திருக்குறள் மணக்குடவருரை/பிறனில் விழையாமை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

௧௫-வது.-பிறனில் விழையாமை.

பிறனில் விழையாமையாவது, பிறனுடைய மனையாளது தோள் நலம் விரும்பாமை. [இது, விலக்கவேண்டிய தீயொழுக்கங்களிலெல்லாம் முதன்மைவாய்ந்த தாதலால், ஒழுக்கமுடைமையின் பின் கூறப்பட்டது.]

றனியலான் இல்வாழ்வான் என்பான், பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.

இ-ள்:- அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் - அற நெறியானே இல்வாழ்வான் என்று சொல்லப்படுமவன், பிறன் இயலாள் பெண்மை நயவாதவன் - பிறன் வழியில் செல்பவளது பெண்மையை விரும்பாதவன்.

[பெண்மை என்பது அவளது நலத்தை உணர்த்தி நின்றது.]

இது, பிறனில் விழையாமை வேண்டு மென்றது. ௧௪௧.

பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்கண் இல்.

இ-ள்:- பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை-பிறனுடைய பொருளா யிருப்பவளை விரும்பி ஒழுகுகின்ற அறியாமை, ஞாலத்து அறம் பொருள் கண்டார்கண் இல்-உலகத்து அறம் பொருள் அறிந்தார்மாட்டு இல்லையாம்.

[அறம்-அறநூல். பொருள்-பொருள்நூல்.]

இது, பிறனில் விழைதல் மறமென்றும் களவென்றும் கூறிற்று. ௧௪௨.

றன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையார் இல்.

இ-ள்:- அறன்கடை நின்றாரு ளெல்லாம் - காமத்தின் கண்ணே நின்றா ரெல்லா ருள்ளும், பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்-பிறனொருவன் கடைத்தலைப் பற்றி நின்றவர்களைப் போல் அறியாதார் இல்லை .[கடைத்தலை-தலைவாயில்.]

இது, பிறனில் விழைதல் பெரும்பேதைமை யென்றது. ௧௪௩.

னைத்துணைய ராயினும் என்னாம், தினைத்துணையும்
தேரான் பிறனில் புகில்.

இ-ள்:- எனை துணையர் ஆயினும்- எல்லா அமைதியையும் உடையாாராயினும், தினை துணையும் தேரான் பிறன் இல் புகில்-(அவர்) தினை யளவும் தேராது பிறனுடைய இல்லிலே புகுவாராயின், என் ஆம்-அவர் அமைதி யாதாகும்? (ஒன்றும் இல்லாததாகும்.)

["யாமெய்யாக் கண்டவற்றுள்" என்னும் தொடக்கக் குறளின் கீழ்க் குறிக்கப்பட்ட தொல்காப்பியச் சூத்திர விதிப்படி தேரான் என்னும் ஒருமைப்பெயர் தேரார் என்னும் பன்மைப்பெயர்க் காயிற்று. அமைதி - நிறைவு - நற்குண நிறைவு. தினைத்துணையும் -.சிறிதளவும்.]

பிறனில் விழைவால் வரும் குற்றம் கூறுவார், முற்பட எல்லாக் குணமும் அழியமென்று கூறினார். ௧௪௪.

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்.

இ-ள்:- தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார்-தம்மைத் தெளிந்தார் இல்லின் கண்ணே தீமையைப் புரிந்து ஒழுகுவார், மன்ற விளிந்தாரின் வேறு அல்லர்-மெய்யாகச் செத்தாரின் வேறல்லர்.

அவர் அறம் - பொருள் - இன்பம் எய்தாமையின், பிணத்தோடு ஒப்பரென்றார். ௧௪௫.

ளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

இ-ள்:- எளிது என இல் இறப்பான் - (தனக்கு) எளிதென்று நினைத்து (ப் பிறனுடைய) இல்லின் கண்ணே மிகுமவன், எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழி எய்தும்- எல்லா நாளும் அழியாத நிற்கும் பழியைப் பெறுவான்.

[மிகுமவன் - மிகை செய்யுமவன் - பிழை செய்யுமவன்.]

இஃது, அவனுக்கு அழியாத பழி உண்டா மென்றது. ௧௪௬.

கைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

இ-ள்:- இல் இறப்பான்கண் - (பிறன்) இல்லின் கண்ணே மிகுவான் மாட்டு, பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம்-பகையும் பாவமும் அச்சமும் பழியும் என்னும் நான்கு பொருள்களும் நீங்காவாம்.

இஃது, அவனை விட்டுப் பகையும் பாவமும் அச்சமும் பழியும் நீங்கா வென்றது. ௧௪௭.

பிறன்மனை நோக்காத பேராண்மை, சான்றோர்க்
கறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.

இ-ள்:- பிறன் மனை நோக்காத பேராண்மை - பிறனது மனையாளைப் பாராத பெரிய ஆண்மைதானே, சான்றோர்க்கு அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு-சான்றோர்க்கு அறனும் ஆன்ற ஒழுக்கமுமாம்.

[ஒன்றே என்பது எண்ணுப்பொருளில் வந்தது.]

இது, பிறன்மனை நோக்காமை அறனும் ஒழுக்கமுமா மென்றது. ௧௪௮.

லக்குரியார் யாரெனின், நாமநீர் வைப்பில்
பிறற்குரியாள் தோடோயா தார்.

இ-ள்:- நாம நீர் வைப்பில் - அச்சத்தைத் தருகின்ற நீர் சூழ்ந்த உலகத்தில், நலக்கு உரியார் யார் எனின் - நலத்துக்கு உரியார் யார் எனில், பிறற்கு உரியாள் தோள் தோயாதார் - பிறனுக்கு உரியவளது தோளைத் தீண்டா தார்.

நலக்குரியார் - விரும்புதற்குரியார். [நலத்துக்கு என்பது நலக்கு எனக் குறைந்து நின்றது.]

இது, பிறனில் விழையார் யாவராலும் விரும்பப்படுவ ரென்றது. ௧௪௯.

றன்வரையான் அல்ல செயினும், பிறன்வரையான்
பெண்மை நயவாமை நன்று.

இ-ள்:- அறன் வரையான் அல்ல செயினும் - அறத்தை வரையாதே அறமல்லாதன செய்யினும், பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று - பிறன் இடத்தாளானவளது பெண்மையை விரும்பாமை நன்று.

[வரையாமை - உரித்தாகச் செய்யாமை. அல்ல - அறன் அல்லாதவை - மறங்கள்.]

இது, பிறனில் விழையான் ஓர் அறனும் செய்தில னாயினும், பல நன்மைகளை அடைவா னென்றது. ௧௫0.