உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழில் சிறு பத்திரிகைகள்/வேறு சில பத்திரிகைகள்

விக்கிமூலம் இலிருந்து

49. வேறு சில பத்திரிகைகள்


தென்புலம்

’இலட்சங்கள் இலட்சாதிபதிகளை உருவாக்குகின்றன. இலட்சியங்கள் இலட்சியவாதிகளை உருவாக்குகின்றன. என்ற வரிகளை லட்சிய மொழியாக முகப்பில் அச்சிட்டு, அதனடியில் சி. என். அண்ணாதுரையும் ஈ. வே. ரா. பெரியாரும் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் சித்திரத்தை அச்சிட்டு, இதர பத்திரிகைகளிலிருந்து மாறுபட்ட விஷயங்களைத் தாங்கி ’தென்புலம்’ என்ற திங்களிதழ் வெளிவருகிறது.

தோப்பூர் திருவேங்கடம் எம். ஏ. ஆசிரியராக இருந்து நடத்துகிற இம் மாத ஏடு பன்னிரண்டு ஆண்டுகளாக வந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

வரலாற்றுத் தொடர்பான தகவல் கட்டுரைகள் (இஸ்காராவும் லெனினும், இட்லர் ஏன் சர்வாதிகாரியானான், கரிபால்டியும் கிழவியும் போன்றவை ); கல்வித் துறை சம்பந்தமான கட்டுரைகள், திரு. வி. க. போன்றோரின் கருத்துரைகளின் மறுபிரகரம் சிறுகதை மற்றும் ரசமான தகவல்களைத் தென்புலம் வெளியிடுகிறது.

மரபுக் கவிதை, புத்தக மதிப்புரை ஆகியவை அபூர்வமாக (எப்போதாவது ) இடம் பெறுகின்றன.

அம்பலவாணக் கவிராயர் எழுதும் ’உண்ணாமுலையும் மங்களம் மாமியும் உரையாடுகிறார்கள்’ என்ற பகுதி இத்திங்களிதழின் சிறப்பு அம்சமாக விளங்குகிறது. படித்த, நாகரிகமான, அனுபவஞானம் பெற்ற மங்களம் மாமியும் நாட்டுப்புறத்திலிருந்து நகரத்துக்கு வந்துள்ள உண்ணாமுலையும் நாட்டு நடப்புகள், செய்திகள் பற்றி உரையாடுவது போல் எழுதப்படுகிற இக்கற்பனை நிகழ்ச்சியில் சகலவிதமான விஷயங்களும் அலசப்படுகின்றன.

சூத்ரதாரி

திருப்பூரில் தோன்றியுள்ள புதிய பத்திரிகை சூத்ரதாரி. இதன் முதல் இதழ் எடுப்பாக, நம்பிக்கை தருவதாக உள்ளது. கவிதைகள் நிறைய.

கேரளக் கவிஞர் சச்சிதானந்தம் கவிதை—புவியரசின் தமிழாக்கம், வித்யா ஷங்கர், பக்தவத்சலம், ஆத்மா கவிதைகள் அநேகம். மற்றும் கல்யாண்ஜி கவிதை, விக்ரமாதித்யன் கவிதை; சுப்ரபாரதி மணியன் கதை முதல் இதழில் இடம் பெற்றுள்ளன.

முதல் பக்க சுய விமர்சனம் சுவாரஸ்யமாக இருக்கிறது.

‘இதுபோன்ற சிறு பத்திரிகைகள் தோன்றுவதும் மறைவதுமாய் இருக்கின்ற இந்தக் காலச் சூழலில் இப்படியொரு பத்திரிகையைத் திடீரென ஆரம்பிக்க வேண்டிய அவசியமென்ன ? சூத்ரதாரி புதியதாக என்ன சாதிக்கப் போகிறான்? இது தொடர்ந்து வருவதற்கான சாத்தியங்கள் உள்ளனவா ? என்பன போன்ற கேள்விகள் எங்களுக்குள்ளேயே விசுவரூபமெடுத்துத் தலையைத் தட்டி கேட்கப்பட்டவைகள்தான்.

வெளிவந்த எந்த ஒரு சிறு பத்திரிகையும் வெளியீட்டு அளவில் நின்று போயிருக்கலாமே தவிர, நீண்ட காலத்திற்கு வாசகர்களால் நினைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது அது சிரஞ்சீவித்தனம் அடைந்து விடுகிறது. சிறு பத்திரிகைகளுக்கு என்றும் அழிவில்லை. வாழைக் கன்று மாதிரி ஒன்று வளர்ந்து மறையும்போது புதிதாக ஒன்று குருத்து விட்டிருக்கும். சூத்ரதாரிகூட அப்படி முளைத்ததாக இருக்கலாம். இது நின்றுபோனால் கூட இதன் பாதிப்பில் வேறு ஏதேனும் பத்திரிகையொன்றும் எங்காவது தோன்றலாம்.

