உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழில் சிறு பத்திரிகைகள்/முழக்கம்‌

விக்கிமூலம் இலிருந்து



35. முழக்கம்


மிகப் பரவலான சர்குலேஷனைக் கொண்ட வணிகப் பத்திரிகைகள், தங்கள் வாசகர்களை கவர்ச்சிப்பதற்காக, தரக்குறைவான— பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் சிதைத்துச் சீரழிக்கக் கூடிய— விஷயங்களையும் சித்திரங்களையும் உற்சாகமாக வெளியிடுவதை ஒரு வியாபார உத்தியாகக் கையாண்டு வருகின்றன. பலப்பல வருடங்களாகவே.

இலக்கிய வளர்ச்சியையும் சிந்தனை விழிப்பையும் நோக்கமாகக் கொண்ட சிறு பத்திரிகைகள், பெரிய பத்திரிகைகளின் இந்தப் போக்கைச் சுட்டிக்காட்டி, சூடாக விமர்சித்தும் கண்டித்தும் கருத்துப் பிரச்சாரம் செய்யத் தவறியதில்லை. தாமரை, உதயம் போன்ற ஏடுகள் இப்பணியைத் தீவிரமாகவே செய்திருக்கின்றன.

இந்த எதிர்ப்புக் குரலை முதலாவது இதழிலேயே வீரமுழக்கம் செய்து கொண்டு மற்றொரு தரமான இலக்கியப் பத்திரிகை தோன்றியது 1980 ஜனவரியில்.

அதன் பெயரே 'முழக்கம்'தான்.

பூம்புகார்—மேலையூர் (சீர்காழி வட்டம் ) என்ற இடத்திலிருந்து வெளிவந்த முழக்கம் காலாண்டு ஏடு ஆகும்.

'புது இதழ்கள் தமிழில் நிறையவே வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவற்றின் குறிக்கோள் பணம்.

பரபரப்பான ரசனை, பயனில்லாத பொழுதுபோக்கு இவற்றுக்காகத் தமிழ் மக்கள் நிரம்பவே செலவழிப்பார்கள் என்பதையுணர்ந்து அவை இயங்குகின்றன.

பெண்களைத் தூரிகையால் துகிலுரிகின்ற ஓவியத் துச்சாதனர்களும் வக்கிரத்தையே மையாக்கி எழுதும் எழுத்து வணிகர்களும் விலங்குகளின் நிலைக்குத் தமிழ் வாசகர்களை அழைத்துச் செல்லும் கொடுமை நிகழ்கிறது.

ஆபாசங்களையே அழகுகளாகவும், வக்கிரங்களையே மேன்மைகளாகவும் ஏற்றுக் கொள்கிற அளவு பல வாசகர்கள் மந்தப்பட்டுப் போய் விட்டனர்.

சமுதாய ரீதியான ஒரு பண்பாட்டுச் சிதைவின் எல்லா அலங்கோலங்களையும். பணத்திற்காகவே திட்டமிட்டு வளர்க்கும் வியாபாரப் பத்திரிகைகள் நாளுக்கு நாள் வலிமை பெறுகின்றன.

இவ்வியாபாரப் பத்திரிகைகளின் நடுவே, உயர்ந்த குறிக்கோள்களோடு கூடிய இலக்கிய ஏடுகள் வெற்றி பெற முடியுமா ? வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையோடுதான் முழக்கம் ஒலிக்கிறது.

வெற்றி என்பதை விற்கப் போகும் பிரதிகளின் எண்ணிக்கையை வைத்து முடிவு கட்டப் போவதில்லை. நடுவில் நின்று போய்விடாமல் தொடர்ந்து வெளிவருவதே கலை—இலக்கிய ஏடுகளுக்கு ஒரு வெற்றி தானே!' ( முழக்கம்-முதல் இதழ்,)

இவ்விதம் சிந்தித்து, அந்தச் சிந்தனையை முழக்கம் ஆக்கத் துணிந்தவர் ஆ. செகந்நாதன், எம். ஏ. அவர் மேலும் அறிவித்தார்:

'முழக்கம் இதழின் நோக்கம் என்ன?'

இப்படி நண்பர்கள் வினவியபோது, திட்டவட்டமான விடையை உடனடியாக என்னால் தரமுடியவில்லை. இலக்கிய ஏடாக இது இருக்கும்; கவிதை, சிறுகதை, ஆய்வு, சமுதாயப் பிரச்னைகள் பற்றிய கட்டுரை இவை இருக்கும் என்று கூறினேன். இவை பத்திரிகையின் உள்ளடக்கமே தவிர நோக்கம் அல்லவே !

