திருக்குறள் மணக்குடவருரை/நிலையாமை

விக்கிமூலம் இலிருந்து

௩௪-வது.-நிலையாமை.

அஃதாவது, மயக்கத்தினால் தானென்று நினைத்திருக்கின்ற யாக்கையும், தனதென்று நினைத்திருக்கின்ற பொருளும் நிலை நில்லாமையைக் கூறுதல். [தவத்தினையுடையார் கூடாவொழுக்கத்தை நீத்த பின்னர் 'யான்' 'எனது' என்னும் பற்றுக்களைத் துறக்க வேண்டுதலின், அவற்றின் நிலையாமை முதற்கண் கூறப்பட்டது.]

நில்லா தவற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

இ-ள்:- நில்லாதவற்றை நிலையின என்று உணரும்-நில்லாத பொருள்களை நிலைநிற்பன என்று நினைக்கின்ற, புல் அறிவாண்மை கடை-புல்லிய அறிவுடைமை இழிந்தது.

இது, பொருள்களை உள்ளவாறு காணவொட்டாத மயக்கத்தைக் கடிய வேண்டு மென்றது. ௩௩௧.

ற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

இ-ள்:- செல்வம் அற்கா இயல்பிற்று-செல்வம் நில்லாத இயல்பை யுடைத்து; அது பெற்றால் ஆங்கே அற்குப செயல்-அதனைப் பெற்றால் அப்பொழுதே நிற்பனவாசிய அறங்களைச் செய்க.

நிலையாமை மூன்று வகைப்படும். அவை செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என்பன.

செல்வம் நிலையில்லாத தென்றும், செல்வத்தைப் பெற்ற பொழுதே அறம் செய்யவேண்டு மென்றும் இது கூறிற்று. ௩௩௨.

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்;
போக்கும் அதுவிளிந் தற்று.

இ-ள்:- கூத்தாட்டு அவைக்குழாம் அற்று பெருஞ் செல்வம்-கூத்தாட்டு (க்காண்டற்கு) அவைக்கூட்டம் (திரண்டால்) போலும் பெருஞ் செல்வம் (திரளுமாறு); அது விளிந்தால் அற்று போக்கும்-அந்த அவை எழுந்து போனால் போலும் அது போமாறும்.

[அவை-சபை. அத்து சாரியை. திரண்டால் என்பதும் திருளுமாறு என்பதும் எச்சமாக வருவிக்கப்பட்டன. விளிந்தால் என்பது ஆல் கெட்டு நின்றது. ஏகாரம் அசை.]

இது, செல்வத்தின் வரத்தும் போக்கும் ஒரு பொழுதிலே நிகழு மென்றது. ௩௩௩.

நாளென்ப தொன்றுபோல் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.

இ-ள்:- நாள் என்பது ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் வாள்-நாள் என்பது (இன்பம் தருவதாகிய) ஒன்று போலக் காட்டி உயிரை ஈருகின்ற ஒரு வாளாம், அஃது உணர்வார் பெறின்-அதனை அறிவாரைப் பெறின்.

[அஃது என்பது ஆய்தம் கெட்டு நின்றது. அதனை அறிவாரைப் பெறின்-அதன் உண்மைத் தன்மையை அறிவார் உண்டாயின்.]

இஃது, "உயிரீரும்" என்றமையால் இளமை நிலையாமை கூறிற்று. ௩௩௪.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.

இ-ள்:- நா செற்று விக்குள் மேல் வாராமுன்-நா (வழங்காமல்) செறுத்து விக்குளானது மீதூர்ந்து வருவதன் முன்னே, நல்வினை மேல் சென்று செய்யப்படும்-நல்வினையை மேல் விழுந்து செய்ய வேண்டும்.

[செறுத்தல்-ஒட்டிப்போதல். மீதூர்ந்து வருதல்-மேல் வருதல். மேல் விழுந்து- முன் சென்று-விரைந்து. படும் என்பது வேண்டும் என்னும் பொருள் தந்து நின்றது.]

இஃது, உயிரானது கழிவதன் முன்னே நல்வினையைச் செய்ய வேண்டு மென்றது. ௩௩௫.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.

இ-ள்:- ஒருவன் நெருநல் உளன் இன்று இல்லை என்னும் பெருமை- "ஒருவன் நேற்று உளனாயிருந்தான் இன்று இல்லையாயினான்" என்று சொல்லும் பெருமையை, இவ்வுலகு உடைத்து-இவ்வுலகம் உடைத்து.

["நெருநல் உளனொருவன் இன்று இல்லை” என்பது உலகத்தார் கூற்றாகக் கூறப்பட்டுள்ளது.]

இது, யாக்கை நிலையாமை கூறிற்று. ௩௩௬.

ருபொழுதும் வாழ்வ தறியார். கருதுப
கோடியும் அல்ல பல.

இ-ள்:- ஒரு பொழுதும் வாழ்வது அறியார்-ஒரு பொழுதளவும் (தம் உயிர்) நிலைக்குமென்பதனை அறியாராயிருந்தும், கோடியும் அல்ல பல கருதுப- (தமது வாழ்நாள்கள்) கோடியும் அல்ல பலவாகக் கருதுவர் (உலகத்தார்).

மேல், ஒருநாள் உளனானவன் பிற்றை ஞான்று செத்தானொன்றார்; ஈண்டு, ஒருபொழுதளவும் உயிர் நிலையாகா தென்றார். ௩௩௭.

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே,
உடம்போ டுயிருடை நட்பு.

இ-ள்:- குடம்பை தனித்து ஒழிய புள் பறந்தால் அற்று-கூடு தனியே கிடக்கப் புள்ளுப் பறந்து போனாற் போலும், உடம்போடு உயிர் உடை நட்பு -உடம்போடு உயிர் கொண்டுள்ள நட்பு.

[ஏகாரம் அசை. நட்பு என்பது நட்பின் விடுகையை உணர்த்தி நின்றது. உடைய என்பது ஈறு கெட்டு நின்றது.]

மேல், உயிர் நிலைநிற்றற்கு ஒருபொழுதென்று காலம் கூறினார். இஃது, உயிர் நினைத்த பொழுது போ மென்றது. ௩௩௮.

றங்கு வதுபோலும் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

இ-ள்:- உறங்குவது போலும் சாக்காடு-உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு; உறங்கி விழிப்பது போலும் பிறப்பு-உறங்கி விழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு.

இது, போன உயிர் மீண்டும் பிறக்குமென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறி வருமென்பதூஉம் கூறிற்று. ௩௩௯.

புக்கில் அமைந்தின்று கொல்லோ, உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

இ-ள்:- உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு-(தனதல்லாத) உடம்பினுள்ளே ஒதுக்குக் குடியாக இருந்த உயிர்க்கு, புக்கில் அமைந்தது இன்றோ-போயிருக்க இடம் அமைந்ததில்லையோ? (அமைந்த)தாயின் இதனுள் இராதென்றவாறு. [கொல் என்பது அசை.]

இது, மேற்கூறியவாற்றான் உயிர் மாறிப் பிறந்து வரினும் ஓர் இடத்தே தவறுமென்பது கூறிற்று. [தவறுதலாவது, பிறவி தவறுதல்; அஃதாவது, வீடு பெறுதல்.] ௩௪0.