திருக்குறள் மணக்குடவருரை/இன்னாசெய்யாமை

விக்கிமூலம் இலிருந்து

௧௭-வது-இன்னா செய்யாமை.

இன்னா செய்யாமையாவது, தமக்கு இன்னாதவாகத் தோன்றுமவற்றைப் பிறர்க்குச் செய்யாமை. இது வெருட்சி பிறந்து நிகழ்வதொன்றாதலின், வெகுளாமையின் பின் கூறப் பட்டது.

[இன்னாத - துன்பம் தரும் செயல்கள்.]

ன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்,

இ-ள்:- தான் இன்னா என உணர்ந்தவை-தான் இன்னாதன (இவை) என்று அறிந்தவற்றை, பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும்-பிறனுக்குச் செய்தலை மேவாமை வேண்டும்,

இஃது, இன்னா செய்யாமை வேண்டு மென்றது. ௧௬௧.

றுத்தின்னா செய்தவற் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

இ-ள்:- கறுத்து இன்னா செய்தவன் கண்ணும் - (தாம் செய்த குற்றத்தினாலே) வெகுண்டு இன்னாதவற்றை (த்தமக்குச்) செய்தவன் மாட்டும், மறுத்து இன்னா

செய்யாமை மாசு அற்றார் கோள்- (தாம் அதற்கு) மாறாகப் பின்பு இன்னாத செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு.

இது, தமக்கு இன்னா செய்தார்க்கும் தாம் இன்னா செய்யலாகா தென்றது. ௧௬௨.

செய்யாமை செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்.

இ-ள்:- செய்யாமை செற்றார்க்கும் இன்னாத செய்தபின்-(தான்) ஒரு குற்றம் செய்யாதிருக்க (த் தனக்கு) இன்னாத செய்தவர்க்கும் இன்னாத செய்தபின், உய்யா விழுமம் தரும்-(அஃது) உய்வில்லாத நோயைத் தரும்.

[உய்வு - உய்தல் - பிழைத்தல்.]

இது, காரணமின்றி இன்னா செய்தவர்க்கும் பொல்லாங்கு செய்தலைத் தவிரவேண்டு மென்றது. ௧௬௩.

சிறப்பீனும் செல்வம் பெறினும், பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்,

இ-ள்:- சிறப்பு ஈனும் செல்வம் பெறினும்-மிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெற்றும், பிறர்க்கு இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள்-பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு.

பழிவாராத செல்வம் பெறினும், இன்னாத செய்தலைத் தவிர வேண்டும் என்றது. ௧௬௪.

னைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானும்
மாணா செய்யாமை தலை,

இ-ள்:- எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் - யாதொன்றாயினும் எந்நாளும் யார்மாட்டும், மனத்தானும் மாணா செய்யாமை தலை-மனத்தினாலும் இன்னாதவற்றைச் செய்யாமை நன்று.

[யாதொன்றாயினும் - ஒருசிறிதாயினும். எனைத்தானும் என்பதில் ஆயினும் என்பது ஆனும் எனக்குறைந்து நின்றது.]

இஃது, இன்னாசெய்யாமை தலையான அறமாமென்றது. ௧௬௫.

றிவினான் ஆகுவ துண்டோ பிறிதுநோய்
தன்னோய்போல் போற்றாக் கடை.

இ-ள்:- பிறிதுநோய் தன்னோய் போல் போற்றாக் கடை-பிறிதோர் உயிர்க்கு உறும் நோயைத் தனக்குறு நோய்போலக் காவாத இடத்து, அறிவி னான் ஆகுவது உண்டோ- அறிவுடையனாகிய அதனால் ஆகுவது உண்டோ? (இல்லை).

[ஆகுவது - ஆகும் பயன்.]

இஃது, அறிவுடையார் இன்னா செய்யா ரென்றது. ௧௬௬.

ன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்.

இ - ள் :- தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான்-தன் உயிர்க்கு உள்ள இன்னாமையை (உயிரில்லாப் பொருள்கள் போல அறியாது கிடத்தலன்றி)த் தான் அறியுமவன், மன் உயிர்க்கு இன்னா செயல் என்னோ-(பின்னை) நிலையுள்ள (பிற) உயிர்களுக்கு இன்னாதவற்றைச் செய்கின்றது யாதனைக் கருதியோ?

[கொல் என்பது அசை.]

இஃது, இன்னா செய்கின்றவர் அறிவிலா ரென்றது. ௧௬௭.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தானே வரும்.

இ - ள் :- பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின்-பிறருக்கு இன்னாதவற்றை முற்பொழுது செய்யின், பின்பகல் தானே தமக்கு இன்னா வரும்-பிற்பொழுது தானே தமக்கு இன்னாத வரும்.

இன்னா செய்ததினால் வரும் குற்றம் என்னை என்றார்க்கு, இது கூறப்பட்டது. ௧௬௮.

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்; நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

இ-ள்:- நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்-(இக்காலத்து நுகர்கின்ற) துன்பமெல்லாம் (முற்காலத்துப் பிறர்க்குத்) துன்பம் செய்தார் மாட்டே உள்ளனவாம்; (ஆதலால்), நோய் செய்யார் நோய் இன்மை வேண்டுபவர்-(இக்காலத்துப் பிறர்க்கு) துன்பத்தைச் செய்யார் (வருங்காலத்துத்) தமக்குத் துன்பம் வாராமையை வேண்டுவார்.

இஃது, எதிர் காலத்தில் துன்பம் நுகரவேண்டாதார் நிகழ்காலத்தில் துன்பம் செய்யலாகா தென்றது. ௧௬௯.

ன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்,

இ-ள்:- இன்னா செய்தாரை ஒறுத்தல்-இன்னாத செய்தாரை ஒறுக்குமாறு (என்னையெனின்), அவர் நாண நல் நயம் செய்து விடல்-அவர் நாணும்படியாக நல்ல நயமுடையவற்றை (ஒருவன்) செய்துவிடுக (என்க).

[நயமுடையவற்றை-இன்பம் தரும் செயல்களை.]

இஃது, இன்னா செய்தாரை ஒறுக்கும் நெறி கூறிற்று. ௧௭0.