உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழில் சிறு பத்திரிகைகள்/விடியல்‌

விக்கிமூலம் இலிருந்து



37. விடியல்


‘‘விடியல்‘ விமர்சன நோக்கங்கொண்ட கலை இலக்கிய இதழாக வெளிவரும். விடியல் பிரசுரிக்கும் ஒவ்வொரு எழுத்தும் கடுமையான விமர்சனத்தை எதிர்நோக்கியே அச்சேறுகின்றன.

சுத்த இலக்கியம் படைக்கிறவர்கள், மக்கள் இலக்கியம் என்ற பெயரில் தவறான கண்ணோட்டத்துடன் எழுதுகிறவர்கள் ஆகியோர் கடுமையாக விமர்சிக்கப்பட்டால் புரட்சிகர இலக்கியத்தின் இலக்கு தெளிவாகும் என நம்புகிறோம். விடியல் இதைத் தொடர்ந்து செய்ய இருக்கிறது.

தத்துவக் கண்ணோட்டத்துடன் ஒரு விடியலுக்கான பயணத்தை மேற்கொண்டவர்களுக்கு இந்த இதழ் ஒரு கலை இலக்கியப் பாதையை அமைத்துத் தர முயலும். கரண்டலமைப்பைத் தகர்க்கும் வல்லமை பெற்ற புரட்சிகரத் தத்துவத்திற்கு விடியல் கடமைப்பட்டுள்ளது.‘

இவ்வாறு அறிவித்துக் கொண்டு, 1975 ஜனவரியில் ‘விடியல்’ தனது புறப்பாட்டைத் துவக்கியது. மாதப் பத்திரிகையாக சில இதழ்கள் மாசிகையாக வந்த பிறகு, 1976-ல் ‘மாதமிரு முறை‘யாக வளர்ந்தது.

மாத இதழில் இன்குலாப், பரிணாமன், கங்கைகொண்டான் ஆகியோரின் கவிதைகளைக் கடுமையாக விமர்சித்துக் கட்டுரைகள் பிரசுரமாயின. திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்களும் எழுதப்பட்டன. மற்றும் கதைகள், கவிதைகளும் இடம்பெற்றன.

கவிஞர்கள் பற்றிய தீவிரமான விமர்சனங்களை வெளியிடுவதன் காரணத்தையும் ஒரு இதழில் ‘விடியல்‘ குறிப்பிட்டது.

‘ஒரு பக்கம் சீறுவதும், மறு பக்கம் குடை பிடிப்பதுமான போக்கினைக் கவிஞர்கள் கையாண்டால் அவர்களின் படைப்புகள், மண்ணினைக் கிழித்துக் கதிர்களைக் குலுங்கச் செய்யும் கோடிக்கணக்கானோருக்கும், பெருத்த எந்திர ஒலிகளிடையே தங்களது உழைப்பையும் தேய்த்துக் கொள்ளும் லட்சக்கணக்கானோருக்கும் துரோகம் செய்வதற்குத் தான் கைலாகு கொடுக்கும். இதில் நம் கவிஞர்கள் கவனமாய் இருக்க வேண்டும். ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியில் நம்பிக்கை கொண்ட கவிஞர்கள் மட்டுமே தெளிவாக எழுத முடியும்.‘

ஆனாலும் இத்தகைய விமர்சனங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்படவில்லை.

1975 மே மாத இதழில் இலங்கைப் படைப்புகளுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டது. தெளிவத்தை ஜோசப்பின் ‘காலங்கள் சாவதில்லை’ என்ற நாவல் விரிவாக விமர்சிக்கப்பட்டிருந்தது.

விடியல் ஐந்தாவது இதழ் (ஜனவரி 1976 ) முதல், மாதமிருமுறையானதுடன், தனது போக்கையும் மாற்றிக் கொண்டது. ‘துணுக்குகளைக் கோத்தாற் போன்ற ஒரு வித்தியாசமான பாணியில் விஷயங்களைச் சொல்ல முயன்றிருக்கிறோம்‘ என்று இந்தப் போக்கைப் பற்றிய சிறு குறிப்பும் காணப்பட்டது.

பல நாடுகள் பற்றிய தகவல்கள், குறிப்புகள், வெளிநாட்டுத் தலைவர்கள் பற்றிய சிறு கட்டுரைகள் முதலியன பிரசுரமாயின. சிறு சிறு கவிதைகளும் இடம் பெற்றன. தரமான படைப்புகள் கிடைப்பது சிரமமாக இருப்பதே இதற்குக் காரணமாகும் என்று அறிவிக்கப்பட்டது.

