தமிழில் சிறு பத்திரிகைகள்/மல்லிகை

விக்கிமூலம் இலிருந்து

50. மல்லிகை


யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் இலக்கிய மாதப் பத்திரிகை ‘மல்லிகை’ இருபத்தோரு ஆண்டுகளாக வெற்றிகரமாக வளர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இலங்கை எழுத்தாளர் டொமினிக் ஜீவா, இலட்சியத் துடிப்போடும் கடின உழைப்போடும் உற்சாகமாக மல்லிகையை வளர்த்து வருகிறார்.

‘உழைப்பது, மல்லிகைக்காக உழைத்துக் கொண்டேயிருப்பது’ தான் ஜீவாவின் வாழ்க்கை ஆகும்.

‘உழைப்பும், பல பிரதேசங்களில் செறிந்து வாழும் ஈழத் தமிழர்களின் சுய முன்னேற்றமும் கலாச்சாரச் செழுமையும்தான் மல்லிகையின் குறிக்கோளாகும். மறைந்து— மறைக்கப்பட்டு— வாழும் கலைஞர்கள், படைப்பாளிகளை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதுதான் மல்லிகையின் பணியாகும். என்னதான் பாரிய கருத்து வித்தியாசங்கள் படைப்பாளிகளிடையே இருந்தபோதிலும்கூட, மல்லிகை எந்தக் கட்டத்திலும் சின்னத்தனமாகக் குறுகிய பார்வையுடன் நடந்துகொண்டதில்லை.’

இப்படி டொமினிக் ஜீவா மல்லிகையின் ஒரு இதழில் அறிவித்திருக்கிறார். அவருடைய ’இதய நேர்மையும் இலக்கிய நேர்மையும்’ அவரை அறிந்திருப்பவர்களுக்கு நன்கு புரியும்.

’நான் சத்தியத்தைப் போல உண்மையானவனாக இருக்க விரும்புகிறேன்’ என்பது ஜீவாவின் இதய ஒலி.

1984—ல் மல்லிகை தனது இருபதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் வெளியிட்ட சிறப்பு மலரில், அதன் ’ஈடு இணையற்ற சாதனை’ குறித்து தி. க. சி. எழுதிய கட்டுரையின் சில பகுதிகள் நினைவுகூரத்தக்கவை.

“சுமார் 15 லட்சம் தமிழர்களைக் கொண்ட ஒரு நாட்டிலிருந்து, 20 ஆண்டுகளாக ஒரு முற்போக்கு மாத இதழாக மல்லிகை எவ்வாறு வர முடிகிறது ? அதன் பின்னணி என்ன ? அதற்கு அடித்தளமாக விளங்கும் சக்திகள் யாவை ?

பிறக்கும்போதே (1964) தன்னை ஒரு முற்போக்கு மாத சஞ்சிகை என்று துணிச்சலாகப் பிரகடனம் செய்து கொண்டது மல்லிகை.

‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவியாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர். பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவர் என்ற மகாகவி பாரதியின் வாக்கையும் தனது குறிக்கோள் வாசகமாகப் பொறித்துக் கொண்டது.

கவிதைக்கு மகாகவி பாரதி, சிறுகதைக்கு ’மணிக்கொடி’ தந்த மாணிக்கம் புதுமைப்பித்தன் ஆகியோரைத் தனது முன்னோடிகளாகக் கொண்ட மல்லிகை உலகளாவிய ரீதியில் தனக்கொரு லட்சியத் தலைவனைக் கொண்டுள்ளது. அவர்தம் யுகப் புரட்சியின் சிற்பியான மாமேதை லெனினது நெருங்கிய தோழர், சோஷலிச எதார்த்தவாதம் என்னும் படைப்பு முறையின் தந்தை, மாக்சிம் கார்க்கி. அந்த மும்மூர்த்திகளின் பாதையில், எத்தனையோ இன்னல்களைப் புறம்கண்டு, இருபது ஆண்டுகளாக வெற்றிநடை போடுகிறது மல்லிகை.

