உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழில் சிறு பத்திரிகைகள்/சில புதிய முயற்சிகள்‌

விக்கிமூலம் இலிருந்து



36. சில புதிய முயற்சிகள்


தமிழ்நாட்டின் கலை, இலக்கியப் பத்திரிகை நிலைமைகளில் அதிருப்தி கொண்டு— உலக நாடுகளில் நிகழ்கிற முயற்சிகளையும் வளர்ச்சிகளையும் கவனித்து, அவைபோல் எல்லாம் தமிழில் இல்லையே என்று மன உளைச்சல் கொண்டு— தமிழிலும் சகல துறைகளிலும் புதுமைகள் படைக்க வேண்டும் என்று ஆசையும் உந்துதலும் கொண்டு, அவ்வப்போது புதிய முயற்சிகள் சிறு பத்திரிகைத் துறையில் மேற்கொள்ளப்படுவதும் இயல்பாக இருந்து வருகிறது.

இந்த விதமான முயற்சிகளில் இரண்டு— 'காற்று’, ‘தேடல்' என்பவை ஆகும்.

‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்— கலைச் செல்வங்கள் யாவும்—கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!' என்ற பாரதி வாக்கை குறிக்கோளாகக் கொண்டு 'காற்று' கோயம்புத்தூரில் தோன்றியது. நாடகக் கலையில் ஆர்வம் மிகக் கொண்டுள்ள கவிஞர் புவியரசு அதன் ஆசிரியர்.

‘யுகோஸ்லாவியக் கவிஞர் 'வாஸ்கோ பாப்பா' பற்றிய அறிமுகமும், அவரது கவிதைகள் சிலவும், யூஜின் அயனெஸ்கோ அறிமுகமும், அவரது நாடகமான தலைவர் தமிழாக்கமும் முதல் இதழில் தரப்பட்டிருந்தன. சத்யஜித் ரேயின் திரைப்படக் கலை சம்பந்தமான சிந்தனைகள் (அவர் பிலிம்ஸ், தேர் பிலிம்ஸ் என்ற நூலிலிருந்து எடுக்கப் பெற்றவை) 'தேடல்' எனும் தலைப்பில் இடம் பெற்றன. சி. ஆர். ரவீந்திரன் கதை ‘ஜனனம்' உண்டு.

புவியரசு எழுதியிருந்தார்—

‘சில புதிய முயற்சிகள்— பத்திரிகை, நாடகம், சினிமா முதலிய துறைகளில்.

கனவுகள் நனவாகும் காலம் இது. மனதில் உறுதியுண்டு. கருத்தில் தெளிவுண்டு. வறுமை ஒன்று தவிர வேறு எந்தக் குறையும் இல்லை. அதையும் வெல்ல வேண்டும். வெல்வோம்.

'காற்று' முதல் மடலில் வெளிநாட்டுச் சரக்கு அதிகம் என்று நீங்கள் கருதலாம். அது அப்படித்தான் இருக்கும். அதற்கு இணையான மிகச் சிறந்த படைப்புகளை நண்பர்கள் அனுப்பினால் மகிழ்ச்சியோடு அதற்கு முதலிடம் தருகிறோம்.

இது பாட்டாளிகள் ஏடல்ல. படிப்பாளிகளுக்கான ஏடு. படைப்பாளிகளின் பாலம்.

மனித வரலாற்றில் தத்துவப் போராட்டம் நிலையானது. இது, அக, புற வயப் பார்வை முரண்பாடுகளின் மோதல்களை அடிப்படையாகக் கொண்டது.

சர்வதேச ரீதியாகத் தொடர்ந்து ஏற்படும் அரசியல், பொருளாதார, கலாச்சார மாற்றங்கள் ஒவ்வொரு அமைப்பையும் பாதிக்கிறது.

மிக நீண்ட இலக்கியப் பாரம்பரியமுள்ள தமிழ் அஞ்சி, ஒடுங்கி தாக்கங்களிலிருந்து தப்பி ஒளிந்து, ராஜா ராணிக் காலத்துக் கனவுலகிலே வாழ்ந்துவிட முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இது முடியாத காரியம்.

அங்கங்கே பல உலகத் தாக்கங்களை ஏற்படுத்த வேண்டியது புத்தியுள்ள தமிழனின் கடமை.

