தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/041-066

விக்கிமூலம் இலிருந்து

தாகூர் தரிசனம்

1919-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி மகாகவி ரவீந்திரநாத் தாகூர் சென்னைக்கு வந்திருந்தார். அவர் டி.எஸ். இராமசாமி ஐயருடைய இல்லத்தில் தங்கியிருந்தார். அவரைப் பார்க்க ஆசிரியர் அங்கே சென்றிருந்தார். ஆசிரியரைப்பற்றித் தாகூருக்கு எடுத்துக் கூறினார்கள்.

ஆசிரியர் பதிப்பித்த நூல்களை எல்லாம் பார்த்து வியந்து, "இவற்றை எல்லாம் நீங்கள் எப்படிப் பதிப்பித்தீர்கள்?" என்று தாகூர் கேட்டார். "தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் சென்று தேடி ஓலைச் சுவடிகளை எடுத்து வந்து, அவற்றை ஆராய்ந்து செப்பம் செய்து கடிதப் பிரதி எடுத்துப் பதிப்பித்து வருகிறேன்" என்று இவர் தெரிவித்தார். ஆசிரியர் சொல்வதை எல்லாம் கேட்டு மிகவும் வியப்படைந்த மகாகவி, "நான் உங்கள் வீட்டிற்கு வந்து பார்க்கிறேன்" என்று தெரிவித்தார். அவ்வாறு அன்று மாலையே தியாகராஜ விலாசத்திற்கு வந்து, அங்கிருந்த ஏட்டுச் சுவடிகளையும், கடிதப் பிரதிகளையும் பார்த்து வியந்தார். ஏட்டுச் சுவடியில் எப்படி எழுதுவது என்பதையும் ஆசிரியர் அவருக்கு எழுதிக் காட்டினார். ரவீந்திரர் ஆசிரியப் பெருமான் வீட்டிற்கு

வந்ததைப் பார்த்துப் பலரும் வியந்தார்கள் ஆசிரியப் பெருமானைத் தெரியாதவர்கூட இவர் மிகவும் பெரியவர் என்று தெரிந்து வணங்கினார்கள்.