திருக்குறள் மணக்குடவருரை/இல்வாழ்க்கை

விக்கிமூலம் இலிருந்து

இல்லற வியல்

இல்லறமாவது இல்லின்கண் இருந்து தானம் முதலாயின செய்தல். அது கூறிய அதிகாரம் இருபதினும், இல்வாழ்வான் வாழுந் திறம் ஓரதிகாரத்தானும், அதற்குத் துணையான மனைவியிலட்சணம் ஒரதிகாரத்தானும், அதன்பின் இல்லறப்பகுதியான பிரம்மசரியம் காருகத்தம் என்னும் இரண்டினுள்ளும் பிரமசரியத்திற்கு ஆதாரமாகிய மக்கட்பேறு ஓரதிகாரத்தானும் கூறி; காருகத்த இலட்சணம் கூறுவாராகி, நல்கூர்ந்தார் நல்குரவினீங்கியார் செல்வர் வள்ளியோர் என்னும் நால்வரினும் அன்புடைமை முதலாக ஒழுக்கமுடைமை ஈறாக நல்கூர்ந்தாரால் செய்யப்படுவன ஏழும், பிறனில்விழையாமை முதலாகத் தீவினையச்சம் ஈறாக இவரால் தவிரப்படுவன ஏழும் பதினாவதி காரத்தாற் கூறி; இவற்றோடுங்கூட ஒப்புரவறிதல் நல்குரவி னீங்கினாரால் செய்யப்படு மென்று கூறி; இவற்றோடுங்கூட ஈகை செல்வரால் செய்யப்படுமாறு கூறி; இவற்றோடுங்கூடப் புகழ் வள்ளியோரால் செய்யப்படுமென்று கூறினாராகக் கொள்ளப்படும். இல்லறம் முற்படக் கூறியது, துறவறத்தில் நின்றாரையும் ஓம்புதல் இல்வாழ்வான் கண்ண தாதலான்,

௫-வது. - இல் வாழ்க்கை.

இல்வாழ்க்கையாவது, இல்லின்கண் இருந்து வாழ்வார் வாழும் திறன், மேல் அறம்செய்க என்றார், இது முதலாக அறம் செய்யுமாறு கூறுகின்ற ராதலின், இஃது அதன்பின் கூறப்பட்டது.

ல்வாழ்வான் என்பான், இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றில் நின்ற துணை,

இ-ள்:- இல் வாழ்வான் என்பான் - இல்வாழ்வான் என்று சொல்லப்படுமவன், இயல்புடைய மூவர்க்கும் - இயல்புடைய மூவர்க்கும், நல் ஆற்றில் நின்ற துணை. - நல்ல வழியின் கண்ணே நின்ற (ஒரு) துணை.

தானமாகிய இல்லறத்தைச் செய்யுமவன், தவத்தின் பாற்பட்ட விரதத்தை மேற்கொண்டு ஒழுகாநின்ற பிரம்மசாரிக்கும், தவத்தினை மேற்கொண்டு ஒழுகாநின்ற வானப்பிரத்த சங்நியாசிகளுக்கும், தத்தம் நிலை குலையாமல் உணவு முதலாயின கொடுத்துப் பாதுகாத்தலின், அவர்க்கு நல்லுலகின் கண் செல்லும் நெறியிலே நின்ற ஒரு துணையென்று கூறினர். துணையென்ப, இடையூறு வாராமல் உய்த்துவிடுவாரை.

இது, மற்றைய மூன்று ஆசிரமிகளுக்கும் இல்வாழ்வான் துணை யென்றது. ௪௧.

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

இ-ள்:- துறந்தார்க்கும் - (வருண நாமங்களைத்) துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும் - துறவாது நல்குரவாளராய் உண்ணப் பெறாதார்க்கும், இறந்தார்க்கும் - (பிறராய் வந்து) செத்தார்க்கும், இல்வாழ்வான் என்பான் துணை - இல்வாழ்வான் என்று சொல்லப் படுமவனே துணையாவான்.

மேற்கூறிய மூவரும் வருணநாமங்களைத் துறவாமையால் அவரை "இயல்புடைய மூவர்" என்றும், ஈண்டுக் கூறிய இவர் அவற்றைத் துறந்தமையால் இவரைத் "துறந்தா"ரென்றும் கூறினர். செத்தார்க்கு இவன் வேண்டிய வனாயினான், அவரைப் புறங்காட்டுய்த்தல் முதலியன செய்யவேண்டுதலின்.

இது, மேற்கூறியவர்களே யன்றி இவர்களுக்கும் இல்வாழ்வான் துணையென்று கூறிற்று. ௪௨.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்
கைம்புலத்தார் ஓம்பல் தலை.

