உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழில் சிறு பத்திரிகைகள்/புதிய வானம்‌

விக்கிமூலம் இலிருந்து



33. புதிய வானம்


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் குமரி மாவட்டக் கிளை தயாரித்து வெளியிட்ட முற்போக்கு இலக்கிய இதழ் 'புதிய வானம்'

இதன் மலர்ச்சி குறித்து அவர்கள் அழகாக அறிவித்திருக்கிறார்கள்—

‘மாலையில் நிறையச் சிரித்துக் கொண்டும், சில வேளைகளில் எங்களுடைய சாதனைகளின் மேல் பூப் பின்னிக் கொண்டும், இந்த சாதனைகளின் மத்தியில் ஒருவருக்கொருவர் இன்பமாக நெருங்கி வந்து கொண்டும் நாங்கள் கடைசியில் படிப்படியாகக் கலை இலக்கியப் பெரு மன்றமென்னும் ஒரு முழுமையான ஒன்றாக மாறிப் போனோம்.

குமரி மாவட்டக் கலை இலக்கியப் பெருமன்றத்தின் நெடுநாளையக் கனவு தன் முதல் இதழ்களை விரித்திருக்கின்றது. முற்போக்குக் கலைநெஞ்சங்களின் இதயச் செழிப்பில் வேர்பரப்பி, மனித இல்லங்களின் முன்றில்களில் கொடி வீசி, மெல்லப் படர்ந்து வந்த செல்லச் செடி அபூர்வமாக மொட்டெடுத்து அழகாக இதழ் விரிக்கத் தொடங்கி இருக்கிறது.

ஆனால் இது அழகுக்காக, செல்வ மாளிகையின் முற்றத் தொட்டிகளில் வளர்ந்து, அடுக்கடுக்காகப் பூத்து உதிர்ந்து போகும் வெறும் அழகு மலர் இல்லை. பூக்குங்கால் அழகு, புதிய மணம், இனித்திடுந் தேன்.

ஆனால், பூ கருத்தரிக்கும், காய் காய்க்கும், கனிந்து விதை கொடுக்கும். இந்த ஓராயிரம் விதைகள் உங்கள் முற்றங்களில் விழுந்து நூறாயிரம் செடிகளைத் தோற்றுவிக்கும். எங்கள் ஒரு பூ உங்கள் வீடு களைச் சுற்றி ஒரு கோடி பூக்களை விரிய வைக்கும். இது எங்கள் நம்பிக்கை !'

'புதிய வானம்' இலக்கியப் பிரக்ஞை உடையவர்கள் மத்தியில் மட்டும் பரவினால் போதாது என்று அவர்கள் கருதினார்கள்.

‘களையெடுத்துக் களைத்து, நீரோடையில் காலாட, வயல் வரப்புகளில் உட்கார்ந்திருக்கும் சகோதரிகள். சங்கொலி பிதுக்கித் தள்ளச் சோர்ந்து டிக்கடை பெஞ்சில் சாய்ந்து சுடுநீர் குடிக்கும் சகோதரர்கள். மாலைக் காற்று விரட்டிய கோடைச் சருகுகள்போல வீடு நோக்கி ஓடும் என். ஜி. ஓ. தோழர்கள் ஆகியோர்களிடமும் அவர்களது கனவு வேரூன்றி, முளைத்துக் கிளைத்துச் செழித்து வளர்ந்து பயன் தர வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

பொறுப்பாசிரியர்—அ. இராஜேந்திரன், ஆசிரியர் செந்தில் ஆசிரியக் குழு—பொன்னீலன், ஜெகன், தாமரை நடராசன், க.பிரம்மநாயகம், அருண் பாஸ்கர் என்று ஒரு ஆரோக்கியமான கூட்டுறவில் புதிய வானம் நன்றாக வளர்ந்தது.

இக் குழுவினரும், குமரி மாவட்டத்தில் உள்ள எழுத்தார்வம் கொண்ட இளைஞர்களும் பல முற்போக்குப் பத்திரிகைகளிலும் எழுதி வந்த பற்பலரும் புதிய வானத்தில் கவிதைகள், கதைகள் எழுதினார்கள். கவிதைகளே அதிகம் இடம் பெற்றுள்ளன.

விமர்சனத்திலும் புதிய் வானம் அக்கறை காட்டியது. அவ்வப்போது சில புத்தகங்களுக்கு ஆய்வுரை எழுதியது. கவிமணியின் கையறு நிலைப் பாடல்கள் என்ற ஒப்பியல் திறனாய்வுக் கட்டுரையைத் தொடர்ந்து வெளியிட்டது. நாட்டுப் பாடல்களைச் சேகரம் செய்து இதழ் தோறும் பிரசுரித்து வந்தது.

