தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/062-066

விக்கிமூலம் இலிருந்து

என் சரித்திரம்

ஆசிரியப் பெருமானின் சதாபிஷேகம் நடந்தபோது அவர் தம் வரலாற்றை எழுத வேண்டுமென்று பலரும் வற்புறுத்தினார்கள். அப்போது ஆனந்த விகடனில் ஆசிரியராக இருந்த கல்கி ஆனந்த விகடனில் வாரந்தோறும் எழுத வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அப்போது எழுத முடியவில்லை. திரும்பவும் 1940-ஆம் ஆண்டு முதல் எழுத வேண்டும் என்று வந்து கேட்டுக்கொண்டார். அதன்படி 1940-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆனந்த விகடனில் என் சரித்திரம்’ என்ற தலைப்பில் தம் வரலாற்றை இவர் எழுதத் தொடங்கினார். அதற்காகப் பல பல இடங்களுக்கு எழுதி, அங்கங்கே உள்ள கட்டிடங்களையும், கோவில்களையும் படம் எடுத்து அனுப்பச் சொல்லிப் பெற்று வெளியிட்டார். என் சரித்திரம்' வெளியாகத் தொடங்கியவுடன் நாட்டில் ஒரு தனி எழுச்சி உண்டாயிற்று. ஆனால் 1942-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆசிரியப் பெருமான் காலமானதால் அந்த வரலாறு முற்றுப்பெறவில்லை.