ஓர் இலக்கிய இதழின் வெற்றிக்குக் கொள்கைபலம் மட்டும் போதுமா ? போதாது. பரந்து விரிந்த வாழ்க்கை அனுபவமும் வேண்டும்.

1954-ல் வெளிவந்த ரகுநாதனின் சாந்தி, 1959-62 காலகட்டத்தில் வெளியான விஜயபாஸ்கரனின் ’சரஸ்வதி’, கடந்த 25 ஆண்டுகளாக வெளிவரும் ’தாமரை’ முதலிய தமிழக ஏடுகளின் அனுபவமும் மல்லிகைக்கு முன்னுதாரணமாகவும் படிப்பினையாகவும் அமைந்தன. வேறு விதமாகச் சொன்னால், சாந்தி, சரஸ்வதி, தாமரை ஆகியவற்றின் மரபில் தோன்றியதே மல்லிகை. இந்த மரபை மேன்மேலும் செழுமைப்படுத்திவருவதே மல்லிகையின் தனிச் சிறப்பு.

மல்லிகையின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் குரலாக அது ஒலிப்பதுதான்.

இச்சங்கத்தின் கொள்கைகளைப் பட்டிதொட்டியெங்கும் பரப்பும் செயல் வீரனாக விளங்குகிறார் மல்லிகை ஆசிரியர் டொமினிக்

‘’மல்லிகை அவரது ‘சொந்தப் பத்திரிகை’ என்றபோதிலும்—அதனால் ஏற்படும் பொருளாதார லாப நஷ்டங்களுக்கு அவரே பொறுப்பு என்ற போதிலும்—மல்லிகையை மக்கள் உடைமை என்றே ஜீவா கருதுகிறார். இதற்குக் காரணம், மார்க்ஸியம் லெனினியத்திலும் அதன் செயல்பாட்டிலும் அவர் கொண்டுள்ள பற்றும் உறுதியும் ஆகும்.

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் கொள்கைப் பிடிப்பு, அவர் உழைப்பு, பொறுமை, விவேகம், பெருந்தன்மை, தோழமை உணர்ச்சி, நாட்டுப்பற்று, மொழிப்பற்று இவையும் மல்லிகையின் வெற்றிக்கு அடிப்படைக் காரணங்களாகும்.” (தி. க. சி. }

மல்லிகை ஆசிரியரின் உழைப்பையும் சாதனையையும், மல்லிகையின் வளர்ச்சி மூலம் நன்குணர்ந்த வாசகர்கள் வியந்து பாராட்டத் தவறுவதில்லை.

‘ஒரு சஞ்சிகை தனது இருபதாவது ஆண்டு விழாவை ஈழத்தில் கொண்டாடுகிறது என்ற யதார்த்தமான செய்தியே ஒரு சரித்திரமாகும். இந்தச் சாதனையைச் செய்வதற்கு நீங்கள் அதற்குப் பாத்தி கட்டிப் பசளையிட்டு உழைத்த உழைப்பை இலக்கிய உலகம் லேசில் மறந்துவிட முடியாது. அத்தனை உழைப்பு உழைத்துள்ளீர்கள். நானறிந்த வரை இத்தனை சிரமமான உழைப்பை உங்களைத் தவிர வேறு எவருமே தங்களது சஞ்சிகைக்கு செய்திருக்க முடியாது. ஒரு இலட்சிய வெறியும் தாகமும் இடைவிடாத நல்நோக்கமும் இருந்திருந்தால்தான் இது சாத்தியப்படும் என நான் நம்புகிறேன்’ என்று கொழும்பு வாசகர் எஸ். ரவீந்திரன் பாராட்டியிருக்கிறார்.

‘மனக் கிலேசமில்லாமல் துணிவாகவும் திட்டமிட்டும் சுயநலமற்றும் எவர் ஒரு காரியத்தைச் செய்தாலும் அது காலக் கிரமத்தில் மக்களால் மதித்துப் போற்றி வரவேற்கப்படும்.‘

‘யாழ்ப்பாணத்தில் இப்பொழுது உள்ள வேறு எவருக்கும் இந்தப் பராக்கிரமத்தை அடைய இயலாது. அதற்கு முக்கிய ஏதுவாக நான் கருதுவது, உங்களுடைய சுயநலமற்ற துணிவுதான்.’