பின் எதுதான் நோக்கம் ? இலக்கியத்தை ஊடகமாக்கிச் சமுதாய ரீதியான ஒரு விழிப்புணர்ச்சியை உருவாக்குவதுதான் நோக்கம் என்பது ஓரளவு சரியாக இருக்கும். இதைவிட அதிகமான கனவுகள் இப்போது வேண்டாம். சொப்பனக் கூடங்களில் இறக்கை கட்டிக் கொண்டு மிதப்பதைவிட நாம் வாழும் நிஜமான மண்ணில் புரள்வதுகூட மேலானது. இந்த ஏடு நிஜங்களை அறிமுகப்படுத்தும். நிழல்களை அடையாளங் காட்டும்'.

முழக்கம் முதல் இதழே நம்பிக்கை அளிக்கும் தரமான தயாரிப்பாக அமைந்திருந்தது.

புவியரசு, வல்லிக்கண்ணன், சக்திக்கனல், ஆ. தனஞ்செயன், செந்நீ, தீவண்ணன் மற்றும் சிலரது கவிதைகளோடு கலில் கிப்ரான் கவிதை ஒன்றின் தமிழாக்கமும் இடம்பெற்றிருந்தது.

இலக்கிய விவகாரங்கள்— ஒரு விசாரணை என்ற தலைப்பில் ஜெயகாந்தன் விமர்சனம் செய்யப்பட்டிருந்தார். ஆழ்ந்த அவ்விமர்சனத்தை எழுதியவர் க. வீரையன்.

உழைக்கும் வர்க்கத்துடன் ஒரு சந்திப்பு (பூம்புகார் மீனவர்கள் நிலை பற்றிய கட்டுரை), ஒரு குடியரசில் சில நாடகங்கள் ( கல்வித் துறை பற்றிய நையாண்டி சித்திரம் ), ரசிகனின் குறிப்பேட்டிலிருந்து ( சுவாரஸ்யமான நடைச்சித்திரம் ) ஒரு கதை, சில புத்தகங்களுக்கு மதிப்புரை—இவ்வளவும் இருந்தன. ஆனந்த விகடன் அளவில் 66 பக்கங்கள். ஆர்ட் பேப்பர் அட்டை அட்டையில் வர்ணச் சித்திரம் உண்டு.

இரண்டாவது இதழின் முகப்புத் தோற்றம் எடுப்பாக இருந்தது: விஷய கனம், ஆழம் என்பது குறித்து ஆ. செகந்நாதன் தெளிவான ஒரு விளக்கம் தந்திருந்தார்.

‘இன்னும் ஆழமாகவும், கனமாகவும் முழக்கம் வரவேண்டுமென்று சிலர் எழுதியுள்ளனர். இந்தக் கருத்தில் எனக்கொன்றும் முரண்பாடு இல்லை. ஆனால் ஆழம், கனம் இவற்றுக்கு அவர்கள் கற்பிக்கும் விளக்கத்தில்தான் எனக்கு உடன்பாடில்லை. எந்த விஷயம் சமுதாய விழிப்புக்கு அவசியமோ அதைச் சொந்த சிந்தனையோடு அலசிப் பார்ப்பதும், எந்த விஷயம் கலை இலக்கிய வளர்ச்சிக்குப் பயன்படுமோ அதை அழுத்தமாக வரைவதும்தான்— ஆழம், கனம் இவற்றின் அர்த்தங்கள் என்று முழக்கம் கருதுகிறது.

கனமாக எழுதவேண்டும் என்பதற்காக, வேண்டுமென்றே காங்கோ காடுகளிலுள்ள ஒரு நூதன விலங்கு எப்படிக் குட்டி போடுகிறது என்று எழுதுவதால் யாருக்கு என்ன பயன் ?

எழுதப்படுகிற செய்தியைத் தாண்டிக் கொண்டு—தன்னை எப்படியாவது ஒரு அறிவு ஜீவியாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற அரிப்பில் மட்டுமே வரும் படைப்புகளை ஆழமானவை என்று ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மை முழக்கத்திற்கு இல்லை. மக்களை நேரடியாகத் தொடக்கூடிய கலைத்தன்மை நிறைந்த படைப்புகளை முழக்கம் தொடர்ந்து தரும் (முழக்கம்-2).

இவ்விதம் அறிவித்த 'முழக்கம்' இதைச் செயலில் காட்டத் தீவிரமாக முயன்றதை அதன் இதழ்கள் காட்டின.

இரண்டாவது இதழில், 'வல்லிக்கண்ணனுடன் ஒரு பேட்டி' யில், தமிழ் எழுத்துலகின் தொடர்பாகச் சில சிந்தனைகள் உரையாடப் பெற்றுள்ளன.

