திருக்குறள் மணக்குடவருரை/அழுக்காறாமை

விக்கிமூலம் இலிருந்து

௩௰-வது.-அழுக்காறாமை.

அழுக்காறாமையாவது, பிறர் ஆக்கம் முதலாயின கண்டு பொறாமையால் வருகின்ற மனக்கோட்டத்தைச் செய்யாமை. [இது முதலாகக் கூடாவொழுக்கப் பகுதியில் சிலவற்றை விதந்து கூறுகின்றார். அழுக்காறு இம்மையினும் மறுமையினும் நன்மையொன்றையும் பயவாது தீமையையே பயப்பதாதலால், அழுக்காறாமை முதற்கண் கூறப்பட்டது.]

ழுக்காறாக் கொள்க ஒருவன்,தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு.

இ-ள்:- ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு-ஒருவன் தன் நெஞ்சத்தில் அழுக்காறு இல்லாத இயல்பை, ஒழுக்கு ஆறாக கொள்க- தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க.

[ஒழுக்காறாக என்பது ஈறுகெட்டு நின்றது.]

இஃது, அழுக்காற்றைத் தவிர வேண்டு மென்றது. ௨௯௧.

விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லை,யார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.

இ-ள் :- யார்மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்-யாரிடத்தும் அழுக்காறு செய்யாமையைப் பெறுவானாயின், அஃது ஒப்பது விழுப்பேற்றின் இல்லை-அதனை ஒப்பது விழுமிய பேறுகளுள் பிறிதில்லை.

இஃது, அழுக்காறு செய்யாமை எல்லா நன்மைகளிலும் மிக்க தென்றது. ௨௯௨.

ழுக்காற்றின் அல்லவை செய்யார், இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து.

. இ-ள் :- அழுக்காற்றின் அல்லவை செய்யார்-அழுக்காற்றினானே அறமல்லாதவற்தைச் செய்யார் (நல்லோர்), இழுக்காற்றின் ஏதம் படும் பாக்கு அறிந்து-(அவ்வறம்) தப்பின நெறியினால் குற்றம் வருதலை அறிந்து.

இஃறு, அழுக்காற்றால் பல குற்றங்கள் வருமென்றது. (அவை வருமாறு பின்னர்க் கூறப்படும்.) ௨௯௩.

வ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கக் கெடும்.

இ-ள்:- அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்-அழுக்காற்று நெஞ்சத்தானுடைய ஆக்கமும், செவ்வியான் கேடும்-செவ்விய நெஞ்சத்தானுடைய கேடும், நினைக்க கெடும்-விசாரிக்கக் கெடும்.

[அவ்வியம்-கோட்டம். செவ்வி-நேர்மை. விசாரிக்க-ஆராயின்.]

இஃது, அழுக்காறுடையார் செல்வம் கெடு மென்றது, "அழுக்கா றுடையான் கண் ஆக்கம்போன் றில்லை, ஒழுக்கம் இலான்கண் உயர்வு" என்றாதலின். ௨௯௪.

ழுக்காற் றகன்றாரும் இல்லை; அஃதில்லார்
பெருக்கத்திற் றீர்ந்தாரும் இல்.

[இ-ள்:- அழுக்காற்று அகன்றாரும் இல்லை-அழுக்காற்றினான் செல்வமுடைய ரானாரும் இல்லை; அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்-அழுக்காறில்லாதாராய்ச் செல்வத்தினின்று நீங்கினாரும் இல்லை.]

[உரையாசிரியர் இக்குறட்கு வேறாகப் பொருள் கூறாது "முன்பு சொன்னதே பொருள்" என்று கூறிச் சென்றார்.]

இஃது, அழுக்காறில்லாதார் பொருளுக்குக் கேடு உண்டாகா தென்றது. ௨௯௫.

றனாக்கம் வேண்டாதான் என்பான், பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்.

இ-ள்:- அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான்-(தனக்கு) அறனாகிய வாழ்வு வேண்டாதான் என்று சொல்லப்படுவான், பிறன் ஆக்கம் பேணாது அழுக்கறுப்பான்-பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாதே அழுக்காறு செய்வான்.

இஃது, அழுக்காறுடையார்க்குப் புண்ணியம் இல்லையாமென்று கூறிற்று. ௨௯௬.

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம், உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

இ-ள்:- கொடுப்பது அழுக்கு அறுப்பான் சுற்றம்-(பிறனொருவன் மற்றொருவனுக்குக்) கொடுப்பதனை அழுக்காற்றினாலே விலக்குவானது சுற்றம், உடுப்பதும் உண்பதும் இன்றி கெடும்-உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும்.

[அழுக்கறுப்பான் என்பதனை அழுக்கு எனவும் அறுப்பான் எனவும் பிரித்து, அழுக்கு என்பதற்கு அழுக்காற்றினால் எனவும், அறுப்பான் என்பதற்கு விலக்குவான் எனவும் இவ்வுரையாசிரியர் உரைத்திருப்பது கவனித்தற் பாலது. அழுக்கறுத்தல்-என்பதனை ஒருசொல் நீர்மைத்தாகக் கொண்டு உரைத்துள்ளார் பரிமேலழகர். உடுப்பது-உடை, உண்பது-உணவு.]

அழுக்காறு நல்குரவு தருமென்று இது கூறிற்று. ௨௯௭.

வ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.

இ-ள்:- அழுக்காறு உடையானை செய்யவள் அவ்வித்து-அழுக்காற்றினை யுடையானைத் திருமகள் அழுக்காறு செய்து, தன் தவ்வையை காட்டி விடும்-தன் தமக்கையாகிய மூதேவிக்குக் காட்டி (இவன்பால் செல்லென்று கூறி அவனினின்று) போம்.

[தவ்வையை என்பது வேற்றுமை மயக்கம்.]

இது, நல்குரவிற்குக் காரணம் கூறிற்று. ௨௯௮.

ழுக்கா றெனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுளி உய்த்து விடும்,

இ-ள்:- அழுக்காறு என ஒரு பாவி-அழுக்காறு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி, திரு செற்று தீயுளி உய்த்து விடும்-செல்வத்தையும் கெடுத்துத் தீக்கதியுள்ளும் கொண்டு விடும்.

ஒரு பாவி-நிகரில்லாத பாவி.

அழுக்காறு செல்வம் கெடுத்தலே யன்றி நரகமும் புகுவிக்குமென்று இது கூறிற்று. ௨௯௯.

ழுக்கா றுடையாற் கதுசாலும், ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.

இ-ள்:- அழுக்காறு உடையாற்கு-அழுக்காற்றை யுடையானுக்கு, ஒன்னார் கேடு என்பது வழுக்கியும்-பகைவர் கேடு பயத்தல் தப்பியும், அது சாலும்- அவ்வழுக்காறு தானே அமையும்.

இஃது, அழுக்காற்றால் உயிர்க்கேடு வரு மென்றது. ௩00.