தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்/தொகுப்புரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

தொகுப்புரை

யாழ்ப்பாணம். ச. மார்க்கண்டு.

அறிமுகம் தொடங்கிய நாட்களில்
ஆற்றல் வாய்ந்த இயற்றமிழ் வித்தகராகவே ஐயாவை* உணர்ந்திருந்தேன்.
நாட்செல்லச்செல்ல
முத்தமிழிலும் வல்ல மூதறிஞர் அவரென்பதை :விஸ்வரூதரிசனமாய்க் கண்டு வியப்புற்றேன்.
ஆனாலும்,
தமிழைப்போலவே.....
இசையையும் நாடகத்தையும்
ஒரளவு புறம்விட்டு,
இயற்றமிழ்ச் சித்தராகவே ஐயா உலாவந்தார்.
இன்தமிழ்ச் சொற்களைச்
சபைகளிற் பெருக்கும்போதில்-
நகைமுதல் தொடர்ந்த ஒன்பான் சுவையும்
சிறுசிறு அளவில் 'முகத்தினிற் காட்டி',
குரல்வழி ஏற்றமும் இறக்கமும் சேர்த்துக்-
'கதை சொல்லற் பாங்கி'ல் வெளிவரச் செய்வார்.
"பாத்திரம்” இரண்டு பேசுவதாயின்
'உரையாடல் உத்தியும் அங்கு அமையும்.
தவிர,
நாடகக் கதைக்கோப்பை ஐந்தாகப் பிரித்து
'அறிமுகம், வளர்ச்சி, உச்சம், தீர்வு,
விளை'வெனப் பலரும் வகுத்திருப்பதுபோல்
'மேடைப் பேச்சிலும் இந்தச் சாயலில்’
வெற்றிகள் கொணர்வது ஐயாவின் வழக்கம்.
இவை,
இயற்கையாய் அமைந்தவையோ,
முயன்று பயின்றவையோ,
பயிற்சியின் முதிர்ச்சியால் பழக்கப்பட்டவையோ
எதுவாக இருப்பினும்
நாடக அம்சங்கள் பொதிந்தவை என்பதில்
நாடக இயலார் சந்தேகம் கொள்ளார்.
இதனால்தான்,
சென்னை வானொலியில் சேவைசெய்தபோது (1956-1959) :அலைவரிசையூடு நாடகங்கள் பலதையும்
செவியேற்றம் செய்ய முடிந்ததுபோலும்!
அதற்காகவே,
வானொலி நாடகம் பலவற்றினையும்
‘எழுத்துரு'வாகவும் வெளியிற் கொணர்ந்தார்.
'தெள்ளாற்று நந்தி” நாடகத்தொகுதி
இதனால் முகிழ்த்த மலரெனக் கூறலாம்.
இத்தொகுதியிலொன்று,
'கைலாசநாதர் கோயிலெனும் சித்திரம்.
இதில்,
குரல்-1, குரல்-2, குரல்-3, குரல்-4 எனப்
பின்னணிக்காக அமைத்த முறைமை
'நவீன மேடை நாடக' மரபில்
'எடுத்துரைஞர்' உத்தியை இயம்புமாப்போல
எழுத்துரு அமைப்பில் இருப்பதைக் காணலாம்.
நாடகத்தமிழில் வைத்த இந்த ஈடுபாடே,
'சிறு வயது முதல் (24) நாடகத்தில் ஈடுபட்டு
ஐம்பத்தைந்து வயதிற்குள் (1867-1922),
நாற்பத்தெட்டு நாடகங்களை இயற்றி மேடையேற்றிய சங்கரதாச சுவாமிகள்' செயலில் மதிப்பு வைத்து -
அவர் நினைவுச் சொற்பொழிவில் பங்கு பெற்று
'தமிழ் நாடக வரலாறு' பற்றியும்
'சங்கரதாச சுவாமிகள்' பற்றியும்
எடுத்தோத வைத்ததென்றே
எண்ணத் தோன்றுகிறது.
இந்தச் சொற்பெருக்கை,
1971ஆம் ஆண்டிலேயே-
மதுரைப் பல்கலைக் கழகத்தில்-
ஐயா நிறைத்திருந்தார்.
ஆனால்,
ஐயாவின் துறையோ பின் 'இயலா'க அமைந்ததால் அக்கறை இன்றியே பூட்டப்பட்டிருந்தது.
இரு மாதம் முன்னே...... . .
வேறுலகை நோக்கி ஐயா விரைய,
இருப்பவை பலதையும் எடுக்கத் தொடங்கினோம்.
ஐயாவின் இளைய மகள் மீரா அவர்கள்
சேர்த்து வைத்தவற்றை வெளியில் கொணர்ந்தார்.
தூசு மூடிய சுவடிகள் போல
இருந்த அவற்றைத் துவட்டிப் படித்தோம்.
முதலில் கிடைத்த முத்துப் போல
'முத்தமிழ் நாடகச் சங்கதி' கிடைத்தது.
சிலப்பதிகார 'அரங்கேற்று காதை'யும்
அடியார்க்கு நல்லார் வகுத்த உரையும்
தொல்காப்பியத்தின் 'மெய்ப்பாட்'டியல்புகள்
நாடக வழக்கில் விரிந்த முறையும்
ஐயாவின் பிரதியில் உயிர்ப்புடன் இருந்தன.
இந்த இடத்தில்
இன்னொன்றைச் சொல்லலாம்.
நாடகம் தெரிந்த நண்பர்களுடனே
பேசும் போதில் ஒன்றைப் புகல்வார். .
'சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையை,
நாட்டியத்தூடு நாடகம் விளைக்கும்
பத்மா சுப்பிரமணியத் தோடிணைந்து
உருப்படியாக ஆக்க விழைந்தேன்;
கூறுமிடங்களில் கூறியும் பார்த்தேன்.
அங்கீகாரம் கிடைத்த போதும்
அனுசரணைகள் கிடைக்கப் பெறாமையால்
எடுத்த முயற்சியை விட்டே விட்டேன்.'
என்றபடியாய் ஆதங்கப்பட்டுக்
குமைந்து விரக்தியில் தலையை அசைப்பார்.
அரங்கேற்று காதையைக்
'களப்படுத்தி' ஆற்றுகின்ற
அந்தமுயற்சி வெற்றிபெற்றிருந்தால்....

