தமிழில் சிறு பத்திரிகைகள்/வாசகன்‌

விக்கிமூலம் இலிருந்து

32. வாசகன்


பிரமாதமாக எதையும் சாதிக்க இயலாது போயினும் புதுமையாக ஏதாவது செய்துகாட்ட வேண்டும் என்ற துடிப்பு இளைஞர்களுக்கு ஏற்படுகிறது. கலை, இலக்கியங்களில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களாக இருந்தால் அவர்கள்-தனித்தனியாகவோ, சிலராகச் சேர்ந்தோசிறு பத்திரிகை ஒன்றை நடத்த முற்படுகிறார்கள். .

அப்படி ஒரு உந்துதலின் பேரில் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகைதான் 'வாசகன்'. அதை பத்திரிகை என்றுகூட அவர்கள் சொல்ல விரும்பவில்லை. ஒரு தமிழ் இலக்கிய வரிசை ('எ டமில் லிட்டரரி ஸிரீஸ்’) என்று அறிவித்துக் கொண்டார்கள்.

‘மெட்ராஸ் யூத் ஃபோரம்' என்ற அமைப்பின் வெளியீடு ஆக வந்த 'வாசகன்' மாலன், அக்ரிஷ் இருவரையும் ஆசிரியர்களாகக் கொண்டிருந்தது.

‘சும்மா நடக்கவே' வாசகன் வெளிவருவதாக அதன் ஆசிரிய அறிவிப்பு கூறியது. ஏழாவது இதழில் பிரசுரமான அந்த அறிவிப்புபுதுமையானது—உண்மைகளை எடுத்துக் காட்டுவது. அது பின்வருமாறு:

'ஒரு செப்டம்பர் பிற்பொழுதில் வாசகன் வெளியாயிற்று.

கால இயக்கத்தோடு ஏதும் ஒப்பந்தங்கள் அற்று. எதையும் ஸ்தாபிக்க அல்ல. இயங்க. -

காலப் பிரக்ஞையும், ஸ்தாபனங்களும்தான் எதிரி, கலைக்கும் படைப்பாளிக்கும்.

காலத்தின் துரித நடையுடன் ஓடி ஓடி நடக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இலக்கியச் சிற்றேடுகள் தங்கள் பாதை பிறழ்ந்தவாறு இழுபட்டுப் போகின்றன.

ஒரு படைப்பாளியின் கூர்மைகள் ஸ்தாபனம் சீராக இயங்க வேண்டிய நிர்வாகக் காரணங்களில் சிதறிப் போகின்றன.

ஸ்தாபனமாகிப் போகும் இயக்கத்தில் தமிழ்ச் சிற்றேடுகள் எல்லாம் ஒரு தேர்ந்த படைப்பாளியைப் பலி கொடுத்திருக்கின்றன.

எங்களைப் பலிகொடுத்துக் கொண்டு எதையும் ஸ்தாபிக்க விருப்புமில்லை எங்களுக்கு.

அரவான்கள் கிடைக்காமல் குருக்ஷேத்திரம் நிற்குமானால் போகட்டும்.

இது பற்றி விழிப்போடிருந்தது வாசகன்.

அதன் துவக்கம் நேர்ந்த அந்த மாலையிலேயே இது பற்றி முழுப் பிரக்ஞையுடன் பேசிற்று.

நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொண்டும் தொடர்ந்து அதன் தெளிவான நினைப்புடன் இயங்குகிறது.

எந்த இடத்தையும் அடைய அல்ல. சும்மா நடக்கவே விரும்புகிறோம் நாங்கள்.'

வாசகன் முதல் இதழ் 1973 செப்டம்பரில் வெளியாயிற்று. அதன் ஏழாவது இதழ் 1976 ஆகஸ்டில் பிரசுரமாயிற்று.

ஒவ்வொரு இதழிலும் தரமான கவிதைகளையும், வித்தியாசமான சிறுகதைகளையும், கவிதை—கலை சம்பந்தமான சிந்தனைக் கட்டுரைகளையும் வாசகன் வெளியிட்டுள்ளது. தமிழில் ஆங்கிலத்தைக் கலந்து எழுதுவதில் உற்சாகம் காட்டியது.

