உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழில் சிறு பத்திரிகைகள்/பொங்கும்‌ தமிழமுதம்‌

விக்கிமூலம் இலிருந்து

48. பொங்கும் தமிழமுதம்


‘தமிழீழத்திலும் தமிழீழத்திற்கு வெளியிலும் வாழும் மாணவர் சக்தியை கிளர்ந்தெழ வைத்து, தமிழீழப் போராட்டத்திற்கு மாணவர்களை அணி திரளச் செய்வதற்காக, தமிழீழ மாணவர் பேரவை ‘பொங்கும் தமிழமுதம்‘ என்ற மாதப் பத்திரிகையை வெளியிடுகிறது.

தமிழ் ஈழ மாணவர் பேரவையினர் தங்கள் குறிக்கோளை இந்தப் பத்திரிகையின் மூலம் தீர்க்கமாகவும் தெளிவாகவும் அறிவித்துள்ளனர்.

“உலகின் பல நாடுகளில் நடைபெற்ற போராட்ட வரலாறுகளில் நுரைத்தெழு வீர நடவடிக்கைகள் நடத்தப்பட்ட காலங்கள் உண்டு. இத்தகைய போராட்டங்கள் நீரில் நுரைக் குமிழ்கள் எவ்வளவு விரைவாகத் தோன்றி மறைகின்றனவோ, அவ்வளவு விரைவாகத் தோன்றி, அதைவிட வேகமாக மறைந்து விடுகின்றன. இவ்வகைப் போராட்டங்கள், கோரிக்கையை வென்றெடுப்பதோ அல்லது வரலாற்றில் நிலைப்பதோ இல்லை.

இத்தகைய நடவடிக்கைகளில் முன்னின்றவர்கள் அந்நாட்டு மாணவர்களே.

பொதுவாக இளைஞர் மத்தியில் எழக்கூடிய உணர்வுகளும், எதையும் ஆழமாகச் சிந்திக்காது வேகமாகச் செய்துவிடத் துடிக்கும் மனோபாவமும், இளங்கன்று பயமறியாது என்ற பழமொழிக்கேற்ப அவர்களது அச்சமற்ற உணர்வுகளும் விடுதலை என்பது ஓரிரு மாதங்களில் பெற்றுவிடக்கூடிய ஒரு அற்பவிடயம் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து விடுவதால் இத்தகைய திட்டமிடப்படாத போராட்ட வரலாறு உருவாவதற்குக் காரணமாயிற்று.

தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டத்தில் மாணவர்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடும் எந்த ஒரு இயக்கமும், எந்த வகையான செயற்திட்டங்களைக் கொண்டுள்ளது எனபது பற்றியும் மாணவர்கள் ஆராய்ந்தே தம்மால் முடிந்த அர்ப்பணிப்பைச் செய்ய முன்வரவேண்டும். நாம் நடத்தும் தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டம் உலகின் எப்பகுதியிலும் நடத்தப்பட்ட விடுதலைப் போராட்டத்தை விடவும் இலகுவாக இருக்கப் போவதில்லை.

தமிழீழப் பிரதேச சமூகச் சூழ்நிலைகளையும் எதிரியின் சமூகச் சூழ்நிலைகளையும் மக்கள் தொகையையும் ஒப்பிட்டு நோக்குவோமாயின், தமிழீழப் போராட்டமானது ஏனைய போராட்டங்களைக் காட்டிலும், கடுமையாகத்தான் இருக்கும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும் ஒவ்வொரு செயல் வீரனையும் உலகின் ஏனைய விடுதலைப் போராட்ட வீரனைக் காட்டிலும் உயர்வாக்கப் போவது இக் கடுமையான போராட்டப் பரீட்சையே.

இத்தகைய கடுமையான போராட்டத்தில் தங்களை இணைத்து, தமிழீழ விடுதலைக்குத் தம்மை அர்ப்பணிக்க முன்வரும் ஒவ்வொரு இளைஞனும், மாணவனும், தமிழீழப் போராட்ட வரலாற்றில் ஒரு நுரைத் தெழு வீரசாகச காலகட்டத்தை ஏற்படுத்திவிட்டு இப்போராட்டக் களத்திலிருந்து மறைந்து விடாமல், ஒரு நீண்ட முடிவான போராட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வகையில் தமிழீழப் போராட்ட வரலாறு உலகில் நாளைய விடுதலை வீரர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைய வேண்டும்.