உள்நாட்டுச் செய்திகளைவிட வெளிநாட்டுச் செய்திகளே அதிகம் தரப்பட்டுள்ளன. வெளிநாட்டுச் செய்திகளுக்குள்ள தனி வரவேற்பு கவனத்தில் கொள்ளப்படுகிறது. விடியல் இந்த மண்ணில் நின்று கொண்டுதான் உலகைப் பார்க்க விரும்புகிறது என்பது இங்கு தெரிவிக்கப்படுகிறது என்ற அறிவிப்பு எழுதவேண்டிய அவசியமும் விடியலுக்கு ஏற்பட்டது.

1976 ஏப்ரல் முதல் விடியல் வாரப்பத்திரிகையாக மாற்றம் கொண்டது. அரசியல் குறிப்புகள், அயல்நாட்டு விஷயங்கள், கேள்விபதில் பகுதி, உருவக் கதை—இவற்றுடன் மாணவன் எழுதிய குரல்கள் என்ற தொடர் நாடகமும் வெளிவந்தது. கலை இலக்கிய விவகாரங்கள், விமர்சனங்கள் முதலியன இடம் பெறவில்லை. இது குறித்து வாசகர்கள் குரல் கொடுத்ததும் உண்டு.

டாக்டர் கோவூர் பற்றிய ஒரு இதழைத் தயாரித்தது (இதழ்-16 ) விடியல். ‘தீ மிதித்தல், அலகு குத்திக் கொள்ளுதல், உடலில் கொக்கிகளை மாட்டிக் கொண்டு தொங்குகாவடி என கடவுளின் அருளால்’ செய்யப்படும் காரியங்கள் யாவும் கடவுட் செயல் அல்ல என்பதை விஞ்ஞான பூர்வமாக டாக்டர் கோவூர் வெளிப்படுத்துகிறார். கோவூரும் அவரைச் சார்ந்த பகுத்தறிவுவாதிகளும் மேற்கண்ட தெய்வீக (!) செயல்களை, கடவுள் இல்லை என்று முழக்கிக் கொண்டே செய்து காட்டி வெகு ஜனங்களிடையே நாத்திகப் பிரசாரத்தில் வெற்றி கண்டு வருகின்றனர். ஆவி, மறுஉலகு, பூர்வ ஜன்மம் போன்ற கட்டுக்கதைகளையும் இவர்கள் பொய்யாக்கி வருகிறார்கள் என்று அறிமுகமும், மற்றும் சுவையான தகவல்களும் தரப்பட்டன.

சீனாவின் தலைவர் மாவோ எழுதிய கவிதைகள், விஞ்ஞானி பாவ்லோவ் பற்றிய கட்டுரை, சோவியத் ரஷ்யாவின் போக்கைக் குறை கூறும் விஷயங்கள், அமெரிக்காவின் செயல்களைக் கண்டிக்கும் கட்டுரைகள் விடியலில் பிரசுரமாயின.

விடியல் டாக்டர் கோவூரை ஆதரித்துக் கட்டுரையும் செய்தியும் வெளியிட்டதை எதிர்த்தும் பாராட்டியும் கடிதங்கள் நிறைய வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல கடிதங்கள் வெளியிடப்பட்டன.

அடுத்து, ‘செக்ஸிலிருந்து மார்க்ஸியம் நோக்கி...‘ (வெண்மணி ராஜன் எழுதியது ) என்ற கதை ஒன்று வெளிவந்தது. அதுவும் சூடான விமர்சனங்களைக் கிளப்பி விட்டது.

விடியலின் 25 வது இதழ் (25-7-76) முக்கியமானது. அதில் விரிவான சுய விமர்சனம் ஒன்றை அது வெளியிட்டது.

அதன் சில பகுதிகள் பின்வருமாறு :

‘பொதுவாக விடியல் இதழ்கள் நெடுக ஏகாதிபத்திய எதிர்ப்புக் கட்டுரைகள்தான் இடம் பெற்றிருக்கின்றன. விடியல் தனக்குப் பிரதான எதிரியாக வரித்துக் கொண்டிருக்கிற நிலப்பிரபுத்துவத்தைக் கருவறுப்பதற்கு சொற்ப முயற்சியே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. நிலப்பிரபுத்துவத்தை மூர்க்கத்தனமாக எதிர்க்கும் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவை வெளியாவதற்கான வாய்ப்புக்களை அகலப்படுத்தியிருக்க வேண்டும்.