‘விமர்சனமில்லாத இலக்கியம் விளக்கில்லாத தெருக்களைப் போல’ என்று ஒரு சிந்தனையை எடுத்துக் கூறிய முழக்கம் விமர்சனக் கட்டுரைகளைப் பிரசுரிப்பதில் ஆர்வம் காட்டியது.

'இலக்கிய விவகாரம் பகுதியில் க. வீரையன், தி. ஜானகிராமன் படைப்புகளை விமர்சனத்துக்கு உள்ளாக்கி, தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'நவீன இலக்கியவாதிகள்— ஒரு பார்வை என்று த. தியாகராசன் எழுத்துலகில் காணப்படுகிற ஆரோக்கியமற்ற போக்கு ஒன்றைச் சட்டிக்காட்டினார்.

‘தமிழ் இலக்கியத் துறை இன்று ஒரு நோய்க்கு ஆட்பட்டிருக்கிறது. பொதுவான நோக்கில் வளர்ச்சியைக் கண்டு வரும் படைப்பு இலக்கியவாதிகளும், விமர்சகர்களும் அர்த்தமில்லாத சில மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களையே மையமாக்கிக் கொண்டு வெறும் ஆரவாரம், ஜம்பம் இவையே முதல் தரமான இலக்கியவாதியின் இயல்புகள் என்று கருதிக் குழம்பியிருக்கிறார்கள். ஒருவரையொருவர் நாகரிக விளிம்பைத் தாண்டித் தாக்கிக் கொள்வதற்கும் தங்களுக்குள்ளாகவே மிதப்போடு முழங்கிக் கொள்வதற்கும் இவர்கள் சூட்டுகிற அல்லது கருதுகிற பெயர் தான் என்ன? பெருமிதமா ? அல்லது வறட்டு ஜம்பமா என்று தெரியவில்லை. எந்த எழுத்தாளனுக்கும் அவனது சுயமிதப்பு கல்லறை கட்டி விடும். அவனது சுடர்மிகும் எழுத்துக்கள் கூட அவனது திமிர்த்தனத்தால் அஸ்தமித்துப் போய்விடும்.’

ஊன்றி உணர்தற்குரிய இத்தகைய உண்மைகளை வெளிப்படுத்தியது இந்தச் சிந்தனைக் கட்டுரை.

'புதுமைப்பித்தன் கதைகள் இன்றும் புதுமையே' என்றொரு ஆய்வை இரெ. சண்முகவடிவேல் எழுதியிருந்தார். மற்றும் கதைகள், ஓரங்க நாடகம், கவிதைகள் ஆகியவற்றையும் இரண்டாவது இதழ் கொண்டிருந்தது.

'ஒரு இலக்கிய இதழுக்கு ஏற்படக்கூடிய வாடிக்கையான சிக்கல்களை' முழக்கமும் சந்தித்துக் கொண்டிருந்ததால், இந்தக் காலாண்டு ஏடு காலம் தவறுவதையும், மிகுந்த தாமதத்தை அனுஷ்டிப்பதையும், பக்கங்களைக் குறைப்பதையும், நீண்ட இடைவேளைக்குப் பிறகு இரண்டு இதழ்களை ஒன்றாக்கி வெளியிடுவதையும் நடைமுறையாகக் கொள்ள நேரிட்டது.

1982—ல் முழக்கம் பாரதி மலராக ஒரு இதழைத் தயாரித்து வெளியிட்டது. அது நல்ல கட்டுரைகளைக் கொண்டிருந்தது. பாரதியும் பண்பாடும் ( த. அகர முதல்வன் , மனம் வெளுக்க வேண்டும் ! ( சக்திக் கனல் ), பாரதியின் கடவுள் கொள்கை (பாரதிப் பித்தன்) பாரதி என்னும் பொதுவுடமைவாதி, பாரதியின் சமுதாய எதார்த்தப் பார்வை, பாரதி வழியில் தமிழ்க் கவிதை என்ற தலைப்புகளில் பாரதி படைப்புகள் குறித்த பல்வேறு பார்வைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

கடைசி மூன்று கட்டுரைகளை ஆ. செகந்நாதன் எழுதியிருந்தார். இவை தரமான ஆய்வுகள் ஆகும். மூன்றாவது கட்டுரையில் பாரதிக்குப் பின் வந்த தமிழ்க் கவிஞர்களை விரிவாகவும், விருப்பு வெறுப்பற்ற நோக்குடனும் அவர் விமர்சித்துள்ளார். அவருடைய முடிவுரை சிந்தனை ஒளி கொண்டது; சிந்திக்கத் தூண்டுவது.

அந்தப் பகுதி இது தான்

‘பாரதிக்குப் பின்னர் தமிழ்க் கவிதைகள் பெருகியுள்ளன என்பதில் மறுப்பில்லை. பாரதி தனக்கு முன்னர் இருந்த பிற்போக்குத்தனங்களை யெல்லாம் விட்டுவிட்டுப் புதுமைகளைப் படைத்தான். பாரதியின் கவிதைகளை மூன்று முக்கியமான தன்மைகளுக்காகப் போற்றுகிறோம்.

