தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/050-066

விக்கிமூலம் இலிருந்து

வேறு நூற்பதிப்புகள்

அந்தக் காலத்தில் மாயூரநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அந்தக் கும்பாபிஷேகப் பத்திரிகையை நல்ல முறையில் அச்சிட வேண்டும் என்று திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் விரும்பினார். நான் அப்போது ஆசிரியருடன் அங்கே போயிருந்தேன். அதன் பிறகு மாயூரம் சம்பந்தமாக மயிலைத் திரிபந்தாதி என்னும் நூலை ஆசிரியர் வெளியிட்டார் சிறிய நூலாக இருந்தாலும் அதில் முகவுரை முதலியன சிறப்பாக அமைந்தன. திருப்பனந்தாளில் அப்போது காசிவாசி சொக்கலிங்கத் தம்பிரான் காசி மடத்தின் தலைவராக இருந்தார். அவருடைய இளவரசாகச் சாமிநாதத் தம்பிரான் இருந்தார். அவர் நன்றாகப் படித்தவர். கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் பரம்பரையில் வந்தவர். அவர் ஒருமுறை சென்னைக்கு வந்து சேத்துப்பட்டில் தங்கியிருந்தார். ஆசிரியப் பெருமான் அவரைப் போய்ப்பார்த்த போது சிவக்கொழுந்து தேசிகர் பாடல்களைப் பற்றிய பேச்சு எழுவது உண்டு. அவருடைய நூல்களை ஆசிரியப் பெருமான் பதிப்பித்தால் தமிழ் உலகத்திற்கு மிகவும் பயன்படும் என்று அவர் சொன்னார். அப்படியே செய்வதாக ஆசிரியப் பெருமான் ஒப்புக் கொண்டார்.