உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/008-066

விக்கிமூலம் இலிருந்து

பிள்ளையவர்களின் அன்பு

ஒரு முறை ஏதோ சிறிய மன வேறுபாட்டால், பிள்ளை, ஆசிரியரிடம் பேசாமல் இருந்தார். ஒரு நாள் இரவு மடத்தில் பந்தி நடந்தது. யாவரும் உண்ணும் அந்தப் பந்தியில் பிள்ளையும் அமர்ந்து இருந்தார். இடையில் யாரும் எழும் பழக்கம் இல்லை. அன்று எல்லோரும் எழுவதற்கு முன் பிள்ளை எழுந்து வெளியில் வந்தார். விளக்கு இல்லாத ஒரு திண்ணையில் படுத்திருந்த ஆசிரியரைப் பார்த்து, "சாமிநாதையரா? ஆகாரம் ஆயிற்றா?" என்று கேட்டார். அதுவரைக்கும் பேசாமல் இருந்த ஆசிரியர் தம்மிடம் அன்புடன் விசாரித்ததைக் கேட்டவுடன் இவருக்கு உணர்ச்சி விஞ்சி நின்றது. மறு நாள் யாவரும் ஆசிரியரைப் பார்த்தி, "பிள்ளைக்கு உம்மிடம் இருக்கிற அன்புதான் எத்தனை சிறப்பானது! பத்தியின் நடுவில் எழுந்து வந்து விட்டாரே!" என்று சொல்லி வியந்தார்கள்.

மகாவைத்தியநாதையர் என்னும் இசைப் பெரும் புலவரைத் திருவாவடுதுறையில்தான் ஆசிரியர் முதல் முதலில் சந்தித்தார். அப்போது சந்நிதானத்தின் ஆணைப்படி மகாவைத்தியநாதையர் சில பாடல்களைப் பாடினார். அவர் பாட்டு, தேவகானமாக இருந்தது கண்டு இவர் மிகவும் வியப்பு அடைந்தார். மகா வைத்தியநாதையரின் தமையனார் இராமசாமி ஐயர் பெரிய புராணத்தைக் கீர்த்தனைகளாகப் பாடியிருக்கிறார். அவற்றிலிருந்தும் சில பாடல்களைப் பாடினார். மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய சில பாடல்களையும் பாடியபோது இவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். பிள்ளையினுடைய வாக்கு எத்தனை சிறப்பாக இருக்கிறது என்பதை உணர்ந்து இவர் விம்மிதம் அடைந்தார்.

ஒரு சமயம் ஆசிரியப் பெருமான் திருவாவடுதுறையில் இருந்த போது பிள்ளை மாயூரத்தில் இருந்தார். திருப்பெருந்துறைச் சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர் அத்தலத்திற்குப் புதிய முறையில் ஒரு புராணம் பாடப்பெற வேண்டுமென்று விரும்பினார். பிள்ளையைக் கொண்டு இயற்றுவிக்க வேண்டுமென்பது அவரது விருப்பம். அதைச் சுப்பிரமணிய தேசிகரிடம் விண்ணப்பித்துக் கொண்டார். உடனே தேசிகர் ஆசிரியப் பெருமானை மாயூரத்திற்கு அனுப்பி, இந்தச் செய்தியைப் பிள்ளையிடம் சொல்லி வரும்படி சொன்னார். அப்படியே ஆசிரியப் பெருமான் மாயூரத்திற்கு நடந்து சென்றார். சுப்பிரமணிய தேசிகருடைய விருப்பத்தைப் பிள்ளையிடம் தெரிவித்தவுடன், அவர் வாக்கிலிருந்து வந்தது திருப்பெருந்துறையிலுள்ள விநாயகர் பேரில்,

"நிலவுவந்த முடியினொடு வெயிலுவந்த
மழகளிற்றை நினைந்து வாழ்வாம்”

என்கிற ஓர் அடிதான், பின்பு பிள்ளையும், ஆசிரியப் பெருமானும் திருவாவடுதுறையை அடைந்தார்கள்.

1872 நவம்பர் மாதம் பெரியபுராணம் பாடம் நடந்து வந்தது. அப்போது ஆசிரியப் பெருமானுக்குத் திடீரென்று கடுமையான வெப்பு நோய் வந்தது. பிறகு அம்மை பூட்டியது. அதனால் அங்கிருந்து இவருடைய பாட்டனர் இருந்த சூரிய மூலைக்குப் போய்ச் சேர்ந்தார். ஒரு பல்லக்கில் இவரை அந்த ஊருக்கு அனுப்பினார்கள்.