1. சமுதாய மாற்றங்களை வரவேற்ற முற்போக்குத்தனம். 2. பாரதியின் உணர்வோடு இயைந்த உண்மைத்தன்மை. 3. இனிமையும் எளிமையும்.

இம் மூன்று தன்மைகளும் ஒருங்கே நிலவும் கவிதைகளை வேறு யாரிடமும் காண இயலவில்லை என்பது அவநம்பிக்கையால் எழுந்த முடிவல்ல. பாரதிக்குப் பின் வந்தோர் பலர் முற்போக்குத்தன்மை, எளிமை, இனிமை ஆகியவற்றில் பாரதிக்கு வாரிசுகளே. ஆனால் அரசியல் கட்சிச் சார்பு, வயிற்றுப் பிழைப்பு உத்தியோகம் ஆகியவற்றால் விளைந்துள்ள சந்தர்ப்பவாதப் போக்கும் அச்சமும் அவர்களை முடக்கி விட்டன. பாரதிதாசன், கண்ணதாசன், சுரதா, முடியரசன் ஆகியோரின் கவிதைச் சாதனைகளை ஒடுக்கியது கட்சிச் சார்புகளே. மேத்தா, மீரா, சிற்பி, புவியரசு, தமிழன்பன் என்று நீளும் பட்டியலும் ஒரு மகாகவியின் உதயத்தைத் தடுப்பவை, உத்தியோகம் விளைவிக்கும் அச்சமும் ஜாக்கிரதை உணர்ச்சியுமே.

அச்சமே நரகம் அதனைக் கட்டு
நல்லதை நம்பி நல்லதே செய்க

என்றான் பாரதி, அச்சத்தை வென்றவர்கள் தங்களைப் பாரதியின் வாரிசுகளாகக் கூறிப் பெருமிதமுறலாம். தன்னம்பிக்கையோடு அப்படிப் பெருமிதமுறும் தகுதி வாய்ந்தவர்களிடையே நாளையே ஒரு மகாகவி தோன்றுவான்.’

செகந்நாதனின் இந்த விமர்சனம் கவிதை எழுதுவோரிடையே ஒரு விழிப்பு உணர்வைத் தோற்றுவித்தால் நல்லது.

'முழக்கம்' இந்தச் சிறப்பு இதழில் பாரதி சம்பந்தமான கட்டுரைகளோடு வேறு சில விஷயங்களும் இடம் பெற்றிருந்தன. கண்ணதாசன்—ஒரு மதிப்பீடு (ஆ. இராமச்சந்திரன் ; முதல் மூன்று தமிழ் நாவல்கள் (ஒரு மதிப்பீடு)—வல்லிக்கண்ணன், மக்கள் கவிஞர் கே. சி. எஸ். அருணாசலம் அவர்களுடன் ஓர் உரையாடல்; சில கவிதைகள் ஆகியவை இதழின் விஷயச் சிறப்புக்கு மேலும் கனம் சேர்த்துள்ளன.

1983 இதழ் ஒன்றும் விஷய கனம் பெற்றிருந்தது. 'தமிழ் நாவல்களின் உள்ளடக்கம் என்ற வல்லிக்கண்ணன் ஆய்வும், புதிய கவிதையில் மார்க்லியத் தாக்கம் பற்றிய ஆ. செகந்நாதன் ஆய்வும் இலக்கிய மாணவர்களுக்கு நல்ல விருந்து ஆகும்.

1983 டிசம்பர் எனத் தேதியிட்ட முழக்கம் இதழின் முக்கிய அம்சமாக மேத்தாவின் புதுக்கவிதைகள் பற்றிய ஆ. செகந்நாதன் ஆய்வு அமைந்துள்ளது. மேத்தாவின் கவிதைகளில் உள்ள சிறப்புகளையும் குறைபாடுகளையும் இந்த விமர்சனம் சுட்டிக்காட்டுகிறது. ஆ. தனஞ் செயன் கவிதை, இலங்கையில் ஓர் ஒத்திகை மற்றும் புத்தக மதிப்புரை, தகவல்கள் இந்த இதழின் உள்ளடக்கம் ஆகும்.

இலக்கிய விமர்சனத்தில் அதிக அக்கறை காட்டிய முழக்கம் கால தாமதத்தைத் தவிர்க்க இயலாது போயினும், தொடர்ந்து பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பினும், ஓய்ந்து நிற்காது வெளிவரும் என்று அதன் ஆசிரியர் கூறியபோதிலும், காலம் அதற்கும் முடிவு கட்டிவிட்டது.