சூத்ரதாரி எதைச் சாதிக்க எண்ணியுள்ளானோ, அதையே சாதிக்கும் எண்ணத்துடன் சில பத்திரிகைகள் வந்து கொண்டுதாணிருக்கின்றன. பிறகு இது எதற்கு என்ற கேள்வி எழலாம். நல்ல விஷயங்களைப் போட்டி போட்டுக் கொண்டு செய்வதிலொன்றும் தவறில்லையே. மேலும், சிறு பத்திரிகைகள் விஷயங்களை எல்லாப் பகுதி வாசகர்களிடமும் கொண்டு செல்ல முடிவதில்லை. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே அது தன் விஷயதானத்தை வழங்க வேண்டியதாய் உள்ளது. எனவே பரவலாக அனைத்துப் பகுதி வாசகர்களிடமும் நல்ல விஷயங்கள் சென்றடைய வேண்டுமெனில் ஆங்காங்கே பரவலாக சிறுபத்திரிகைகள் தோன்ற வேண்டியது அவசியமாகின்றது.

நல்ல வாசகனுடைய கடமை தரமான பத்திரிகைகளைத் தேடிப் படிப்பது. நல்ல பத்திரிகைகளின் கடமை தரமான படைப்புகளை வாசகனுக்கு வழங்குவது. இந்த நோக்கில் சூத்ரதாரி செயல்படுவான். உண்மையைத் தேடுகிறோம். உண்மையையே சொல்லுகின்றோம். இது தொடர்ந்து வருவதற்கான சாத்தியங்கள் எங்கள் முயற்சியில் உள்ளது; உங்கள் ஒத்துழைப்பில் உள்ளது’ ( சூத்ரதாரி ).

த்வனி

இந்தப் பெயரில் ஒரு இலக்கியப் பத்திரிகை. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவருவது. இலக்கிய ஆர்வமும், தரமாககனமாக—புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பும் பெற்றுள்ள இளைஞர்கள் கோவில்பட்டியிலிருந்து ’த்வனி’ யைப் பரப்பு முனைந்திருக்கிறார்கள்.

‘தமிழ் இலக்கியச் சூழல்—ஒரு ஆரம்ப விசாரணை என்றொரு கட்டுரை ( ஷைலேந்தர் எழுதியது. மே 1985 ) தற்கால நிலையைத் தீவிரமாக அலசி ஆராய்ந்திருக்கிறது.

‘இன்னமும் நாம் பழைய பாட்டையில் போய்க் கொண்டிருப்பதைப் பரிசீலிக்க வேண்டும். இப்போது நம்மால் செய்ய முடிந்ததும், செய்ய வேண்டியதும் என்ன ? க்ஷீண நிலையில் கிடக்கும் தமிழ்ப் பத்திரிகை உலகத்தை மீண்டும் தட்டியெழுப்பவேண்டும். மீண்டும் தரமுள்ள வாசகர்களைத் தமிழில் உருவாக்க வேண்டும். இப்போதிருக்கிற இந்தத் தேக்க நிலை புதிய பாய்ச்சலுக்கான பதுங்குதலாகக்கூட இருக்கலாம். ஆனால் அதற்கான ஆரோக்கியத்தை வளர்க்கவேண்டும். ஜனங்களின் ரசனைப் போக்கில் விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்து மெல்ல அவர்களை ரசனைக்குரியவர்களாக மாற்ற வேண்டும் என்கிற லட்சியத்துக்காக, விரிந்த அளவில் வாசகர்களிடத்தில் இயங்கிவரும் கலை இலக்கிய ஸ்தாபனங்களின் கைவசம் உள்ள பல ஆயிரம் வாசகர்களின் இருத்தலே நமக்கு இன்னமும் நம்பிக்கையூட்டுகிறது. நமக்கு நாமே நம்பிக்கை கொள்வதும் வாசகர்களை நம்பிக்கை கொள்ள வைப்பதும் அவசியமாகிறது.

முதலில் நம்முடைய குறுகிய குழுவாத மனப்பான்மைகளைச் சற்றே ஆரோக்கியமாக்க வேண்டும். யதார்த்த வாழ்வைச் சந்திக்காத நம்முடைய மண்டை வீக்கத்தைக் கரைக்க முயற்சி செய்யவேண்டும். எல்லாவித ஆக்கபூர்வமான மோதல்களையும், புதிய விளைவுகளையும், புணர்ச்சிகளையும் பல்கிப் பெருகிடச் செய்தல் வேண்டும். தனிநபர் வாதங்களில் மீண்டும் வீழ்ந்திடாமலிருக்க வேண்டும்.

இதெல்லாவற்றுக்கும் மேல் நம்மை நாமே திடப்படுத்திக் கொள்ள, சுயவிமர்சனப் பார்வையில் புரிந்துகொள்ளத் தைரியம் வேண்டும்’ (த்வனி)