இந்த நோக்கத்தோடு புதிய காற்று வீசுகிறது. உலக இலக்கியங்களையும், தரமான சுய படைப்புகளையும் அறிமுகம் செய்யும் களமாக இது அமையும் ( புவியரசு ).

‘காற்று' தரமான நாடகம், கவிதை, கதைகளைப் பிரசுரித்தது. ‘இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை' வெளிவரும் என்று திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அப்படி அது வரவில்லை. எப்பவாவதுதான் வந்தது. வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு இதழ் என்ற ரீதியில் இதுவரை சில இதழ்கள் வந்துள்ளன.

'தேடல்' திருநெல்வேலியில் தொடங்கப்பட்டது. ஆசிரியர்— ஜோதி விநாயகம். இவர் விமர்சன உணர்வை வலியுறுத்தும் நோக்குடன் இந்த இதழை ஆரம்பித்தார்.

'ஆங்கிலத்திலும் பிறமொழி இலக்கியங்களிலும் வந்திருக்கிற மரபுத் தொடர்ச்சியான நூல்களைப் பற்றி பலகோணங்களிலும் நின்று பார்க்கிற கட்டுரைகளும், அவை தொகுக்கப்பட்ட புத்தகங்களும் உண்டு. ஷேக்ஸ்பியர் பற்றின விமர்சனப் புத்தகங்களின் பட்டியலே ஒரு கல்லூரி நூலக விபரப் பட்டியலில் ஏழு பக்கம் வருகிறது. இங்கு நாம் தேர்ந் தெடுத்துக் குறிப்பிடுகிற புதுமைப்பித்தன், மெளனி, கு. ப. ரா; ந. பிச்ச மூர்த்தி, க. நா. சு. சி. சு. செல்லப்பா, லா, ச. ரா. தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி குறித்தே சரியான விமர்சனம் கிடையாது. இலக்கியக் கோட்பாடுகள் பற்றி அந்நிய நாட்டு இலக்கியங்களில் எவ்வளவோ விவாதங்கள் நடந்திருக்கின்றன. இங்கு எழுதுகிறவர்களுக்கே இலக்கியக் கோட்பாடுகள் வேண்டுமென்று தோன்றவில்லை (இலக்கியக் கோட்பாடுகளை வைத்துக் கொண்டு எழுதப் போவதில்லை—அது வேறு விஷயம்). தமிழாசிரியர்கள் எழுதி வந்திருப்பவை எவையும் கருத்தில் கொள்ளும்படியாய் இல்லை. தமிழாசிரியராய் இருப்பதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. வெளிநாட்டுப் பேராசிரியர்கள் யாரும் பேராசிரியர் என்கிற தகுதி பற்றி இல்லாது அவர்களுடைய இலக்கியப் பிரக்ஞையாலேயே இலக்கிய உலகில் இடம் பெறுகின்றனர். அவர்களுடைய இலக்கியப் பிரக்ஞையாலேயே அவர்கள் நல்லாசிரியர்களாகவும் இருந்தனர். இலக்கியக் கோட்பாடுகளும் நிர்த்தாட்சண்யமான விமர்சனங்களும் இலக்கிய உலகில் நிறையப் பேருடைய ஸ்தானங்களை நிர்ணயிக்கும். எழுதுவதெல்லாம் இலக்கியம் என்ற சுத்த சமரச சன்மார்க்க அபேதவாதம் மறையும். பொய்யான ஸ்தானங்களையும் அது பற்றிய மயக்கங்களையும் போக்கும். . 'தேடல்' விமர்சனக் கட்டுரைகளை ஓரளவும், சுய படைப்புகளை மிகுதியாகவும் வெளியிட்டுள்ளது. கலாப்ரியா, கல்யாண்ஜி, உமாபதி, விக்ரமாதித்யன் மற்றும் சிலரது கவிதைகள், பூமணி, வண்ணதாசன், ஜோதிவிநாயகம் கதைகள், சுந்தர ராமசாமி, நகுலன் கட்டுரைகள் பிரசுரமாயின. வண்ணநிலவன் ஒரு நாடகமும், கலாப்ரியா கவிதைகள் பற்றி விமர்சனமும் எழுதினார். கூத்தாட்டத்தில் 'பொண் வேஷம்’ என்ற விஷயம் பற்றி ராஜநாராயணன் சுவாரஸ்யமான ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

'தேடல்' 1978-ல் இரண்டு இதழ்களும் 1983-ல் இரண்டு இதழ்க ளும் வந்துள்ளன.