அதில் வந்த சில தலைப்புகள் ஆங்கிலத்திலேயே இருந்தன. PERVERT பாண்டியனின் A to Z (இது இலக்கிய அக்கப்போர் பகுதி); ‘SORRY FOR THE DISTURBANCE’ ( ஆசிரியர் குறிப்புகள்). சில கவிதைகள், கதைகள் ஆங்கிலத்திலேயே தலைப்பு பெற்றிருந்தன.

எழுத்தாளர்கள்— கவிஞர்கள் சிலர் ஓவியர்களாகவும் முன்னேற முயன்றார்கள். அவர்களது புதுமை ஓவியங்களை சில இதழ்களின் அட்டைச் சித்திரமாக வாசகன் அச்சிட்டு அவர்களது முயற்சியை ஊக்குவித்தது. உதாரணமாக, இரண்டாவது இதழில் பாலகுமாரன் வரைந்த ஓவியம், மூன்றாவது இதழ் அட்டையில் கல்யாண்ஜி ஓவியம்.

தமிழ்க்கவிதைகள் பற்றிய ஞானக்கூத்தன் சிந்தனைகள் : வாசக நோக்கில் தமிழ்ச் சிறுகதைகள்- தி. க. சிவசங்கரன்; ஸோல்ஸெனிட்ஸின் தோற்றங்கள்— ரேமண்ட் வில்லியம்ஸ் எழுதியதன் தமிழாக்கம் (மாலன்) என் சினிமா, மணி கௌல்— ஆங்கிலக் கட்டுரையின் மொழி பெயர்ப்பு (வெங்கட்சாமிநாதன் கவிதை—என் நோக்கு கோ. ராஜாராம்— வாசகன் இதழில் வெளிவந்த குறிப்பிடத்தகுந்த கட்டுரைகள் இவை.

வாசகன் சாதனை என்று குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டியது அதன் ஏழாவது இதழ் ஆகும்.

உண்மையில் அது ஒரு 'இதழ்' அல்லது ஏடு இல்லை. ஒரு தனிப் புத்தகம் அது. பதினொரு சிறுகதைகளின் தொகுப்பு

‘வாசகன்—ஒரு தலைமுறையின் பதினொன்று சிறுகதைகள் என்றே அது பெயரிட்டிருந்தது அதில் கண்ட அறிமுகம்

‘இந்த பதினொன்று சிறுகதைகள்.

ஒரு தலைமுறையின் தரிசனங்கள் வெளிப்பாடுகள், கோபங்கள், புழுக்கங்கள், முறுவல்கள், முணுமுணுப்புகள், தன்னுணர்வுகள்.

இந்த எல்லாக் கதைக்குள்ளும் இருக்கும் ஒவ்வொரு இளைஞர்களும் வெளியிலும் இருக்கிறார்கள்.

எழுதியவர்களாக, படிப்பவர்களாக,

நீங்களாக, நாங்களாக,

இவை இந்த தலைமுறையின் நிஜங்கள்.

இத்தொகுப்பில் உள்ள கதைகள்

1. நான் பர்ஸ் திருடிய நாள்—ஆதவன்

2. இருட்டில் நின்ற...—சுப்ரமண்ய ராஜு

3. அந்தத் தெருவின் முடிவில் ஒரு சுடுகாடு—ஜெயபாரதி

4. விளிம்பு—பாலகுமாரன்

5. நடப்பு—வண்ணதாசன்

5. 29—மாலன்

7. ஒரு கடிகாரத்தைச் சுற்றும் கனமான முட்கள்—இந்துமதி

8. நேர்க்கோடுகளும் கோணல் கோடுகளும்—எம். சுப்பிரமணியம்

9. பார்ட்டி—ஸிந்துஜா -

10. புதியதோர் வேள்வியின் துவக்கம்—கபந்தன்

11. கோட்டு-கலாஸ்ரீ

இலக்கிய ரசிகர்கள் படிக்க வேண்டிய நல்ல சிறுகதைத் தொகுப்பு இது.