைகளும் புதுசு புதுசாகத் தோன்றியவாறு இருக்கின்றன.

இவற்றில் பெரும்பாலானவை வெறும் ஆர்வத்தின் வெளிப்பாடுகளாகவும், இளம் எழுத்தாளர்களின் ஆசை மலர்ச்சிகளாகவுமே அமைகின்றன. இவை வெளியிடுகிற புதுக் கவிதைகளில் பெரும்பாலும் புதுமையும் இருப்பதில்லை; கவிதைத் தன்மையும் காணப்படுவதில்லை. கதைகளிலும் தரமோ நயமோ இல்லை.

எனினும் அபூர்வமாகச் சில முயற்சிகளில் முதல் இதழே பாராட்டத் தகுந்த சிருஷ்டிகளாக அமைந்து காணப்படுகின்றது. அப்படிப்பட்ட புது முயற்சிகளில் ‘லயம்‘ என்பதும் ஒன்று. இந்த ‘காலாண்டிதழ்‘ பெரியார் மாவட்டம் அந்தியூர் அருகில் உள்ள நகலூரில், கே. ஆறுமுகம் என்ற இலக்கிய நண்பரால் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதன் முதல் இதழ் ( ஜனவரி 1985 ) கனமான விஷயங்களைக் கொண்டுள்ளது.

இந்திய வைதீகமும் நாஸிகளும்- பிருமிள் தர்மு சிவராமின் கட்டுரை, ஞானியின் கல்லிகை, எனக்குள் ஒரு வானம் என்ற நெடுங்கவிதைகள் பற்றிய க. பூர்ணச்சந்திரனின் விரிவான விமர்சனம். அலெக்சாண்டார் ஸோல்ஸெனிட்சின் எழுதிய பேரழிவை நோக்கிச் செல்லும் மேற்கத்திய உலகம் என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு போரிஸ் பாஸ்டர்நாக் கவிதை ஒன்றின் தமிழாக்கம் மற்றும் தேவதேவன், பிருமிள், கலாப்ரோதீப் சுப்ரமணியன் கவிதைகள் ‘லயம்‘ முதல் இதழில் உள்ளன.

‘எதிர்முனை‘ என்ற தலைப்பில் ஒரு பகுதி. சில முக்கியமான செய்திகள், தகவல்கள் மீதான சுதந்திரச் சிந்தனைக் குறிப்புகள்—சுயேச்சையான உரத்த சிந்தனைகள்- இதில் காணப்படுகின்றன. விறுவிறுப்பான, சுவாரஸ்யமான விமர்சனங்களும் அபிப்பிராயங்களும் வெளியிடப்பட்டுள்ளன.