திருக்குறள் மணக்குடவருரை/ஒழுக்கமுடைமை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

௧௪-வது.-ஒழுக்க முடைமை,

ஒழுக்கமுடைமையாவது, தத்தம் நிலைக்கு ஏற்ற ஒழுக்கமுடையாரதல், (இது, பொறையுடைமை சார்பாக நிகழ்தலின் அதன்பின் கூறப்பட்டது.]

ரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம், தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

இ-ள்:- பரிந்து ஓம்பி ஒழுக்கம் காக்க - வருந்திப் போற்றி ஒழுக்கத்தினைக் காக்க, தெரிந்து ஓம்பி தேரினும் அஃதே துணை - (எல்லா அறங்களிலும் நல்லதனைத்) தெரிந்து (அதனையும்) தப்பாமல் ஆராய்ந்து பார்ப்பினும் (தமக்கு) ஒழுக்கமே துணையா மாதலால்.

இஃது, ஒழுக்கத்தைக் காக்க வேண்டு மென்றது. ௧௩௧.

லகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

இ-ள்:- அறிவு இலாதார் பல கற்றும் - அறிவில்லாதவர் பல் நூல்களைக் கற்றாலும், உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - உயர்ந் தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார்,

ஒழுக்கமாவது உயர்ந்தார் ஒழுகின நெறியில் ஒழுகுதல் என்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலியுடைத் தென்பதூஉம் இது கூறிற்று. ௧௩௨.

றப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்;
பிறப்பொழுக்கம்: குன்றக் கெடும்,

இ-ள்:- ஒத்து பார்ப்பான் மறப்பினும் கொளலாகும் - நூல்களைக் கற்பவன் (அவற்றை) மறந்தானாயினும் பின்னும் கற்றுக்கொள்ளலாம். ஒழுக்கம் குன்ற பிறப்பு கெடும்-ஒழுக்கம் குறையுமாயின் அவன் பிறப்பின் பயன் கெடும்.

[பிறப்பின் பயன் - மக்கட்பிறப்பை அடைந்ததனால் அடையும் பயன். பிறப்பு என்பது ஆகுபெயர், அதன் பயனுக்காயினமையால்.]

இது, கல்வியிலும் ஒழுக்கம் வலிதான வாறு கூறிற்று, ௧௩௩.

ழுக்கத்தின் ஒல்கார் உரவோர், இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.

இ-ள்:- ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் - ஒழுக்கத்தின் நின்று நீங்கார் அறிவுடையோர், இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து - (ஒழுக்கத்தைத்) தப்புதலால் குற்றம் வருதலை யறிந்து.

[படுபாக்கு என்பது தொழிற்பெயர்; பாக்கு - விகுதி.]

இஃது, அறிவுடையார் ஒழுக்கத்தினைத் தவிராரென்றது. குற்றம் வருதல் பின்னே காணப்படும். ௧௩௪.

ழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

இ-ள்:- ஒழுக்கம் உடைமை குடிமை - (ஒருவன்) ஒழுக்கம் உடையவனாக உயர்ந்த குலத்தானாம்; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - (ஒருவன் ஒழுக்கத்தைத்) தப்புதலால் இழிந்த குலத்தானாம்.

ஒழுக்கத்தால் குலம் ஆகுமென்றும், ஒழுக்கமின்மையால் குலம் செடுமென்றும் இது கூறிற்று. ௧௩௫.

ழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.

இ-ள்:- அழுக்காறு உடையான் கண் ஆக்கம் போன்று - மனக்கோட்ட முடையவன் மாட்டு ஆக்கம் (இல்லையானாற்) போல, ஒழுக்கம் இலான்கண் உயர்வு இல் - ஒழுக்கம் இல்லா தான்மாட்டு மிகுதி இல்லையாம். [மிகுதி - உயர்ச்சி.]

இஃது, ஒழுக்க மில்லா தானுக்கு உயர்ச்சி இல்லை என்றது. ௧௩௬.

ழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

இ-ள்:- ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - ஒழுக்கத்தாலே (தாம் முன்னர்) எய்தாத மேம்பாட்டை எய்துவர். இழுக்கத்தின் எய்தா பழி எய்துவர் - ஒழுக்கமின்மையாலே (தமக்கு) அடாத பழியை எய்துவர்.

[எய்தாத என்பது ஈறுகெட்டு நின்றது. .அடாத - தகாத.]

இஃது, ஒழுக்கத்தால் புகழும், ஒழுக்கமின் மையால் இகழும் அடைவ ரென்றது. ௧௩௭.

ன்றிக்கு வித்தாகும். நல்லொழுக்கம்; தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

இ-ள்:- நன்றிக்கு நல் ஒழுக்கம் வித்து ஆகும் - முத்திக்கு நல்ல ஒழுக்கம் விதையாகும். தீ ஒழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீய ஒழுக்கம் என்றும் இடும்பையைத் தரும்.

என்றும் - இருமையின் கண்ணும்.

நல்லொழுக்கம் இன்பத்தையும் தீயொழுக்கம் துன்பத்தையும் தருமென்று இது கூறிற்று. ௧௩௮.

ழுக்கம் உடையவர்க் கொல்லாதே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்,

இ-ள்:- தீய வழுக்கியும் வாயால் சொல் - தீமை பயக்கும் சொற்களை மறந்தும் வாயாற் சொல்லுதல், ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாது - ஒழுக்கம் உடையாருக்கு இயலாது. [ஏகாரம், அசை.]

இஃது, ஒழுக்கமுடையார் தீய சொற்களைச் சொல்லா ரென்றது. ௧௩௯.

ழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

இ-ள்:- ஒழுக்கம் விழுப்பம் தரலால் - ஒழுக்கமுடைமை மேன்மையைத் தருதலானே, ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் - அவ் வொழுக்கத்தைத் தனது உயிரைக் காட்டினும் காக்கவேண்டும்.

[படும் என்பது வேண்டும் என்னும் பொருளில் வந்தது.]

மேற்கூறிய நன்மையெல்லாம் தருதலின் ஒழுக்கத்தினைத் தப்பாமல் செய்ய வேண்டு மென்று இது வலியுறுத்தியது. ௧௪0.