தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/061-066

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

காசிமடத்தின் தலைவருடைய அன்பு

ஒரு நாள் மாலை 7 மணி இருக்கும். ஆசிரியப் பெருமான் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நானும் வேறு சில மாணவர்களும் பக்கத்தில் அமர்ந்திருந்தோம். கொல்லைப் புறக் கதவின் தாழ்ப்பாள் ஒசைப்பட்டது. யார் உள்ளே வருகிறார்கள் என்பது முதலில் தெரியவில்லை. திருப்பனந்தாள் மடத்தின் தலைவர் மெள்ள உள்ளே நுழைந்து வந்தார்.

"யார் வருகிறார்கள்?' என்று ஆசிரியப் பெருமான் கேட்டார். 'சுவாமிகள் வருகிறார்கள்' என்று சொன்னோம். அப்படியா!' என்று இவர் எழுந்தார். சுவாமிகளிடம், 'சொல்லி அனுப்பியிருந்தால் நானே தங்களிடம் வந்திருப்பேனே. எதற்காகத் தாங்கள் இப்படிப் பின்வழியாக வரவேண்டும்?' என்று கேட்டார்.

“தாங்கள் செய்திருக்கும் உபகாரத்திற்கு இது ஒரு பொருட்டா? தாங்கள் சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்களையும், குமரகுருபரர் பிரபந்தத் திரட்டையும் பதிப்பித்ததன் மூலம் நான் பிறந்த குலத்தையும் உயர்த்திவிட்டீர்கள். நான் புகுந்த மடாலயத்தின் சிறப்பையும் உயர்த்திவிட்டீர்கள். இதற்கு நான் என்ன கைம்மாறு செய்தாலும் ஈடாகாது' என்று சொல்லி ஆயிரம் ரூபாயை ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் வைத்து வழங்கினர். ஆசிரியப் பெருமானுக்கு அளவிறந்த வியப்பு உண்டாயிற்று. உள்ளத்தை நெகிழச் செய்த இந்த நிகழ்ச்சியை இவர் பலரிடம் அடிக்கடி சொல்லி உருகியது உண்டு.