தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/056-066

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

சதாபிஷேகம்

ஆசிரியப் பெருமானின் எண்பதாவது ஆண்டு நிறைவு நெருங்கிக்கொண்டிருந்தது. சஷ்டியப்த பூர்த்தியைச் சரியாக நடத்தவில்லை, இந்த விழாவையாவது சிறப்பாக நடத்தவேண்டுமென்று அட்வகேட்டாக இருந்த கே. வி. கிருஷ்ணசாமி ஐயர் எண்ணினார். அதற்கென ஒரு குழுவை அமைத்துக்கொண்டார். இந்த விழா மிகச் சிறப்பாகப் பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்றது. ஸர் முகமது உஸ்மான் தலைமை தாங்கினார். ஆசிரியப் பெருமானின் திருவுருவப் படம் ஒன்றைப் பல்கலைக்கழக மண்டபத்தில் திறந்து வைத்தார்கள். தலைநகரில் மட்டுமன்றித் தமிழ்நாட்டின் பல பாகங்களிலும், பர்மா, இலங்கை ஆகிய இடங்களிலும்கூட ஆசிரியப் பெருமானுடைய சதாபிஷேக விழா நடைபெற்றது.

1934-ஆம் வருஷம் ஜனவரி மாதம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம் இரண்டாவது பாகம் வெளியாயிற்று. இந்தப் பாகம் பிள்ளையவர்களிடம் ஆசிரியர் பாடம் கேட்கத் தொடங்கியது முதல் புலவர் பெருமானின் இறுதிக் காலம் வரையிலான நிகழ்ச்சிகளை விளக்குகின்றது.