திருக்குறள் மணக்குடவருரை/வாய்மையுடைமை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

க0-வது.- வாய்மை யுடைமை.

வாய்மையாவது, பொய் சொல்லாமை. [அஃதாவது, தீமையில்லாத சொற்களைச் சொல்லுதல், இது விருந்தோம்பலின் கண்ணே இன்றியமையாது வேண்டப்படுவ தொன்றாதலின், அதன்பின் கூறப் பட்டது.]

ன்னெஞ் சறிவது பொய்யற்க; பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்.

இ-ள்:- தன் நெஞ்சு அறிவது பொய்யற்க - தன் நெஞ்சு அறிந்ததனைப் பொய்யாது சொல்லுக; பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும் - பொய்ப்பனாயின் பின் தன் நெஞ்சுதானே தன்னைச் சுடும்.

சுடுதலாவது தான் பொய்த்ததனால், பிறர்க்கு உளதாகும் தீமையைக் கண்டு "என் செய்தோம் யாம்!" என்ன வருத்துவித்தல்.

இது, பொய்யாமை வேண்டு மென்றது. ௯௧.

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை, எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

இ-ள்:- யாம்மெய்யாகக் கண்டவற்றுள் - யாம் மெய்யாகக் கண்ட அறங்களுள், வாய்மையின் நல்ல பிற எனைத்தொன்றும் இல்லை - மெய்சொல்லுதல்போல் நன்றாயிருப்பன வேறு எவையும் இல்லை.

["ஒருமை சுட்டிய பெயர் நிலைக் கிளவி - பன்மைக் காகு மிடனுமா ருண்டே" என்னும் தொல்காப்பியச் சூத்திரப்படி, எனைத் தொன்றும் என்னும் ஒருமைப் பெயர் எவையும் என்னும் பன்மைப் பெயர்க் காயிற்று.]

இது, வாய்மையோடு மற்றை எவ்வறமும் ஒவ்வாதென்று அதன் தலைமை கூறிற்று. ௯௨.

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

இ-ள்:- வாய்மை எனப்படுவது யாது எனின் - பொய் சொல்லாமை என்று சொல்லப்படுவது யாதென்று வினவில், தீமை இலாத யாதொன்றும் சொலல் - (பிறர்க்குத்) தீமைபயவாத யாதொன்றானும் சொல்லுதல் (என்க).

[தீமைபயவாத - தீங்கைக் கொடுக்காத சொற்களை, யாதொன்றானும் - எந்தவகையானும், யாதொன்றானும் என்பது தொகுத்தலாய் யாதொன்றும் என நின்றது.]

இது, வாய்மை யாதென்றார்க்குக் கூறப்பட்டது. ௯௩.

பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்,

இ-ள்:- பொய்ம்மையும் வாய்மை இடத்த - பொய்களும் மெய்யின் நிலைமையை உடையனவாம், புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் - குற்றம் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்.

[குற்றம் தீர்ந்த - குற்றம் நீங்கிய - குற்ற மற்ற.]

குற்றமற்ற நன்மையைப் பயக்குமாயின், பொய்ம்மையும் வாய்மையோ டொக்கு மென்று இது கூறிற்று. ௯௪.

ள்ளத்தால் பொய்யா தொழுகின், உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.

இ-ள்:- உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் - (ஒருவன்றன்) நெஞ்சினால் பொய்யை நினையாது ஒழுகுவனாயின், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - உலகத்தார் நெஞ்சினு ளெல்லாம் உளனாவன்.

இது, பொய்யை நினையாதவரை எல்லாரும் போற்றுவ ரென்றது. ௯௫.

னத்தொடு வாய்மை மொழியின், தவத்தொடு
தானம் செய்வாரில் தலை.

இ-ள்:- மனத்தொடு வாய்மை மொழியின் - (ஒருவன்) மனத்தோடேகூட மெய் சொல்லுவனாயின், தவத்தொடு தானம் செய்வாரில் தலை - தவத்தோடேகூடத் தானம் செய்வாரில் தலையாவன்.

இது, மனத்தோடு வாய்மைமொழிதல் எல்லா நன்மைகளையும் பயக்கு மென்றது, ௯௬.

பொய்யாமை அன்ன புகழில்லை, பொய்யாமை
எல்லா அறமும் தரும்.

இ-ள்:- பொய்யாமை அன்ன புகழ் இல்லை- பொய்யாமையால் வரும் (பொய்யாமையை உடைய. என்னும்) புகழோடு ஒத்த புகழ் வேறொன்றும் இல்லை, பொய்யாமை எல்லா அறமும் தரும் - பொய்யாமையானது (அவன் அறியாமல் தானே) எல்லா அறங்களையும் கொடுக்கு மாதலான்.

[பொய்யாமை என்பது அதனால் வரும் புகழுக்காயின்மையால் ஆகுபெயா.]

இது, வாய்மை மற்றை எல்லா அறங்களையும் பயக்கு மென்றது. ௯௭.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின், அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று,

இ-ள்:- பொய்யாமை பொய்யாமை ஆற்றின் - பொய்யாமைப் பொய்யாமல் செலுத்தவனாயின், பிற அறம் செய்யாமை செய்யாமை நன்று - பிற அறங்களைச் செய்தல் நன்றாம்.

[செலுத்துதல் - கைக்கொண்டொழுகுதல், செய்யாமை செய்யாமை - செய்யாமையைச் செய்யாமை - செய்தல்.]

இது, பொய்யாமையைக் கடைப்பிடித்தொழுகினல்லது மற்றை அறங்கள் பயன்படா வென்றது. ௯௮.

புறம்தூய்மை நீரால் அமையும்; அகம்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

இ-ள்:- புறம் தூய்மை நீரால் அமையும் - உடம்பின் தூய்மை நீரினாலே அமைந்துவிடும்; அகம் தூய்மை வாய்மையால் காணப் படும் - மனத்தின் தூய்மை மெய் சொல்லுதலானே அறியப்படும்.

இது, வாய்மையால் மனத்தூய்மை உண்டாமென்றது. ௯௯.

ல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு,

இ-ள்:- சான்றோர்க்கு எல்லா விளக்கும் விளக்கு அல்ல - சான்றோர்க்கு எல்லா (அறங்களினாலும் உண்டான) ஒளிகளும் ஒளிகள் அல்ல; பொய்யா விளக்கே விளக்கு - பொய்யா (மையான் உண்டான) ஒளியே ஒளியாகும்.

[விளக்கு - விளக்கம் - ஒளி - நிலையான புகழ்.]

இது, சான்றோர்க்கு வாய்மை இன்றியமையாதென்று கூறிற்று. ௧00.