திருக்குறள் மணக்குடவருரை/நடுவுநிலைமை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

௧௨-வது.-நடுவு நிலைமை.

நடுவு நிலைமையாவது, நட்டார் மாட்டும் பகைவர் மாட்டும் ஒக்க நிற்கும் நிலைமை. . [செய்ந்நன்றி யறிதற் கண்ணும் நடுவு நிலைமையை விடலாகா தென்றதற்காக இவ்வதிகாரம் அதன்பின் கூறப்பட்டது.]

மன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

இ-ள்:- சமன்செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்து - சமன்வரை பண்ணி (இரண்டு தலையும்) சீரொத்தால் தூக்கிப்பார்க்கும் நிறைகோல் போல (வீக்கம் தாக்க மற்று) நின்று, ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி - தம் நெஞ்சை ஒருவன்பக்கமாகக் கோடவிடாமை சான்றோர்க்கு அழகு.

[சமன்வரை - நிறுக்கும் கருவியாகிய வெள்ளிக்கோலின் இரண்டு தலைகளும் சமனாக (ஒக்க) நிற்குமாறு செய்தற்குத் தூக்கும் கயிறு இடப்படும் வரை, வீக்கம் தாக்கம் - உயர்வு தாழ்வு.]

இது, நடுவு நிலைமை வேண்டு மென்றது. ௧௧௧.

சொற்கோட்ட மில்லது செப்பம், ஒருதலையா
உட்கோட்ட மின்மை பெறின்.

இ-ள்:- செப்பம் கோட்டம் இல்லது சொல் - நடுவு நிலைமையாவது கோட்டம் இல்லாததாகிய சொல்லாம், ஒருதலையாக உட்கோட்டம் இன்மை பெறின் - அது கவராது மனக்கோட்டமின்மையோடு கூடுமாயின். [கோட்டம் - கோணுதல், ஒரு தலையாக என்பது ஈறு கெட்டு நின்றது.]

நடுவு நிலைமையாவது செவ்வை சொல்லுத லென்பதூஉம், இரு பொருட் பொதுமொழி கூறுத லென்பதூஉம் இது கூறிற்று.

[இருபொருட் பொதுமொழி - இருவர் கூறும் பொருள்களுக்கும் பொதுவாக நின்று கூறும்மொழி.] ௧௧௨.

குதிஎன ஒன்று நன்றே, பகுதியால்
பால்பட் டொழுகப் பெறின்.

இ-ள்:- தகுதி என ஒன்று நன்றே - நடுவுநிலைமை யென்று சொல்லப் படுகின்ற ஒன்று நல்லதே, பகுதியால் பால்பட்டு ஒழுகப் பெறின் - அவரவர் பகுதி நிலைமையோடே (அறத்தின்) பால்பட்டு ஒழுகப்பெறுமாயின்.

[ஆல் என்பது உடனிகழ்ச்சியில் வந்தது.]

இஃது, அவரவர் பகுதிநிலைமையோடும் அறத்தோடும் பொருந்தச் செய்தலே தகுதியா மென்றது. ௧௧௩.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம், பேணிப்
பிறவும் தமபோல் செயின்.

இ-ள்:- வாணிகம் செய்வார்க்கு வாணிகம் - வாணிகம் செய்வார்க்கு வாணிகம் ஆம், பிறவும் தம போல் பேணி செயின் - பிறர் பொருள்களையும் தமது பொருள்கள் போலப் பேணிச் செய்வாராயின். [ஆம் - பலிக்கும்.]

இது, வாணிகம் செய்வார் பிறர் பொருளையும் தம் பொருள் போலப் பேணவேண்டு மென்றது. ௧௧௪.

கேடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

இ-ள்:- கேடும் பெருக்கமும் இல் அல்ல - கேடு வருதலும் ஆக்கம் வருதலும் (உலகத்து) இல்லை யல்ல; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி - (அவ்விரண்டி னுள்ளும் யாதானும் ஒன்று வந்த காலத்துத் தம்) நெஞ்சு கோடாம லொழுகல் சான்றோர்க்கு அழகாம்.

இது, தாம் கேடுற்ற இடத்தும் தம் நெஞ்சம் கோடாமல் ஒழுகல் வேண்டு மென்றது. ௧௧௫.

கெடுவாக வையா துலகம், நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

இ-ள்:- நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு - நடுவாக நன்மையின் கண்ணே நின்றவன் (அதுகாரணமாகப் பொருட் கேட்டை அடைவானாயின், அப்) பொருட் கேட்டை, உலகம் கெடுவாக வையாது - உலகத்தார் கேடாகச் சொல்லார். (ஆக்கத்தோடே எண்ணுவர்.)

நடுவுநிலைமை யுடையான் கேடுற்றால் அதனைக் கேடாகக் கருதார் உலகத்தார் என்று இது கூறிற்று. ௧௧௬.

ன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.

இ-ள்:- நன்றே தரினும் - பெருமையே தரினும், நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை - நடுவுநிலைமையை நீங்கிவரும் ஆக்கத்தை, அன்றே ஒழிய விடல் - (அது வருவதற்குத் தொடக்கமான) அன்றே ஒழிய விடுக.

இது, நடுவு நிலைமையை விடுதலால் வரும் பொருள் பெருமை தரா தென்றது. ௧௧௭.

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.

இ-ள்:- தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் - தன் நெஞ்சு நடுவு நிலைமையை நீங்கி நடுவல்லாதவற்றைச் செய்யுமாயின், யான் கெடுவல் என்பது அறிக - (அஃது ஏதுவாக) 'யான் கேடுறுவேன்' என்பதனை (ஒருவன்) அறிக.

இது, மனம் நடுவு நிலைமையை விட்டு நீங்குமாயின், அது தனது கேட்டிற்கு முதற்குறி யென்றது. ௧௧௮.

க்கார் தகவிலார் என்ப தவரவர்
எச்சத்தால் காணப் படும்.

இ-ள்:- தக்கார் தகவிலார் என்பது - செவ்வை யுடையார் செவ்வையிலார் என்பது, அவரவர் எச்சத்தால் காணப்படும் - அவரவர் மக்களானே காணப்படும்.

இது, தக்கார் தகவிலார் என்னும் பெயர் தம்மளவிலே நிற்பதன்றியும் தம்மக்களையும் விடா தென்றது. ௧௧௯.

செப்பம் உடையவன் ஆக்கம், சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து.

இ-ள்:- செப்பம் உடையவன் ஆக்கம் - நடுவு நிலைமையுடையவனது செல்வம், சிதைவு இன்றி - (தன்னளவிலும்) கேடின்றியே நின்று, எச்சத்திற்கும் ஏமாப்பு உடைத்து - தன் வழியுள்ளார்க்கும் (கேடுவராமல் காக்கும்) காவலதனை யுடைத்து. [எச்சத்திற்கும் என்பது உம்மை கெட்டு நின்றது.]

இது, நடுவு நிலைமை யுடையார் செல்வம் அழியா தென்றது. ௧௨0.