திருக்குறள் மணக்குடவருரை/பயனில சொல்லாமை
௩௩-வது.-பயனில சொல்லாமை.
பயனில சொல்லாமையாவது, கேட்டார்க்கும் தனக்கும் நற்பயன் படாத சொற்களைக் கூறாமை. [வாக்கினால் நிகழும் பாவம் நான்கினுள் பொய்யை "வாய்மை"யாலும், கடுஞ்சொல்லை "இனியவை கூற"லாலும், குறளையைப் "புறங்கூறாமை"யாலும், விலக்கிப் பயனில் சொல்லை இவ்வதிகாரத்தால் விலக்குகின்றார்.]
சொல்லுக சொல்லின் பயனுடைய; சொல்லற்க.
சொல்லில் பயனிலாச் சொல்.
இ-ள்:- சொல்லின் பயனுடைய சொல்லுக-(ஒருவன்) சொல்லுவனாயின் பயன் உடைய சொற்களைச் சொல்லுக; சொல்லில் பயன் இலா சொல் சொல்லற்க-சொற்களில் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாதொழிக.
இது, பயனில சொல்லாமை வேண்டு மென்றது. ௩௨௧.
பயனில பல்லார்முன் சொல்லல், நயனில
நட்டார்கண் செய்தலின் தீது.
இ-ள்:- பயன் இல பல்லார் முன் சொல்லல்-பயன் இல்லாத சொற்களைப் பலர் முன்பு கூறுதல், நயன் இல நட்டார் கண் செய்தலின் தீதே-நன்மை யில்லாதவற்றை நட்டார் மாட்டுச் செய்தலினும் தீதே.
[நன்மை இல்லாத-தீய செயல்கள். தீதே என்பது தேற்றேகாரம் கெட்டு நின்றது.]
இது, பயனில கூறல் இம்மை மறுமை இரண்டின் கண்ணும் தீமை பயக்கு மென்றது. ௩௨௨.
நயனிலன் என்பது சொல்லும், பயனில
பாரித் துரைக்கும் உரை.
இ-ள்:- நயன் இலன் என்பது சொல்லும்-நயனுடையன் அல்லன் என்பதனை அறிவிக்கும், பயன் இல பாரித்து உரைக்கும் உரை-பயனில்லாதவற்றைப் பரக்க விட்டுச் சொல்லும் சொற்கள்.
இது, பயனில சொல்லுவார் இம்மையின் கண் பிறரால் இயம்பப்படா ரென்றது. ௩௨௩.
நயன்சாரா நன்மையின் நீங்கும், பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து.
இ-ள்:- பயன் சாரா பண்பில் சொல் பல்லார் அகத்து-ஒரு பயனைச் சாராத பண்பில்லாச் சொல்லைப் பலரிடத்து (க் கூறுவானாயின்), நயன் சாரா நன்மையின் நீங்கும்-அவன் நடு சாராது நன்மையின் நீங்குவான்.
[கூறுவனாயின் என்பது எச்சமாக வருவிக்கப்பட்டது.]
இது, பயனில கூறல் பிறரால் விரும்பப்படாமையுமன்றி நன்மையும் பயவா தென்றது. ௩௨௪.
சீர்மை சிறப்பொடு நீங்கும், பயனில
நீர்மை யுடையார் சொலின்.
இ-ள்:- பயன் இல நீர்மை உடையார் சொலின்-பயன் இல்லாதவற்றை நீர்மையுடையார் கூறுவாராயின், சீர்மை சிறப்பொடு நீங்கும்-(அவர்க் குண்டான) சீர்மையும் சிறப்பும் போம்.
[நீர்மை-நீரின் தன்மை-அருள். சீர்மை-நன்மை, சிறப்பு-மேன்மை. ஒடு என்பது இங்கு எண்ணுப்பொருளில் வந்தது.]
இது, நீர்மையுடையார் பயனில கூறுவராயின், அவருடைய எல்லா நன்மையும் போ மென்றது. ௩௨௫.
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
இ-ள்:- பயன் இல பல்லார் முனிய சொல்லுவான்-பயன் இல்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுமவன், எல்லாரும் எள்ளப்படும் -எல்லாரானும் இகழப்படுவன்.
இது, பயனில. கூறுவான் பிறரால் இகழப்படுவ னென்றது. ௩௨௬.
பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்;
மக்கட் பதடி எனல்.
இ-ள்:- பயன் இல் சொல் பாராட்டுவானை-பயன் இல்லாத சொல்லைக் கொண்டாடுவானை, மகன் எனல்-மகன் என்னாதொழிக; மக்கள் பதடி எனல்-மக்களில் பதர் என்று சொல்லுக.
[முதல் 'எனல்' அல்லீற்று எதிர்மறை வியங்கோள். இரண்டாம் 'எனல்' அல்லீற்று உடன்பாட்டு வியங்கோள்.]
இது , பயனில்சொல் பாராட்டுதல் மக்கட் பண்பில்லை யென்றது. ௩௨௭.
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
இ-ள்:- அரும்பயன் ஆயும் அறிவினார்-அரிய பொருளை ஆராயும் அறிவினையுடையார், பெரும் பயன் இல்லாத சொல் சொல்லார்-பெரிய பயன் இல்லாத சொற்களைச் சொல்லார்.
[அரிய பொருள்-உணர்தற்கு அரிய பொருள்; அதாவது மெய்ப்பொருள்.]
இது, பயனில் சொல் மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் அதனை அறிவுடையார் சொல்லா ரென்றது. ௩௨௮.
பொருடீர்ந்த பொச்சாந்தும் சொல்லார், மருடீர்ந்த
மாசறு காட்சி யவர்.
இ-ள்:- பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார்-பொருள் இல்லாத சொல்லை மறந்தும் சொல்லார், மருள் தீர்ந்த மாசு அறு காட்சியவர்- மயக்கம் தீர்ந்த குற்றம் அற்ற தெளிவினையுடையார்.
[பொருள்-பயன். தீர்தல்-நீக்குதல்.]
இது, தெளிவுடையார் பயனில கூறா ரென்றது. ௩௨௯.
நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.
[சான்றோர்-கல்வி யறி வொழுக்கங்களால் நிறைந்தோர்.]
இது, பயனில கூறுதல் சான்றோர்க்கு ஆகா தென்றது. ௩௩0.