திருக்குறள் மணக்குடவருரை/செய்ந்நன்றியறிதல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

௧௧-வது.-செய்ந் நன்றி யறிதல்.

செய்ந்நன்றி யறிதலாவது, பிறர் செய்த (தீமையை மறந்து) நன்மையை மறவாமை. (இஃது, இல்வாழ்வாரும் அவரால் ஓம்பப் பெற்ற விருந்தினரும் கைக்கொள்ள வேண்டுவதொன் றாதலின், வாய்மை யுடைமையின் பின் கூறப் பட்டது.)

றவற்க மாசற்றார் கேண்மை, துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு,

இ-ள்:- துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு துறவற்க - (தனக்குத்) துன்பம் வந்த காலத்து வலியாயினர் நட்பை (எக்காலத்தும்) விடாதொழிக. மாசு அற்றார் கேண்மை மறவற்க - குற்றமற்றாரது நட்பை (எக்காலத்தும்) மறவாதொழிக.

(இம்முதற்குறளை "மறவற்க மாசற்றார் கேண்மை"' என்று தொடங்கியதே, இவ்வதிகாரத்திற்கு முந்தியது "வாய்மையுடைமை” என்பதை வலியுறுத்தும், "தூஉய்மை யென்ப தவாவின்மை; மற்றது - வாஅய்மை வேண்ட வரும்" என்றதனால்.]

இது, தாம் இடருற்றுழித் தமக்கு உதவி செய்தாரது நட்பையும் குற்றமற்றாரது நட்பையும் விடற்க என்றது. ௧0௧.

ன்றி மறப்பது நன்றன்று; நன்றல்ல
தன்றே மறப்பது நன்று.

இ-ள்:- நன்றி மறப்பது நன்றன்று - (பிறர் செய்த) நன்மையை (என்றும்) மறப்பது நன்றன்று;. நன்று அல்லது அன்றே மறப்பது நன்று - (பிறர் செய்த தீமையை அன்றே மறப்பது நன்று.

இது, பிறர் செய்த நன்றியை என்றும் மறக்கலாகா தென்றும் தீமையை உடனே மறக்க வேண்டு மென்றும் கூறிற்று. ௧0௨.

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

இ-ள்:- செய்யாமல் செய்த உதவிக்கு - (முன் ஓர் உதவி தாம்) செய்யாதிருக்க (த்தமக்கு ஒருவன்) செய்த உதவிக்கு, வையகமும் வானகமும் ஆற்றல் அரிது - இவ்வுலகமும் சுவர்க்கமும் நிறையாற்றுதல் அரிது.. [நிறை ஆற்றுதல்-நிறையில் சமமாதல்.]

இது, தம்மிடம் ஓர் உதவியும் பெறாதார் தமக்குச் செய்த உதவி இப்புவியினும் சுவர்க்கத்தினும் பெரிதா மென்றது. ௧0௩.

யன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்,
நன்மை கடலிற் பெரிது.

இ-ள்:- பயன் தூக்கார் செய்த உதவி நயன் தாக்கின் - ஒரு பயனைக் கருதா ராய்த் தமக்குச் செய்த உபகார(த்தினால் உண்டாய) நன்மையை ஆராயில், நன்மை கடலின் பெரிது -(அந்) நன்மை கடலினும் பெரிது. .

இஃது, ஒரு பயனைக் கருதாது செய்த உதவி கடலினும் பெரி தென்றது. ௧0௪.

காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

இ-ள்:- காலத்தினால் செய்த நன்றி - (உதவி வேண்டும்) காலத்தில் செய்த உதவி, சிறிது எனிலும் - (தான்) சிறிதாயிருந்ததாயினும், ஞாலத்தின் மாணப் பெரிது - உலகத்தினும் மிகப்பெரிதாம். [காலத்தினால் என்பது வேற்றுமை மயக்கம்.]

இஃது, உதவிவேண்டும் காலத்தில் செய்த உதவி மிகப்பெரி தென்றது. ௧0௫.

தினைத்துணை நன்றி செயினும், பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

இ-ள்:- தினைத்துணை நன்றி செயினும் - தினையளவு நன்றி செய்தாராயினும், பனைத்துணையாகக் கொள்வர் பயன் தெரிவார் - (அதனை அவ்வளவிற்றென்று நினையாது) பனையின் அளவினதாகக் கொள்வர் (உதவியின்) பயனை அறிவார்.

[தினையளவு, பனையளவு என்பன முறையே சிறிய அளவையும் பெரிய அளவையும் குறித்து நின்றன.]

செயல்வகையால் சிறிதாயினும், நன்றி பயன்வகையால் பெரிதா மென்றது இது. ௧0௬.

ழுமை எழுபிறப்பும் உள்ளுவர், தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.

இ-ள்:- தம் கண் விழுமம் துடைத்தவர் நட்பு - தம் கண் (உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை, எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் - (அப்பிறப்பிலே யன்றி) எழுமையிலும் தோற்றும் பிறப்பெல்லாம் நினைப்பர் (சான்றோர்).

[எழுமை - ஏழ்முறை. எழு என்றும் வினைத்தொகை இங்கு எதிர்காலத்தைக் குறித்து நின்றது.]

இது, தமக்கு நன்றி செய்தார் நட்பினை எஞ்ஞான்றும் மறக்க லாகா தென்றது. ௧0௭.

தவி வரைத்தன் றுதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

இ-ள்:- உதவி வரைத்து அன்று உதவி - (முன்பு செய்யப் பெற்ற) உதவியின் அளவின தன்று (பின்பு செய்யும்) மாற்றுதவி; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து - (முன்பு) உதவி செய்யப் பெற்றவர் நன்மை எவ்வளவிற்று அவ்வளவிற்று (அது).

இது, மாற்றுதவிக்கு அளவில்லை யென்றது. ௧0௮.

கொன்றன்ன இன்னா செயினும், அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்.

இ-ள்:- கொன்றால் அன்ன இன்னா செயினும்-(தமக்கு முன்பு நன்மை செய்தார்) தம்மைக் கொன்றாலொத்த இன்னாமையைப் பின்பு) செய்யினும், அவர் செய்த நன்று ஒன்று உள்ள கெடும் -அவர் முன்பு செய்த நன்றி ஒன்றை நினைக்க அவ்வின்னாமை யெல்லாம் கெடும்.

[இன்னாமை - தீமை. கொன்றால் என்பது - 'ஆல்' கெட்டு நின்றது.]

இது, முன் தமக்கு உபகாரம் செய்தவர் பின் தமக்கு அபகாரம் செய்யின், அவ் வபகாரமெல்லாம் முன்செய்த உபகாரத்திற்கு ஈடாகா வென்பது, ௧0௯.

ந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் ; உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

இ-ள்:- எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் - எல்லா நன்மைகளையும் சிதைத்தார்க்கும் (பின்பு ஒருகாலத்தேயாயினும்) உய்தல் உண்டாம்; உய்வு இல்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு- (ஒரு காலத்தினும்) உய்தல் இல்லை ஒருவர் செய்த நன்றியைக் கொன்ற மகனுக்கு, [கொன்ற - சிதைத்த.]

இது, செய்ந்நன்றி கொன்ற பாவம் அநுபவித்தல்லது பிராயச்சித்தத்தால் தீரா தென்றது. ௧௧0.