தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/009-066

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

வேலையை மறுத்தல்

1873-ஆம் வருஷம் மகாமகம் நடைபெற்றது. அங்கே ஶ்ரீ சுப்பிரமணிய தேசிகர் தம் பரிவாரங்களோடு சென்றார். அந்த நேரம் தம்மால் அங்கே போக முடியாது போனது பற்றி இவர் மிகவும் வருந்தினார். உடம்பு ஒருவாறு குணம் அடைந்தவுடன் மீண்டும் திருவாவடுதுறையை அடைந்தார். இடையிடையே சில சமயங்களில் கும்பகோணத்திற்குச் சென்று தியாகராச செட்டியாருடன் பொழுது போக்குவது வழக்கம். அப்போது தியாகராச செட்டியார், கும்பகோணத்தில் அப்பு சாஸ்திரிகள் என்பவர் ஒரு புதிய பள்ளிக்கூடத்தைத் தொடங்கப் போகிறார். அவர் எனக்கு நல்ல பழக்கம் உடையவர். அங்கே தமிழ்ப் புலவர் ஒருவர் வேண்டுமென்று சொல்கிறார். நான் உன்னை அனுப்பலாம் என்று நினைக்கிறேன் என்று சொன்னார். ஆனால் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இவர் இங்கேயே இருக்கட்டும், பின்னால் வேண்டுமானால் உத்தியோகம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார். அதை இறைவன் திருவருள் என்றெண்ணி ஆசிரியப் பெருமான் உவகை அடைந்தார்.

1873-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் கவிஞர்பெருமான் திருப்பெருந்துறையை அடைந்தார். அவருடன் ஆசிரியப் பெருமானும் சவேரிநாத பிள்ளையும் சென்றார்கள். அந்தத் தலத்தின் பெருமையை உணர்ந்து, அங்கே மாணிக்கவாசகருக்கு எல்லா வகையான சிறப்புகளும் நடைபெறுவதைக் கண்டு மகிழ்ந்தார்கள்.

திருப்பெருந்துறைப் புராணம் முழுவதும் அரங்கேற்றத்திற்கு முன்பு இயற்றப்படவில்லை. சில பகுதிகளே இயற்றப் பெற்றிருந்தன. ஆனால் பிள்ளை அவ்வப்போது பாடல்களை எழுதிவைத்து மறுநாள் அரங்கேற்றுவது வழக்கமாக இருந்தது. அதைக் கண்டு ஆசிரியப் பெருமானுக்கு ஆச்சரியம் உண்டாயிற்று . மீண்டும் அங்கே இவருக்கு அவ்வப்போது நோய் வந்தது. அதனால் பிள்ளையைப் பிரிந்து ஊருக்குச் செல்ல நேர்ந்தது.