தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/058-066

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

காந்தியடிகளைக் கண்டது

1937-ஆம் ஆண்டு சென்னையில் பாரதீய சாகித்ய பரிஷத்தின் மகாநாடு நடந்தது. அதற்கு மகாத்மா காந்தி தலைமை வகித்தார். வரவேற்புக் குழுவின் தலைவராக யாரை நியமிப்பது என்கிற கவலை அந்த மகாநாட்டை நடத்துபவர்களுக்கு உண்டாயிற்று. பிறகு ஆசிரியப் பெருமானையே அழைத்து வரவேற்புக் குழுவின் தலைவராக இருந்து வரவேற்புரை அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். ஆசிரியர் அதற்கு இசைந்தார்.

மகாசபை கூடியது. தமிழின் பெருமையும், தமிழர்களின் பெருமையும் ஆசிரியர் சங்க நூல்களில் எவ்வாறு வருணிக்கப் பெற்றுள்ளன என்பதைத் தம் வரவேற்புரையில் எடுத்துக்காட்டி, மகாத்மா காந்தியை வரவேற்பதில் தாம் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார் என்பதையும் எடுத்துச் சொல்லிச் சபையில் உள்ளவர்களையும், காந்தியையும் மகிழ்வித்தார்.

அந்த வரவேற்பைக் கேட்டு மகிழ்ந்த காந்தியடிகள், "தமிழின் வடிவமாகவே இருக்கும் இவர்கள் திருவடியில் இருந்து தமிழ் பயில வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாகிறது. அந்தச் சந்தர்ப்பம் எப்போது கிடைக்குமோ?' என்று சொன்னார்.