உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் மணக்குடவருரை/வெஃகாமை

விக்கிமூலம் இலிருந்து

௩௧-வது.-வெஃகாமை.

வெஃகாமையாவது, பிறர் பொருளை விரும்பாமை. [தன்னயத்தைக் காரணமாகக் கொண்ட கூடாவொழுக்கங்களுக் கெல்லாம் வெஃகுதல் காரணமாதலால், இவ்வதிகாரம் அழுக்காறாமையின் பின் கூறப்பட்டது.]

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம், விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

இ-ள்:- வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க-பிறர் பொருளை விரும்பி ஆகும் ஆக்கத்தை வேண்டாதொழிக; விளைவயின் ஆம் பயன் மாண்டற்கு அரிது -(அது) பயன்படுங்காலத்தில் ஆகும் பயன் நன்றாதல் இல்லையாதலான்.

[மாண்டற்கு அரிது-மாட்சிமைப்படுதற்கு அரிது-மாட்சிமைப்படுதல் இல்லை-நன்றாதல் இல்லை.]

இது, வெஃகலால் ஆகும் ஆக்கம் நல்ல பயனை நல்காதென்று கூறிற்று. ௩0௧.

ஃகி அகன்ற அறிவென்னாம், யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்?

இ-ள்:- அஃகி அகன்ற அறிவு என் ஆம்-நுண்ணிதாகப் பரந்த அறிவுடையனா யிருத்தலால் யாது பயன் ஆகும், வெஃகி யார் மாட்டும் வெறிய செயின்-பிறர் பொருளை விரும்பி எல்லாரிடத்தும் ஈரமில்லாதன செய்வானாயின்?

[அறிவு என்பது அறிவுடையனாயிருக்கும் தன்மையைக் குறித்து நின்றது. ஈரமில்லாதன-அன்பில்லாத செயல்கள்.]

இஃது, அறிவுடையார் வெஃகுதல் செய்யா ரென்றது. ௩0௨.

லமென்று வெஃகுதல் செய்யார், புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.

இ-ள்:- இலம் என்று வெஃகுதல் செய்யார்-(யாம்) வறியம் என்று பிறர் பொருளை விரும்புதல் செய்யார், புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் -ஐம்புலனையும் வென்ற புன்மை இல்லாத தெளிவை யுடையார்.

[ஐம்புலன்-சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். அவற்றை வெல்லலாவது, அவற்றைப் பற்றி எழும் அவாவினை ஒழித்தல்.]

இது, துறந்தார் வெஃகுதல் செய்யாரென்றது. ௩0௩.

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.

இ-ள்:- சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார்-சிற்றின்பத்தை நல்கும் பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார், மற்று இன்பம் வேண்டு பவர்-பேரின்பமாகிய வீடு பேற்றைக் காமிப்பவர்.

[மற்று இன்பம்-சிற்றின்பமல்லாத இன்பம்-பேரின்பம். ஏகாரம் அசை, அறனல்லாத-மறச்செயல்கள்.]

இது, வீடு பெற விரும்புவோர் வெஃகுதல் செய்யா ரென்றது. ௩0௪.

டுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.

இ-ள்:- படு பயன் வெஃகி பழிப்படுவ செய்யார்-(தமக்கு) உண்டாகும் பயனை விரும்பிப் பழியொடுபடுவன செய்யார், நடுவன்மை நாணுபவர்- நடுவன்மைக்கு நாணுபவர்.

[நாணுபவர்-அஞ்சுபவர். பழியொடுபடுவன-பழியை உண்டு பண்ணும் பாவச் செயல்கள்.]

இது, நடுவு நிலைமை வேண்டுபவர் வெஃகுதல் செய்யா ரென்றது. ௩0௫.

ருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான், பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.

இ-ள்:- அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான்-அருளை விரும்பி அறநெறியிலே நின்றவனும், பொருள் வெஃகி பொல்லாத சூழ கெடும் - பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் சூழக் கெடுவன்.

[நின்றதும் என்பது உம்மை தொக்கு நின்றது. உம்மை உயர்வு சிறப்பும்மை. அஃது, அருளை விரும்பி அறநெறியிலே நின்றவன் வேறொன்றாலும் கெடான் என்பதனைச் சுட்டி நின்றது. சூழ்தல்-நினைத்தல்.]

இஃது, அருளுடையானும் வெஃகுதல் செய்யக் கெடுவ னென்றது. ௩0௬.

டுவின்றி நன்பொருள் வெஃகின், குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.

இ-ள்:- நடுவு இன்றி நன் பொருள் வெஃகின்-நடுவுநிலையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின், குடி பொன்றி குற்றமும் ஆங்கே தரும்-(அதனாலே அவன்) குலமும் கெட்டு அவ்விடத்தே குற்றமும் உண்டாம்.

இது, வெஃகுதல் செய்வார்க்குச் சந்தான நாசம் உண்டா மென்றது. ௩0௭.

றலீனும் எண்ணாது வெஃகின்; விறலீனும்
வேண்டாமை என்னும் செருக்கு.

இ-ள்:- எண்ணாது வெஃகின் இறல் ஈனும்-விசாரியாதே பிறர் பொருளை விரும்புவானாயின் (அது அவனுக்குக்) கேட்டைத் தரும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும்-(பிறன் பொருளை) வேண்டாமையாகிய பெருமிதம் ஆக்கத்தைத் தரும்.

இது, வெஃகுதல் செய்வார்க்கு உயிர்க்கேடு வரு மென்றது. ௩0௮.

ஃகாமை செல்வத்திற் கியாதெனின், வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

இ-ள்:- செல்வம் அஃகாமைக்கு யாது எனின்-செல்வம் சுருங்காமைக்குக் காரணம் யாதோவெனின், பிறன் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை-பிறன் விரும்பும் கைப்பொருளை (த்தான்) வேண்டாமை (என்க).

இது, வெஃகுதல் செய்யா தார்க்குச் செல்வம் அழியா தென்றது. ௩0௯.

றனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந் தாங்கே திரு.

இ-ள்:- அறன் அறிந்து வெஃகா அறிவுடையார்-அறத்தை அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை, திரு திறன் அறிந்து சேரும்-திருமகள் (தானே) தகுதியறிந்து சேர்வள்.

அறன் அறிதல்-பிறர்பொருளை விரும்பாமை அறனென்று அறிதல்.

இது, வெஃகுதல் செய்யாதார்க்குச் செல்வம் உண்டா மென்றது. ௩௧0.