இன்று ஒடுக்கப்படும் நமது மக்களால் நடத்தப்படும் விடுதலைப் போராட்டம், ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பல நாட்டு மக்களுக்கும் ஒரு பாடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.” (தமிழமுது-கிண்ணம் -1. துளி-7 அக்டோபர் 1984 )

தங்கள் லட்சியத்தையும், வரலாறு காட்டும் உண்மையையும் திடமாக எடுத்துக் கூறும் ‘தமிழமுது‘ குழுவினர், விடுதலைப் பேர்ராளிகளின் நோக்கையும் கடமையையும் இவ்வாறு நினைவில் பதித்துக் கொள்கிறார்கள்.

”நமது மண்ணையும் மக்களையும் சார்ந்து அவர்களது சொந்தப் பலத்திலும் பங்களிப்பிலும் இப்போராட்டத்தை எடுத்துச் செல்வதற்கு மக்களைத் தயார்படுத்த வேண்டும். இதனூடாகவே முழுமையான வெற்றியை ஈட்ட முடியும்.”

“சரியானதோர் பாதையில் மக்கள் போராட்டத்தை எடுத்துச் செல்வது இறுதி வெற்றிக்கு வழிகோலும்.” இக்கொள்கை வழியை வலியுறுத்தும் விதத்தில் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் ‘தமிழமுது’ இதழ்களில் பிரசுரிக்கப்படுகின்றன.

உலக நாடுகளில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டங்கள், மாணவர் போராட்டங்கள் பற்றிய கட்டுரைகளும், தமிழ் ஈழச் செய்திகளும் இதில் இடம் பெறுகின்றன.

போராட்ட உணர்வைக் காட்டும் சித்திரங்களை அட்டையில் வெளியிட்டு, அவற்றுக்கு ஏற்ற உணர்ச்சி செறிந்த கவிதைகளைத் தமிழமுது பிரசுரிக்கிறது.

தமிழகக் கவிஞர்கள், படைப்பாளிகளின் கவிதைகள், கதைகளை ஒவ்வொரு இதழிலும் வெளியிடுகிறது. கவிஞர்கள் மு, மேத்தா, வைரமுத்து, இன்குலாப், நா. காமராசன், குருவிக்கரம்பை சண்முகம், செவ்வண்ணன் மற்றும் இளைய கவிஞர்கள் பலர் உணர்ச்சியூட்டும் கவிதைகள் எழுதியிருக்கிறார்கள்.

எழுத்தாளர்களைப் பேட்டிகண்டு பல்வேறு பிரச்னைகள் குறித்தும் அவர்களது கருத்துக்களை அறிந்து தமிழமுது வெளியிட்டுள்ளது. இவ் வகையில், ஜெயகாந்தன், அசோகமித்திரன், கண முத்தையா, பாலகுமாரன், ராஜம் கிருஷ்ணன், தா. பாண்டியன், பரீக்க்ஷாஞாநி முதலியவர்களின் பேட்டிகள் அச்சாகியுள்ளன.

கேள்வி—பதில் பகுதி மூலம் பல விதமான சந்தேகங்களுக்கும், வினாக்களுக்கும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

சோவியத் எழுத்தாளர் பரீஸ் வலிலியேவ் எழுதிய, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட வீர மங்கையரின் அனுபவங்களைச் சித்திரிக்கும், ரசமான நவீனம் ’அதிகாலையின் அமைதியில்!’ தொடர்கதையாக வருகிறது.

’தமிழீழத்தைப் பொறுத்தமட்டில் வெறும் இன விடுதலையாக மட்டுமே இருக்கக் கூடாது— இருக்கவும் முடியாது. இயக்கமானது சரியான சோஷலிசத் திசைமார்க்கத்தில் தனது கொள்கையை முன் வைப்பது தமிழீழ மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கிறது’ என்று குறிப்பிடும் தமிழமுது நம்பிக்கை ஒளியை எங்கும் பரப்ப முயல்கிறது. தனது இலட்சியப் பாதையில் முன்னேறி வளர்கிறது.