உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் மணக்குடவருரை/புறங்கூறாமை

விக்கிமூலம் இலிருந்து

௩௨-வது.-புறங்கூறாமை.

புறங்கூறாமையாவது, யாரையும் இகழ்ச்சியாக அவர் புறத்தே உரையாமை. [புறங்கூறுதல் வாக்கால் நிகழும் குற்றங்களுள் மிகக் கொடியதாதலால், இவ்வதிகாரத்தை மனத்தால் நிகழும் அழுக்காற்றையும் வெஃகுதலையும் நீக்கவேண்டு மென்று பின்னர்க் கூறினார்.]

ண்ணின்று கண்ணறச் சொல்லினும், சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்.

இ-ள்:- கண் நின்று கண் அற சொல்லினும்-(ஒருவன்) கண்ணெதிரே நின்று கண்பேர்த்துச் சொல்லினும் (அமையும்;), பின் முன் நின்று நோக்காச் சொல் சொல்லற்க-பிற்காலத்து அவன் முன்னே நின்று (எதிர் முகம்) நோக்கவொண்ணாத சொல்லைச் சொல்லாதொழிக.

இது, புறங்கூறுதலைத் தவிர்க என்றது. அன்றியும், கடிய சொல் கூறலும் ஆகா தென்றது. ௩௧௧.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின், சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்.

இ-ள்:- புறங்கூறி பொய்த்து உயிர் வாழ்தலின்-(காணா இடத்துப்) புறஞ் சொல்லி (க்கண்ட இடத்து)ப் பொய் சொல்லி உயிரோடு வாழ்தலின், சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும்- (புறஞ் சொல்லாதிருந்து நல்குரவினால்) சாதல் அறநூல் சொல்லுகின்ற ஆக்கமெல்லாம் தரும்.

இது, புறங்கூறாமை ஆக்கமெல்லாம் தரு மென்றது. ௩௧௨.

றங்கூறான் அல்ல செயினும், ஒருவன்
பறங்கூறான் என்றல் இனிது.

இ-ள்:- ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும்-ஒருவன் அறத்தை வாயால் சொல்லுதலும் செய்யானாய்ப் பாவங்களைச் செய்யினும், பறங்கூறான் என்றல் இனிது-பிறரைப் புறஞ்சொல்லான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்றாம்.

இது, பாவம் செய்யினும் புறங்கூறாமை நன்மை பயக்கு மென்றது. ௩௧௩.

றஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை, புறஞ்சொல்லும்
புன்மையால் காணப் படும்.

இ-ள்:- அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை-அறத்தை நினைக்கின்ற மனமுடையன் அல்லாமை, புறஞ்சொல்லும் புன்மையால் காணப்படும்- (பிறரைப்) புறஞ்சொல்லும் புல்லியகுணம் ஏதுவாக அறியப்படும்.

[நெஞ்சால் சொல்லலானது, நினைத்தல்.]

இது, புறஞ்சொல்லுவார் மனம் அறத்தை அறியா தென்றது. ௩௧௪.

றனழீஇ அல்லவை செய்தலின் தீதே,
புறனழீஇப் பொய்த்து நகை.

இ-ள்:- அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது-அறத்தை அழித்து அறமல்லாதவற்றைச் செய்தலினும் தீது, புறன் அழீஇ பொய்த்து நகை-(ஒருவனைக்) காணாத இடத்து இழித்துரைத்து(க்கண்ட இடத்து)ப் பொய்செய்து நகுதல்.

இது, புறங்கூறுதல் பாவத்தினும் மிக்க பாவ மென்றது. ௩௧௫.

கச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர், நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.

இ-ள்:- பக சொல்லி கேளிர் பிரிப்பர்-நீங்கும்படி சொல்லித்தம் கேளிரானாரைப் பிரிப்பர், நக சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர்-மகிழச் சொல்லி நட்பினை உயர்வு பண்ண மாட்டாதார்.

இது, புறங்கூறுவார் நட்டவரை இழப்ப ரென்றது. ௩௧௬.

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னர்கொல் ஏதிலார் மாட்டு.

இ-ள்:- துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்-(தம்மோடு) செறிந்தார் குற்றத்தையும் பிறர்க்கு உரைக்கின்ற சேதியையுடையார், ஏதிலார் மாட்டு என்னர் கொல்-(தம்மோடு) செறிவில்லாதார் மாட்டு யாங்ஙனம் செய்வரோ?

இது, புறங்கூறுவார் யாவரோடும் பற்றில ரென்றது. ௩௧௭.

றம்நோக்கி ஆற்றும்கொல் வையம், புறம்போக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.

இ-ள்:- புறம் நோக்கி புன்சொல் உரைப்பான் பொறை-பிறன் இல்லாத இடம் பார்த்துப் புறஞ்சொல் கூறுவான் உடலை, வையம் அறம் நோக்கி ஆற்றும்-நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம் (அல்லது போக்கும்). [கொல் என்பது அசை.]

இது, புறங்கூறுவார்க்குத் துணையாவார் இல்லை யென்றது. ௩௧௮.

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.

இ-ள்:- பிறன் பழி கூறுவான்-பிறனுடைய பழியைச் சொல்லுமவன், தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும்-தனக்குண்டான பழிகளிலும் சிலவற்றை வேறுபடத் தெரிந்து (பிறரால்) சொல்லப்படுவான்.

இது, புறங்கூறுவானைப் பிறரும் புறங்கூறுவரென்றது. ௩௧௯.

திலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கின்,பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

இ-ள்:- ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கின்-பிறர் குற்றம் போலத் தமது குற்றத்தையும் காண வல்லராயின், மன்னும் உயிர்க்கு பின் தீது உண்டோ-(தமது) நிலைபெற்ற உயிர்க்குப் பின்வரும் தீமை உண்டோ? (இல்லை.)

இது, புறஞ்சொல்லாமைக்குக் காரணம் கூறிற்று. ௩௨0.