கவலை முகம் காட்டுகின்ற
இருதமிழில் ஒருதமிழ்,
பழமையிலிருந்து புதுமையைப் பார்த்து
புன்சிரிப்பொன்றை உதிர்த்திருக்கக்கூடும்!
சிலவேளை,
முத்தமிழ்கூட ஒருபடி உயர்ந்து,
மற்றவரைப் பார்த்து மகிழ்ந்துமிருக்கலாம்!

ஏனெனின்,
முன்சொன்ன இருவரும்,
முத்தமிழும் உணர்ந்தவர்கள்.
ஆளுக்கொன்றாய்
இருதமிழில் வல்லவர்கள்.

காலக்கருமி,
ஈயவில்லை எனமறப்போம்.

ஆனாலும் ஐயாவின்
‘தமிழ் நாடக வரலாற்று’க் கட்டுரை
காலத்தை மீறி எமக்குக் கிடைத்தசொத்து.

இதேபோல்தான்,
சங்கரதாஸ் சுவாமிகள்பற்றிய உரையும்
அறியாத நுணுக்கங்களை அறிவுறுத்தல் செய்கிறது.
நாடக உலகிற்குள் நுழைவோர்க்கு மட்டுமின்றித்
தமிழில் விருப்புக்கொண்ட எவர்க்காய் இருந்தாலும்
சங்கரதாஸ் சுவாமிகள் ஆற்றிய செயல்நெறியை
எடுத்தோதி, இயங்கவைக்கும் துணிவையும் தருகிறது.
ஆக,
சிறியதான நூலில் அமைந்தாலும்
அணுத்திறன் வாய்ந்த ஆக்கங்கள் இவைகள்.
இவற்றுக்கு,
மரபு வழிவந்த மேடை நாடகத்தின்,
வேதம் அறிந்த ‘இலங்கேஸ்வரனாக’
வீறுடன் செயலாற்றும் மனோகர் அவர்கள்
அழகிய ஆரம் அணிவித்துள்ளார்.
ஐயா சொல்வதுபோல்..... ‘தங்கக்குடத்திற்குத் திலகமிட்ட’ செயல் அது.

நிறைக்குமுன்,
இந்நூலைச் சிறப்பாக்க -
ஐயாவின் ஆசியுள்ள -
டாக்டர் சிவராசனும், கெளரிசங்கர் அங்கிளும்,
இலக்கிய முனைவர். தெ. ஞானசுந்தரம் அவர்களும்
அதிகமான சிரத்தையுடன் எழுத்துச்சீர் செய்துள்ளார்.

ஐயாவின் எழுத்துக்களை நூலாக்கும் விருப்புள்ள
கங்கை புத்தகத்தார் விரைவாக வெளிக்கொணர்ந்தார்.

இனி,
‘தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்’
பனுவலாக எங்கும் பவனிவந்து உளம்நுழைய
ஐயாவின் ஆசிகளும்
இறையருளும் உதவட்டும்.