இப்படியும் இன்னும் பலவாறாகவும், மல்லிகை ஆசிரியரைப் பாராட்டி ஊக்குவிக்கிறார்கள் வாசகர்கள்.

டொமினிக் ஜீவாவின் மன உறுதிக்கும், துணிச்சலுக்கும், அயராத உழைப்புக்கும் அடிப்படையாக அமைந்திருப்பது அவர் உள்ளத்தில் திடமாக உறைகின்ற நம்பிக்கை ஆகும்.

1983—ல் இலங்கையில் நிகழ்ந்த பயங்கரமான இனக்கலவரம் பற்றி அனைவரும் அறிவர். அச்சூழ்நிலையில்கூட ஜீவா ‘மல்லிகை’யைப் பிரசுரித்துக் கொண்டுதான் இருந்தார்.

1983 நவம்பர் மாத இதழில் அவர் இப்படி அறிவித்துள்ளார்—

‘கசப்பான பல அனுபவத் தாக்கங்களிலிருந்து நாடு கொஞ்சங் கொஞ்சமாக விடுபட்டுக் கொண்டிருக்கின்றது. விக்கித்துப்போய் மலைத்துவிட்ட இலக்கிய உலகமும் சற்று மூச்சுவிட்டு நிமிரப் பார்க்கின்றது. இவை அத்தனையும் கண்டு, நாம் அதிர்ச்சியடைந்தோ, விரக்திக்குட்பட்டோ செயலிழக்கவில்லை. மல்லிகை தனது கடமையைத் தொடர்ந்து செய்வதை வாசகர்கள் பலர் நன்கு அறிவார்கள். நம்பிக்கைதான் வாழ்வின் ஜீவநாடி என்பது நமக்குத் தெளிவாகத் தெரியும்.’

சங்கடங்களை எதிர்த்து எதிர்நீச்சல் போடுவதில்தான் வாழ்க்கையின் சாராம்சமே இருக்கின்றது என்பதை நன்கு உணர்ந்தவர் டொமினிக் ஜீவா.

நிதானம் தவறாமல், அடிப்படைக் கொள்கையை விட்டுக்கொடாமல், சிந்தனைத் தெளிவுடன் அவர் எழுதுகிற எழுத்துக்கள் மல்லிகைக்குக் கனமும் தனித்தன்மையும் சேர்க்கின்றன.

‘இனவாதம் என்பது மானிடர்களுக்குப் பைத்தியம் போன்ற கடுமையான ஒரு சமூக வியாதி. வெவ்வேறு இனத்தவர்களுக்கு இடையில் உண்மையாகக் காணக்கூடியது புறம்பான சில தன்மைகளின் வேறுபாடு மாத்திரமே. உட்புறமாக அவர்களின் தேவைகள், உணர்வுகள், இன்ப துன்பங்கள், பிரச்னைகள் எல்லாம் ஒரே விதமாக இருக்கின்றன. ஒரு இனம் மற்றொரு இனத்துக்குக் காட்டும் பகையான மனப்பான்மைக்கு முக்கிய காரணம், உட்புறமாக அவர்களை அறிந்து கொள்ளாமை என்று கூறலாம். அவ்வகையான அறிந்து கொள்ளலை மிகச் சுலபமாகப் பரிமாறுதலுக்கு வழி இலக்கியமே.‘

இவ்விதம் மல்லிகையில் ஜீவா தெளிவுபடுத்தியிருக்கிறார். அவ்வகையான அறிந்து கொள்ள உதவும் கதைகள், கட்டுரைகளை, மொழிபெயர்ப்புகளை மல்லிகை பிரசுரித்துள்ளது. இப்பவும் வெளியிட்டு வருகிறது.

இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் தங்களது தேசிய இலக்கியத்தை வளர்க்க உறுதி பூண்டார்கள்.

