திருக்குறள் மணக்குடவருரை/வெகுளாமை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

௧௬-வது.—வெகுளாமை.

வெகுளாமையவது, வெகுளுதற்குக் காரணமுள்ள இடத்தும் வெகுளாராதல், [வெகுளுதற்கு காரணமான பிறனில் விழைதலைச் செய்தார் மாட்டும் வெகுளுதல் ஆகாதென்றற்கு இது பிறனில் விழையாமையின் பின் கூறப்பட்டது.]

றத்தல் வெகுளியை யார்மாட்டும், தீய
பிறத்தல் அதனான் வரும்.

இ-ள்:- யார்மாட்டும் வெகுளியை மறத்தல் - யார்மாட்டும் வெகுளியைச் செய்தலை மறக்க, தீய பிறத்தல் அதனான் வரும்-தீயன பிறத்தல் அவ்வெகுளியானே வரு மாதலான்.

[தீயன - தீவினைகளும் அவற்றின் பயனாகிய துன்பங்களும், பிறத்தல் - உண்டாதல்.]

இது, வெகுளாமை வேண்டு மென்றது. ௧௫௧.

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான்; அல்லிடத்துக்
காக்கிலென் காவாக்கால் என்?

இ-ள்:- செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் - இயலும் இடத்தில் தனது வெகுளியைக் காப்பவனே வெகுளியைக் காப்பவன் ஆவன்; அல் இடத்து காக்கில் என் காவாக்கால் என் - இயலாத இடத்தில் அதனைத் தவிர்ந்ததினால் (தனக்கு உண்டாகும் பெருமை) யாது? தவிராததினால் (வெகுளப்பட்டார்க்கு உண்டாகும் சிறுமை) யாது?

[இயலும் இடம் - (வெகுளி) செல்லும் இடம்-வெகுளி சென்று வருத்தக்கூடிய இடம்.]

இது, வலியவன் வெகுளாமை வேண்டு மென்றது. ௧௫௨.

ணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

இ-ள்:- இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்-தொடர்வுபட்ட நெருப்பு: மேன்மேலும் வந்துறுதல்போல ஒருவன் தனக்கு இன்னாதவற்றைப் பலகால் செய்யினும், புணரின் வெகுளாமை நன்று-கூடுமாயின் வெகுளாதொழில் நன்று.

மேல் வலியவன் பொறுக்க வேண்டும் என்றவர், அவன் பொறுக்குங்கால் (பொறுக்கப் படுவோர்) தீமைசெய்யினும் பொறுக்க வேண்டு மென்றார். ௧௫௩.

செல்லா இடத்தும் சினம் தீது; செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற.

இ-ள்:- செல்லா இடத்தும் சினம் தீது - இயலாத இடத்தும் சினம் தீது; செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - இயலுமிடத்தினும் அதனின் தீதாயிருப்பன பிற இல்லை.

[செல்லாத என்பது ஈறு கெட்டு நின்றது.]

இது, செல்லிடத்தும் செல்லாத இடத்தும் சினம் தனக்குத் தீமையை விளைக்கும் என்றது. ௧௫௪.

ன்னைத்தான் காக்கச் சினங்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.

இ-ள்:- தன்னைத்தான் காக்க சினம் காக்க - ஒருவன் தன்னைத்தான் காக்க வேண்டுவனாயின் சினம் தோற்றாமற் காக்க; காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் - காவானாயின் சினம் தன்னையே கொல்லும்.

இது, சினத்தால் தனக்கு உயிர்க்கேடு வருமென்றது. ௧௫௫.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.

இ-ள்:- சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி-சினம் என்று சொல்லப்படும் நெருப்பு, ஏமம் இனம் என்னும் புணையைச் சுடும்-தான் துன்பக் கடலில் அழுந்தாமல் கரையேற விடுகின்ற நட்டோராகிய புணையைச் சுடும்.

சேர்ந்தாரைக் கொல்லி-நெருப்பு; இது காரணக்குறி. [நூற்றுவரைக் கொல்லி என்பது போல]

இது சினம் தன்னை யடுத்தாரைக் கொல்லு மென்றது. ௧௫௬.

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு,
நிலத்தெறிந்தான் கைபிழையா தற்று.

இ-ள்:- சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு-சினத்தைப் பொருளாகக் கொண்டவன் கெடுதல், நிலத்து எறிந்தான் கைபிழையாதது அற்று.-நிலத்து எறிந்தவன் கை தப்பாமல் படுவது போலும்.

[எறிதல்-அடித்தல். பிழையாதது என்பது குறைந்து நின்றது.]

இது சினத்தால் தனக்குப் பொருட்கேடு வருமென்றது. ௧௫௭.

கையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உ.ளவோ பிற.

இ-ள்:- நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்-நகுதலையும் மகிழ்தலையும் கெடுக்கும் சினத்தைப் போல, பகையும் பிற உ.ளவோ-பகையா யிருப்பன வேறு சில உளவோ?

இது, சினத்தால் தனக்கு இன்பக்கேடு வரு மென்றது. ௧௫௮.

ள்ளிய வெல்லாம் உடனெய்தும், உள்ளத்தான்
உள்ளான் வெகுளி எனின்.

இ-ள்:- உள்ளத்தான் வெகுளி உள்ளான் எனின்-தன் நெஞ்சினால் வெகுளியை நினையானாகில், உள்ளிய எல்லாம் உடன் எய்தும்-தான் நினைத்தன எல்லாம் ஒரே காலத்துக் கூடப்பெறும்.

இது, சினத்தை விடுதல் நினைத்தவற்றையெல்லாம் எய்துவிக்கு மென்றது. ௧௫௯.

றந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்;
துறந்தார் துறந்தார் துணை.

இ-ள்:- சினத்தை இறந்தார் இறந்தார் அனையர்-சினத்தை மிகுத்தார் செத்தாரோ டொப்பர்; துறந்தார் துறந்தார் துணை-அதனை ஒழிந்தார் (எல்லாப் பொருளையும்) துறந்தாரோ டொப்பர்.

இது வெகுளாதார் பெரியரென்றது. ௧௬0.