விடியலில் மிக அழுத்தமாகப் பதிந்துவிட்ட மூன்று குறைகள்... அவசியமாகக் குறிப்பிட வேண்டிய அவசியத்தைத் தந்திருக்கின்றன.

17 வது இதழில் வெளியான மாட்டு வண்டிகள் என்ற கட்டுரை.

2.10 வது இதழில் வெளியான கோவூரைப் பற்றிய பாராட்டுரை. மற்றும் அவற்றைத் தொடர்ந்து 19, 20 இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட ‘கோவூர் பொருள்முதல் வாதியா?‘ என்ற கடிதத் தொடர்.

3. 19 வது இதழில் வெளியான ‘செக்ஸிலிருந்து மார்க்லியம் நோக்கி‘ என்னும் சிறுகதை.

1. ‘இரயில்களைவிட அதிக பாரம் இழுக்கும் மாட்டு வண்டிகள்‘ என்ற கட்டுரை அடிப்படையிலேயே தவறான கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டுள்ளது.

‘மாட்டு வண்டிகள் உணவு தானியங்களை எடுத்துச் செல்லும் கிராமப்புறங்களின் பிரதான போக்குவரத்துச் சாதனமாக இருப்பதால்—இந்தியா ஒரு நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்புடைய நாடு என்கிற தொனியில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

சமுதாய அமைப்பு எத்தன்மை வாய்ந்தவை என்பதை இங்கு நிலவும் உற்பத்தி உறவுகளை வைத்துத்தான் தீர்மானிக்க இயலும். ஆனால் மேற்படி கட்டுரை உற்பத்திக் கருவிகளை வைத்து சமுதாயத்தை தீர்மானிக்கும் ஒரு கொச்சைத்தனமான கண்ணோட்டத்தினைத் தந்திருக்கிறது. அடிப்படையையே தகர்க்கும் இத்தவறு விடியலில் இடம்பெற்றது மிகத் தவறு. இதை விடியல் உணருகிறது.

2. ‘கோவூரின் சாதனைகள் பொருள் முதல் வாதத்திற்கு வலுவூட்டுகிறது என்பதால் டாக்டர் கோவூரை நாம் பாராட்டக் கடன்பட்டிருக்கிறோம்‘ என்று 16 வது இதழில் குறிப்பிட்டிருக்கிறோம்.

விமர்சனத்துடன் கோவூரையும் நாம் பார்த்திருக்க வேண்டும். கருத்தை—மனப்பான்மையை மாற்றினால் சமுதாயத்தை மாற்றிவிடலாம் என்று நம்புகிற வெறும் நாத்திகரான கோஆர்மீது விடியல் தனது விமர்சனத்தை வைக்கத் தவறிவிட்டது உற்பத்தி உறவுகளை ஒரு புரட்சியின் மூலம் மாற்றியமைத்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கொண்டுவரப் பாடுபடும் ஒரு மார்க்ஸிஸ்டாக கோவூர் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆணித்தரமாக கூறக்கூட முகமில்லாமல் போய்விட்டது வருத்தத்திற்குரியது.

3. 19வது இதழில் ‘செக்ஸிலிருந்து மார்க்சியம் நோக்கி...‘ என்ற வெண்மணி ராஜனின் சிறுகதை வெளியிடப்பட்டிருந்தது.

சுதந்திரமான செக்ஸ் உறவு என்பதில் ஒரு வரையற்று ஃப்ராய்டிச சூழலுக்குள் சிக்கிக் கொண்ட அந்த மார்க்ஸிய விரோதக் கதையை வெளியிட்டதில் விடியல் தலை குனிகிறது.

விடியல் தனது பயணத்தில் நிகழ்ந்த இத்தகைய வழுக்கல்களை உணர்ந்து கொள்கிறது. அவை இனி நேராது பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வினைக் கைக்கொள்கிறது.‘

இதை அடுத்து எழுதப்பட்ட அறிவிப்பு விசேஷ முக்கியத்துவம் வாய்ந்தது :

‘விடியல் கடந்த ஆறே மாதங்களில் அனைத்து அணிகளின் ஊடேயும் ஏற்படுத்தியுள்ள சலசலப்பு கொஞ்சநஞ்சமல்ல. திரிபுவாதிகளும் புரட்டல்வாதிகளும் விடியலின் உதயக் கதிர்களைக் கண்டு கதிகலங்கி போனார்கள். அவர்கள் விடியலைத் தொலைத்தே தீர்வது என்று விசேஷ அக்கறையுடன் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்தார்கள்—விடியல் தான் ஏற்றுக் கொண்ட தத்துவத்தின் பலம் கொண்டு இவற்றையெல்லாம் பொடிபடச் செய்து புறந்தள்ளியது.