‘இலங்கை சுதந்திரம் அடைந்த பின், அதுவரை பழங்காலத்தைப் போல அலங்கார வாதங்களிலும் தேவதைக் கதைகளிலும் முழ்கி இருந்த தென் இந்திய இலக்கியச் செல்வாக்கிலிருந்து இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை விடுவிக்கும் முகமாகத் தேசிய இலக்கியம் என்ற கோஷத்தை முன் வைத்து முற்போக்கு எழுத்தாளர்கள் கிளர்ச்சி செய்தார்கள். தாயகத்தின் மொழி நடையையும், சமுதாயப் பின்னணியையும் இணங்க இலக்கியம் படைத்தலும், சமுதாய யதார்த்தவாத நோக்கத்தை உண்டு பண்ணுதலும் அத் தேசிய இலக்கியச் சங்கற்பத்தின் லட்சியங்களாகும்.

1956 க்குப் பிறகு ஏற்பட்ட அரசியல், சமுதாய மாற்றங்களினால் இந்தத் தேசிய இலக்கிய சங்கற்பம் பெரிதளவில் கூர்மையடைந்தது. இக் கிளர்ச்சியை மேலும் முன்னுக்குக் கொண்டு சென்ற முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தேசிய ஒற்றுமை இலக்கியச் சங்கற்பத்தை நிலை நாட்ட ஒரு இயக்கத்தை நடத்தியது. சிங்கள—தமிழ்—முஸ்லிம் இனத்தவர்களிடையில் நல்லெண்ணத்தை வளர்த்தல், இலங்கையின் தேசிய முன்னேற்றத்துக்கு ஒத்துழைத்தல், தேசியப் பிரச்னைகளின்போது இன வேற்றுமைகளைக் கருதாமல் பொதுவாகச் சிந்திக்க மக்களுக்கு வழி காட்டுதல் ஆகியவை அவ்வியக்கத்தின் பிரதான நோக்கங்களாக இருந்தன.‘

மல்லிகையும் இவ்வழியில் செயல்பட்டது. பத்து வருட காலத்தில் 50 சிங்களச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புகள் மற்றும் கவிதை, கட்டுரை, பத்தக விமர்சனம் என்று சிங்கள இலக்கியங்களைத் தமிழில் தந்துள்ளது. சிங்கள எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும் அறிமுகம் செய்யும் முறையில் மல்லிகைச் சிறப்பிதழ் வெளிவந்ததும் குறிப்பிடத்தகுந்தது.

ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் பொதுவான வளர்ச்சியையும், குறிப்பாக அவ் இலக்கியத்தின் முற்போக்கு நிலைப்பட்ட ஆழப்பாட்டையும் வற்புறுத்துவதும், அவற்றுக்காகச் செயல்படுவதுமே மல்லிகை தமிழ் சஞ்சிகையுலகில் நிலைநிறுத்த விரும்பும் சுயநியாயப் பாடாகும் என்று இலக்கிய விமர்சகர் கா. சிவத்தம்பி கணித்திருக்கிறார்.

‘கடந்த இருபது ஆண்டுகளாக வந்துள்ள ‘மல்லிகை’ இதழ்களை ஒவ்வொன்றாகப் புரட்டி ஆராய்ந்தால், இன்றைய தமிழ் இலக்கியம் மற்றும் திறனாய்வின் வளர்ச்சிக்கு மல்லிகை ஆற்றியுள்ள அருந்தொண்டு நன்கு விளங்கும். குறிப்பாக, திறனாய்வுத் துறையின் வளர்ச்சிக்கு ’மல்லிகை’ யின் வாயிலாகக் கைலாசபதி, சிவத்தம்பி, நுஃமான் மற்றும் பல ஆய்வாளரது பங்களிப்பு சாலச் சிறந்ததாகும். இன்றைய தமிழ் இலக்கியத்தின் பிற்போக்குச் சக்திகளுக்கு எதிராக இவர்கள் நடத்திய கருத்துப் போராட்டமும், ஒப்பீட்டு முறையில் திறனாய்வை வளர்ப்பதில் இவர்கள் காட்டிய ஆர்வமும் போற்றத்தக்கன.