சமுதாயப் பார்வையோடு கதைகள், கவிதைகள் எழுதவேண்டும் என்ற முற்போக்கு இலக்கிய உணர்வை அது இளைஞர்களிடம் தூண்டி விட்டது. புதிது புதிதாகப் பலர் எழுதலானார்கள். புதிய வானம் போன்ற வெளியீட்டைப் பிரசுரிக்கும் முயற்சியும் இதர சில அணியினரிடையே தலைதுாக்கியது.

இதெல்லாம் புதிய வானம் நண்பர்களுக்கு மகிழ்ச்சி தந்தது. ஆனாலும், அவர்கள் தங்கள் சுயவிமர்சனத்தில் ஒரு உண்மையைச் சிந்திக்கத் தவறவில்லை.

புதிய வானம் இலக்கிய ஏடு என்ற வகையில் தர வளர்ச்சி அடைந்து வருகிறது என்றாலும் உழைக்கும் மக்களின் கரங்களிலும் அது திகழ வேண்டும் அவர்களின் வாழ்வுப் பிரச்னைகளை, அணுகு முறை தெளிவினை அது ஏற்படுத்த வேண்டும், சமுதாயத்தின் பிற் போக்குத்தனங்களை இனஞ்சுட்டி, முற்போக்கு முனைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்றெல்லாம் நமது ஆசைகளை வெளியிட்டோமே; அவைகள் எந்த அளவிற்கு நிறைவேறியிருக்கின்றன என்பதை நின்று நிதானிக்க வேண்டியிருக்கிறது என்ற ஆசிரியக் குறிப்பு அதன் 9-ம் இதழில் காணப்படுகிறது.

1975 செப்டம்பர் மாதம் பிறந்தது புதிய வானம் ஒரு இன்பமான இயக்கப் பூர்வமான கூட்டு முயற்சியின் விளைவாக நன்கு வளர்ந்து வந்த புதிய வானம், சக்திகளை ஒருமுகப்படுத்தி, மக்கள் இலக்கியப் பாதை நோக்கி உறுதியுடன் அடியெடுத்து வைக்கும் கடமை உணர்ச்சியோடு செயல்பட்டது.

1977 ஜனவரி இதழை (14) ஜீவா மலர் ஆகவும், அக்டோபர் இதழை (16) பாரதி மலராகவும் வெளியிட்டது.

இடையில் ஏற்பட்ட தேக்கம் 16-ம் இதழுக்குப் பிறகு நீண்ட காலத் தேக்கமாக மூன்று வருடங்கள் நீடித்திருக்கிறது. மீண்டும் 1980 அக்டோபரில்தான் 17-ம் இதழ் பிரசுரம் பெற்றுள்ளது.

ஆசிரியக் குழுவில் சில பெயர் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. அந்த இதழின் ஆசிரியக் குறிப்பு இது

‘மூன்று ஆண்டுகளுக்கு முன்—

இந்திய வானில் சில பாழ் மேகங்கள் சூழ்ந்த இருட்டுப் பொழுதில் புதிய வானம் கண்ணுக்குத் தெரியாமல் போகவேண்டியதாயிற்று. அந்தச் சூழ்நிலைகளை இப்போது ஆராயத் தேவையில்லை என நினைக்கிறோம்.

மீண்டும் புதிய வானம் ஒரு விடியலின் வெளிச்சக் கீற்றை நோக்கித் தன் ஆர்வப் பயணத்தைத் தொடங்குகிறது.

இந்த மூன்று ஆண்டு இடைவெளியில் நமது குமரி மாவட்டக் கலை இலக்கியப் பெருமன்றத்தின் வளர்ச்சி பெருமிதத்திற்குரியது. மூன்று ஆண்டுகளுக்கு முன் மூன்று கிளைகள். இன்று ஏழு கிளைகளும் அதனை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் மைய அமைப்புமாகத் தன் செயல்பாடுகளை விரிவுபடுத்தி இருப்பதோடு, கூர்மைப்படுத்தவும் செய்து கொண்டிருக்கிறது.

மனிதாபிமான படைப்பாளிகள் நம் மன்றத்தில் பல்கிப் பெருகிய நிலை கிளைகள்தோறும் கையெழுத்து ஏடுகள் அவர்களின் புயல் கருக் கொண்ட மேகங்களைத் தாங்கிக் கொள்ள அந்தக் கையெழுத்து ஏடுகள் மட்டும் போதாது; புதிய வானம் மீண்டும் வந்தே தீர வேண்டும் என்ற நிலை.

பொருளாதார நெருக்கடிகளை உள்ளடக்கிக் கொண்டு புதிய வானம் இரு மாதத்திற்கொருமுறை கொண்டுவர எண்ணியுள்ளோம்.

முற்போக்குக் கலை இலக்கியப் படைப்பாளிகளின் ஆர்வமுனைப்புகளால் புதிய வானம் முன்னைவிட பன்மடங்கு வீச்சுடன் வெளிவரும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.’

அவர்களுடைய தன்னம்பிக்கையைப் பாராட்டலாம். ஆயினும், கால ஓட்டத்தில் அவர்களது இந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும்.