இருபத்தைந்து இதழ்களைக் கொண்டு வந்திட்ட பெருமிதம் நம் தலைகளை நிமிர்த்தும் இந்த வேளையில் அதற்குக் காரணமான தோழர்கள் தன் நன்றியைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

ஊக்குவித்தும், உதவி செய்தும், போற்றியும், புகழ்பாடியும் விடியலைப் பேணிய அனைத்துத் தோழமை நெஞ்சங்களும், குறிப்பாக, கடல் கடந்த ஈழநாட்டின் தோழர்களும் இங்கு நினைவுகூரப்படுகிறார்கள்.

ஈழநாட்டின் தோழர்கள் இயக்கத்தைப் பற்றி தத்துவார்த்த ரீதியில் கடிதங்களில் விசாரித்திருந்தார்கள். இயக்கத்தோடு, அதாவது எந்த இயக்கத்தோடும் தொடர்பு வைத்திராத விடியல் அவற்றிற்குப் பதிலளிக்க முடியவில்லை. ஆனால் அரசின் கண்களுக்கு நாம் முக்கியப் புள்ளிகளாகிவிட்டோம் என்று தெரிந்தது. விடியலின் ஒவ்வொரு எழுத்தும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு கண்காணிக்கப்பட்டதுவிளைவு? கடிதங்கள் உடைக்கப்பட்டன-படுகின்றன. நமது தோழர்களுக் கிடையில் பணம் அனுப்பி உதவும் அவசியம் உணரப்படாததாயிருக்கிறது. அப்படித் தப்பித் தவறி சந்தாவென, நன்கொடையென வந்த மணியார்டர்கள் 'No such address' என்று காரணங் காட்டி (!) திருப்பி அனுப்பிவைகப்பட்டன.

இப்படிப்பட்ட நிலைகளுடன் மாரடித்துக்கொண்டு, அச்சகக் கூலி, காகிதம், பிளாக்குகள் என செலவழித்துக்கொண்டு, தொடர்ந்து பத்திரிகையைக் கொண்டுவர சாத்தியமில்லாமல் இருக்கிறது. எனவே இருபத்தைந்தாவது நிறைவு இதழான இந்த இதழுடன் விடியல் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இதழைத் தொடர்ந்து கொண்டு வருவது நீங்கள் தீர்மானிக்கிற விஷயம்.

அப்படியானால் இதழைத் தொடர்ந்துகொண்டு வரும் உத்தேசம் அல்லது அக்கறை உங்கள் தரப்பில் எப்படி என்று நீங்கள் கேட்பீர்களானால் தனது நியூரைன்லாந்து கெஸ்ட் பத்திரிகையை நிறுத்த நேர்ந்த பொழுது மாமேதை மார்க்ஸ் குறிப்பிட்டதை மீண்டும் சொல்வது மிகப் பொருந்தும் :

‘எங்களது கருத்தை யாரும் அழிக்க முடியாது. நாங்கள் மீண்டும் ஒரு போர்க் குதிரையின் மீது ஏறி வருவோம். விடைபெற்றுக் கொள்கிறோம். ஆனால் கடைசி முறையாக அல்ல.‘

25 வது இதழின் கடைசிப் பக்கத்தில் கடைசி விஷயமாக ஒரு சீனக் கவிதை அச்சிடப்பட்டது. அதன் தலைப்பு: ‘நன்றி! போய் வருகிறோம்.’

கடைசி வரியும் இதுவேதான்–

சிறு பத்திரிகை வரலாற்றில் விடியலின் வரலாறு வித்தியாசமானது— தனி ரகமானது. இது மேலே சொல்லியுள்ள விவரங்களிலிருந்து புலனாகும்.

‘விடியல்‘ 21-ஏ, குட்டி மேஸ்திரி தெரு, சென்னை-1 என்ற விலாசத்திலிருந்து வெளிவந்தது, அதன் ஆசிரியர் : கே. எம். வேணுகோபாலன்.