பேராசிரியர் நா. வானமாமலை மற்றும் பல எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நட்புறவை வளர்ப்பதில் மல்லிகையின் வீறுமிக்க பணி குறிப்பிடத் தக்கதாகும்.

‘இந்திய இலக்கியத்தை மட்டுமின்றி, சோவியத் யூனியன் மற்றும் பிற சோஷலிச நாடுகளின் இலக்கியத்தையும் வாழ்க்கை முறையையும் தனது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மல்லிகை எப்போதும் முன் நின்றுள்ளது.’ இது, தி. க. சி. யின் மதிப்பீடு.

இலங்கை எழுத்தாளர்களின், இளம்படைப்பாளிகளின் கதைகள், கட்டுரைகள், கவிதைகளை மல்லிகை வெளியிடுகிறது.

’விவாத மேடை’ என்ற பகுதி மூலம் இலக்கியப் போக்குகளும், பிரச்னைகளும் விரிவாக சர்ச்சிக்கப்பட்டுள்ளன.

டொமினிக் ஜீவா வருடத்துக்கு ஒருமுறை தமிழ்நாட்டுக்கு வந்து, பரந்த அளவில் கற்றுப்பயணம் செய்து, எழுத்தாளர்கள் பெரும்பாலோரைச் சந்திக்கிறார். அவர்களோடு மனம்விட்டுப் பேசி, கருத்துப் பரிமாற்றம் செய்து, தமிழ்நாட்டின் கலை, இலக்கியப் போக்குகள் பற்றி அறிந்து கொள்கிறார். தனது எண்ணங்களையும் அனுபவங்களையும் விமர்சனங்களையும் மல்லிகையில் எழுதுகிறார். தூண்டில் என்ற கேள்வி—பதில் பகுதி அவருடைய அபிப்பிராயங்கள், சிந்தனைகள், அனுபவக் குறிப்புகளை எல்லாம் ஒளிவு மறைவின்றி வெளியிடுகிற அரங்கமாக விளங்குகிறது.

இலங்கையின் பல பகுதிகளையும், அவற்றைச் சேர்ந்த கலை இலக்கியப் படைப்பாளிகளையும் கவுரவிக்கவும் அறிமுகப்படுத்தவும் ‘மல்லிகை’ அவ்வப்போது சில சிறப்பிதழ்களை உருவாக்கியது. திக்கு வல்லைச் சிறப்பிதழ், நீர் கொழும்புச் சிறப்பிதழ், மலையகச் சிறப்பிதழ், முல்லைத்தீவுச் சிறப்பிதழ் ஆகியவை இத் தன்மையன.

மல்லிகையின் ஒவ்வொரு ஆண்டுமலரும் வாசகர்களுக்கு நல் விருந்து ஆகும்.

‘மல்லிகை வெறும் இலங்கைச் சஞ்சிகையல்ல. அது தமிழ்கூறும் நல்லுலகம் அனைத்தையும் அரவணைத்துப் போகும் மாசிகை’ என்பதை அதன் இதழ்கள் நிரூபிக்கின்றன.

‘எமக்கு வெகு தெளிவாகவும் துல்லியமாகவும் ஒன்று தெரியும். சரித்திரத்தில் பேசப்படப் போகும் சஞ்சிகை மல்லிகை. நாமும் மல்லிகையின் சுவைஞர்களான நீங்களும் மறைந்துபோன பின்னரும் நின்று நிலைத்துப் பேசப்படப்போகும் மாசிகை மல்லிகை. மல்லிகையை ஆராய்ந்து கலாநிதிப் பட்டம் வாங்கக்கூடிய ஒரு காலம் வரத்தான் போகின்றது. அப்படியான நெடுந்தொலைவுப் பார்வையுடனேயே நாம் இன்று செயல்பட்டு வருகிறோம்.’

—இப்படி அறிவிக்கிறார் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா.

இதிலும் அவருடைய தீவிரமும் உறுதியும் நிறைந்த நம்பிக்கையே மேலோங்கி ஒலிக்கிறது.