திருக்குறள் மணக்குடவருரை/பொறையுடைமை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

௧௩-வது.-பொறை யுடைமை.

பொறையுடைமையாவது, தமக்குத் துன்பம் செய்தார் (க்குத் தாமும் துன்பம் செய்யாது அவர்) மாட்டுச் சென்ற வெருளியை மீட்டல், [நடுவு நிலைமையை விடாது ஒழுகுதற்குப் பொறையுடைமை இன்றியமையாத தொன்றாதலின், இஃது அதன்பின் கூறப்பட்டது.]

பொறுத்தல் இறப்பினை என்றும், அதனை
மறத்தல் அதனினும் நன்று.

இ-ள்:- இறப்பினை என்றும் பொறுத்தல் (நன்று) - (பிறர் செய்த) மிகையினை என்றும் பொறுத்தல் நன்று; அதனை மறத்தல் அதனினும் நன்று - மிகையினை மறத்தல் பொறையிலும் நன்று. [மிகை - பிழை. நன்று என்பது முன்னரும் கூட்டி யுரைக்கப்பட்டது.]

பிறர் செய்த மிகையினைப் பொறுத்தல் நன்றென்பதூஉம், அதனை மறத்தல் அதனினும் சிறந்த நன்றென்பதூஉம் இது கூறிற்று. ௧௨௧.

திறனல்ல தற்பிறர் செய்யினும், நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று.

இ-ள்:- திறன் அல்ல தன் பிறர் செய்யினும் - தகுதியில்லாதவற்றைத் தனக்குப் பிறர் செய்தாராயினும், நோ நொந்து அறன் அல்ல செய்யாமை நன்று - (தகுதியல்லா தவற்றைத் தானும் செய்தால் அவர்க்கு உளதாம்) நோவுக்கு நொந்து அறமல்லாதவற்றைச் செய்யாமை நன்று. [நோ - துன்பம். நொந்து - வருந்தி.]

இது, தனக்குப் பிறர் தீங்கு செய்யினும் தான் அவர்க்குத் தீங்கு செய்யலாகா தென்றது. ௧௨௨.

நிறையுடைமை நீங்காமை வேண்டின், பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.

இ-ள்:- நிறையுடைமை நீங்காமை வேண்டின் - (தன்னினின்று) நிறையுடைமை நீங்காதிருத்தல் வேண்டுவனாயின், பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் - (தான்) பொறையுடைமையைப் பாதுகாத்து ஒழுகவேண்டும்.

நிறை யென்பது காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம். [படும் என்பது வேண்டும் என்னும் பொருளில் வந்தது.]

இது, பொறையுடைமையால் நிறையுடைமை நிலைபெறு மென்றது. ௧௨௩.

கழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

இ-ள்:- அகழ்வாரை தாங்கும் நிலம் போல - (தன்னை) அகழ்வாரைத் தாங்குகின்ற நிலம் போல, தம்மை இகழ்வார் பொறுத்தல் தலை - தம்மை இகழுமவர்களைப் பொறுத்தல் தலைமையாம். [அகழ்தல் - தோண்டுதல்.]

இது, பிறர் மிகையைப் பொறுத்தானென்று இகழாது அவன் பொறுத்ததைத் தலைமையா(ன ஒழுக்கமா)கக் கொள்வார் உலகத்தா ரென்றது. ௧௨௪.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்,

இ-ள்:- மிகுதியான் மிக்கவை செய்தாரை - செல்வமிகுதியாலே மிகையானவற்றைச் செய்தவரை, தாம் தம் தகுதியான் வென்று விடல் - தாம் தமது பொறையினானே வென்றுவிடுக. . இது, மிகை செய்தாரைப் பொறுத்தல் தோல்வியாகா தென்றும் அதுதானே வெற்றியா மென்றும் கூறிற்று. ௧௨௫.

ன்மையுள் இன்மை விருந்தொரால்; வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை,

இ-ள்:- இன்மையுள் இன்மை விருந்து ஒரால் - வலியின்மையுள் வலியின் மையாவது விருந்தினரை நீக்குதல்; வன்மையுள் வன்மை மடவார் பொறை - வலியுடைமையுள் வலியுடைமையாவது அறியாதாரைப் பொறுத்தல்.

[ஒரால் என்பது ஆல் விகுதிபெற்ற தொழிற்பெயர்.]

இது, விருந்தினரை விலக்குதல் எளிமையுள் எளிமை யென்றும், அறிவிலார் செய்த மிகையைப் பொறுத்தல் வலிமையுள் வலிமை யென்றும் கூறிற்று. ௧௨௬.

றுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து,

இ-ள்:- ஒறுத்தாரை ஒன்றாக வையார் - (தமக்குத் துன்பம் செய்தாரை மாறாக) ஒறுத்தாரை ஒரு பொருளாக மதித்து வையார், பொறுத்தாரை பொன்போல் பொதிந்து வைப்பர் - பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தல்போலப் போற்றிவைப்பர் (உலகத்தார்).

[ஏகாரம் அசை. ஒறுத்தல் - தண்டித்தல். பொதிந்து வைத்தல் - மறைத்து வைத்தல் - போற்றி வைத்தல்,]

இது, மிகை செய்தாரைப் பொறுத்தோரை உலகத்தார் பெரியோராகப் போற்றுவ ரென்றது. ௧௨௭.

றுத்தார்க் கொருநாளே இன்பம்; பொறுத்தார்க்குப்
பொன்றும் தனையும் புகழ்.

இ-ள்:- ஒறுத்தார்க்கு ஒரு நாளே இன்பம் - (மிகை செய்தாரை) ஒறுத்தவர்க்கு (ஒறுத்த அற்றை) ஒரு நாளே இன்பம் (உண்டாம்); பொறுத்தார்க்கு பொன்றும் தனையும் புகழ் - பொறுத்தவர்க்குச் சாம் அளவும் புகழ் (உண்டாம்).

இது, மிகை செய்தாரைப் பொறுத்தார்க்கு இன்பமும் புகழும் உண்டா மென்றது. ௧௨௮.

ண்ணாது நோற்பார் பெரியர்; பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

இ-ள்:- உண்ணாது நோற்பார் பெரியர் - உண்ணாது நோற்பார் எல்லாரினும் பெரியர்; பிறர்சொல்லும் இன்னாத சொல் நோற்பாரின் பின் - பிறர் சொல்லும் கடுஞ்சொல்லைப் பொறுப்பாரின்பின்

இசு, பிறர் சொல்லும் தீச்சொற்களைப் பொறுப்பவர் தவம் பண்ணுவாரினும் பெரிய ரென்றது. ௧௨௯.

துறந்தாரின் தூய்மை யுடையார், இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்,

இ-ள்:- இறந்தார் வாய் இன்னாச்சொல் நோற்கிற்பவர் - மிகுந்தாரது வாயினின்று வரும் தீச்சொற்களைப் பொறுக்குமவர், துறந்தாரின் தூய்மை யுடையார் - துறந்தவர்களைப்போலத் தூய்மையுடையார்.

[மிகுந்தார் - நெறியைக்கடந்தார் - பிழை செய்தார். தூய்மையுடையார் - தூய ஒழுக்கத்தை யுடையார்.]

இது, மிகைசெய்தாரைப் பொறுப்பவர் பற்றறத் துறந்தவரோ டொப்ப ரென்றது. ௧௩0.