உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/051-066

விக்கிமூலம் இலிருந்து

தமிழ்விடு தூதும் பிற நூல்களும்

தமிழ்விடு தூது என்னும் நூலை ஆசிரியர் ஆராய்ந்து வந்தார். தமிழின் பெருமையை மிகச் சிறப்பாகச் சொல்கிற நூல் அது. அதை வெளியிடவேண்டுமென்ற எண்ணம் ஆசிரியருக்கு இருந்தது. அதில் பல திருவிளக்குகளைப் பற்றிய செய்திகள் வருகின்றன. அவற்றைப்பற்றியெல்லாம் மாயூரநாதர் கும்பாபிஷேகத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு வந்திருந்த சிவசாரியார்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். அந்தத் தமிழ்விடு தூதில் இருந்த ஒரு கண்ணி ஆசிரியப் பெருமான் உள்ளத்தை மிகவும் கவர்ந்தது.

'இருந்தமிழே உன்னால் இருந்தேன்; இமையோர்

விருந்தமிழ்த மென்றாலும் வேண்டேன்'

என்ற கண்ணிதான் அது.

திருத்தணிகைப் புராணம், கந்தபுராணம் ஆகியவற்றை இயற்றிய கச்சியப்ப முனிவர் மிகப் பெரும் புலவர். சிவஞான முனிவருடைய மாணாக்கர், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு அந்த முனிவரிடம் மிகவும் பக்தி. 'இறைவன் என் முன்னால் தோன்றி என்ன வேண்டுமென்று கேட்டால், கச்சியப்ப முனிவரை ஒரே ஒருமுறை தரிசனம் பண்ணவேண்டுமென்று கேட்பேன்' என்று அந்தப் புலவர் பெருமான் சொல்வாராம். அந்த முனிவர் இயற்றிய கச்சி ஆனந்த ருத்திரேசர். வண்டு விடு தூது என்னும் நூலை விரிவான வகையில் வெளியிட வேண்டுமென்று ஆசிரியர் ஆராய்ச்சி செய்து வந்தார்.