திருக்குறள் மணக்குடவருரை/வாழ்க்கைத்துணைநலம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

௬-வது.-வாழ்க்கைத் துணை நலம்.

வாழ்க்கைத் துணைநல மாவது, இல்வாழ்க்கைக்குத் துணையாகிய மனையாளது பெண்மையிலட்சணம். இல்வாழ்க்கைக்கு மனையாள் இன்றியமையாத துணையாதலான், இஃது அதன்பின் கூறப்பட்டது.

னைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை,

இ-ள்:- மனை தக்க மாண்பு உடையளாகி - தான் பிறந்த குடிக்குத்தக்க ஒழுக்கத்தை உடையாளாய், தன் கொண்டான் வளம் தக்காள் - தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினையுடையவள், வாழ்க்கை துணை - இல்வாழ்க்கைக்குத் துணையாவள்.

இது, வாழ்க்கைத் துணையின் இலட்சணம் கூறிற்று. ௫௧.

னைமாட்சி இல்லாள்கண் இல்லாயின், வாழ்க்கை
எனைமாட்சித் தாயிலும் இல்,

இ-ள்:- மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - குடிக்குத் தக்க ஒழுக்கம் மனையாள்மாட்டு இல்லையாகில், வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் - இல்வாழ்க்கை எத்தனை நன்மைகளை உடைத்தாயினும், இல் - ஒரு நன்மையும் இன்றாம்.

இஃது, அவளிடம் நன்மை யில்லையாயின் இல்வாழ்க்கையின் எல்லா நன்மைகளும் கெடு மென்றது. ௫௨.

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும்? மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

இ-ள்:- சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் - (மகளிரைச்) சிறைசெய்து காக்கும் காவல் யாதினைச் செய்யும்? மகளிர் நிறை காக்கும் காப்பே தலை - மகளிரது கற்புக் காக்கும் காவலே தலையான காவல்.

இஃது, அவள் தனது கற்பால் தன்னைக் காத்தலே காவலாமென்றது. ௫௩.

பெண்ணின் பெருந்தக்க யாவுள, கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

இ-ள்:- பெண்ணின் பெருந் தக்க யா உள - பெண்பிறப்புப் போல மிக மேம்பட்டன யாவை யுள, கற்பு என்னும் திண்மை உண்டாக பெறின் - கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறில்? [திண்மை:-உறுதிப்பாடு.]

இது, கற்புடைய பெண்ணின் பிறப்புப்போல மிக மேம்பட்டவை இல்லை யென்றது. ௫௪.

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை, இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

இ-ள்:- புகழ் புரிந்த இல் இலோர்க்கு - புகழ் பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு, இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை - தம்மை இகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல் நடக்கும் மேம்பட்ட நடை, இல்லை - இல்லையாம். [புரிந்த என்பது ஈற்று அகரம் கெட்டு நின்றது. ஏறு - எருது.]

பீடுநடை = அசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை.

இது, கற்புடையா ளென்ற புகழைச் செய்த மனையாளை இல்லாதானை எல்லாரும் இகழ்வ ரென்றது. ௫௫.

ல்லதென் இல்லவள் மாண்பானால்? உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?

இ-ள்:- இல்லவள் மாண்பானால் - (ஒருவனுக்கு) மனையாள் மாட்சிமை யுடையாளானால், இல்லது என் - இல்லாதது யாது? (எல்லாம் உளவாம்). இல்லவள் மாணாக்கடை - (ஒருவனுக்கு) மனையாள் மாட்சிமை யில்லாளானால், உள்ளது என் - உள்ளது யாது? (ஒன்றும் இல்லை).

இது, கற்புடைய மனையாளை உடையவன் எல்லாச் செல்வங்களையும் உடைய னென்றது. ௫௬.

ற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

இ-ள்:- தன் காத்து தன் கொண்டான் பேணி - தன்னையும் காத்துத் தன்னைக்கொண்ட கணவனையும் பேணி, தகை சான்ற சொல் காத்து சோர்வு இலாள் பெண் - நன்மை அமைந்த புகழ்களையும் படைத்துச் சோர்வின்மை யுடையவளே பெண்ணென்று சொல்லப்படுவள். [சோர்வின்மை - இம்மூன்றிலும் தளரவில்லை.]

இது, பெண்களிற் சிறந்தாளது இலக்கணம் கூறிற்று. ௫௭.

தெய்வம் தொழாஅள், கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

இ-ள்:- தெய்வம் தொழாள் - தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், கொழுநன் தொழுது எழுவாள் - தெய்வமும் தன் கணவனென்றே கருதி அவனை நாள்தோறும் தொழுது எழுமவள், பெய் என மழை பெய்யும் = பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.

எழுதல் - உறங்கி யெழுதல். [தொழுது எழுவாள் - தொழுதுகொண்டே எழுகின்றவள்.]

இது, கணவனைக் கனவிலும் நனவிலும் தெய்வம் எனத் தொழுவாள் ஆணைக்குப் பூதங்களும் கீழ்ப்படியு மென்றது. ௫௮.

பெற்றார்ப் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

இ-ள்:- பெண்டிர் பெற்றார் பெறின் - பெண்டிரானவர் (தம்மை மனைவியாராகப்) பெற்றவரையே (தமக்குத் தலைவராகப்) பெறின், புத்தேளிர் வாழும் பெரும் சிறப்பு உலகு பெறுவர் - தேவர் வாழும் பெருஞ் சிறப்பினை யுடைய உலகத்தைப் பெறுவர். [தலைவன் - கடவுள்.]

இது, கணவனைத் தெய்வமாகக் கொண்டவள் அடையும் பயன் கூறிற்று. ௫௯..

ங்கலம் என்ப மனைமாட்சி : மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

இ-ள்:- மனைமாட்சி - மனையாள் ஒழுக்கமுடைய ளாதலை, மங்கலம் என்ப - (ஒருவனுக்கு) அழகென்று சொல்லுப : நல்மக்கள் பேறு அதன் மற்று நன்கலம் என்ப - நல்ல மக்களைப் பெறுதலை அவ்வழகின் மேலே நல்ல அணிகல மென்று சொல்லுப (ஆன்றோர்). [என்ப என்பது பின்னரும் கூட்டப்பட்டது.]

இது, நல்ல மனைவியும் மக்களும் ஒருவனுக்கு அழகும் அணியுமா மென்றது : அடுத்த அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்தது மாம். ௬0.