இ-ள்:- தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஐம்புலத்தார் - பிதிரர் தேவர் புதியராய்வந்தார் சுற்றத்தார் தான் என்னும் ஐந்திடத்தாரையும், ஓம்பல் தலை - ஓம்புதல் தலையான இல்வாழ்க்கை.

தனக்கு உண்டான பொருளை ஆறு கூறாக்கி, ஒரு கூறு அரசற்குக் கொடுத்து, ஒழிந்த ஐந்து கூறினும் தான் கொள்வது ஒரு கூறு என்றற்குத் தன்னையும் சேர்த்து எண்ணினார். மேல் கூறிய அறுவரும் விருந்தின் வகையினரென்று கொள்ளப்படுவர்.

இது, தலையான இல்வாழ்க்கை வாழும் திறன் கூறிற்று. ௪௩.

ழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின், வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

இ-ள்:- வாழ்க்கை பழி அஞ்சி பாத்தூண் உடைத்தாயின் - இல்வாழ்க்கையாகிய நிலை பாவத்தை அஞ்சிப் பகுத்தண்டலை உடைத்தாயின், வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் - தீது ஒழுங்கு இடையறுதல் எக்காலத்திலும் இல்லை. [ஒழுங்கு - நடை.]

மேல் பகுக்குமாறு கூறினவர், ஈண்டுப் பகுத்தலானும் பழிக்கஞ்சுதலானும் எய்தும் பயன் கூறினார். ௪௪.

ன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை,
பண்பும் பயனும் அது.

இ-ள்:- இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் - இல்வாழ்க்கையாகிய நிலை (யாவர் மாட்டும்) அன்பு செய்தலையும் அறம் செய்தலையும் உடைத்தாயின், பண்பும் பயனும் அது - அதற்குக் குணமாவதும் பயனாவதும் அவ்விரண்டினையும் உடைமைதானே. பயன் வேறு வேண்டா; தனக்கும் பிறர்க்கும் உண்டான முகமலர்ச்சிதானே அமையும்.

பழியொடு வாராத உணவை நுகர ஏற்பார்மாட்டு அன்பு செய்ய வேண்டு மென்பதூஉம், தான் சீலனாய்க் கொடுக்கவேண்டுமென்பதூஉம் இது கூறிற்று, ௪௫.

றத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின், புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவ தெவன்?

இ-ள்:- இல்வாழ்க்கை அறத்து ஆற்றின் ஆற்றின் - இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்த வல்லவானாயின், புறத்து ஆற்றின் போய் பெறுவது எவன் - புறநெறியாகிய தவத்தில் போய்ப் பெறுவது யாதோ?

மேல் சீலனாய்க் கொடுக்கவேண்டு மென்றவர், ஈண்டு அவ்வாறு செய்யின் அதுதானே தவப்பயனையும் தரு மென்றார். ௪௬.

ற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை,
நோற்றலின் நோன்மை உடைத்து.

இ-ள்:- ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை - பிறரையும் நன்னெறியிலே ஒழுகப்பண்ணித் தானும் அறத்தின்பால் ஒழுகும் இல்வாழ்க்கை, நோற்றலின் நோன்மை உடைத்து - தவம் செய்தலினும் வலி உடைத்து,

ஒழுகப்பண்ணலாவது அவர்க்கு வேண்டுவன அமைத்தல்.

இது, தவத்தினும் இல்வாழ்க்கை வலியுடைத் தென்றது, ௪௭.

யல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்,
முயல்வாரு ளெல்லாம் தலை.

இ-ள்:- இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் - நெறியினாலே இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான், முயல்வாருள் எல்லாம் தலை - முயல்வா ரெல்லாரினும் தலையாவான்.

முயல்தல் - பொருட்கு முயல்தல். [பொருள் - மெய்ப்பொருள்.]

இது, மெய்ப்பொருளை அடைய முயல்வாருள் இல்வாழ்வான் தலையானவ னென்றது. ௪௮.

வையத்துள், வாழ்வாங்கு வாழ்பவன், வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

இ-ள்:- வாழ்வாங்கு வாழ்பவன் - இல்வாழ்க்கை வாழும் படியிலே வாழுமவன், வையத்துள் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன்.

இஃது, இல்வாழ்வான் எல்லோராலும் நன்குமதிக்கப்படுவன் என்றது. ௪௯.

றனெனப் பட்டதே இல்வாழ்க்கை; அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று,

இ-ள்:- அறன் எனப்பட்டது. இல்வாழ்க்கையே - அறன் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே : அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று - அதுவும் பிறன் ஒருவனால் பழிக்கப்ப்டுவ தொன்றை உடைத்தன்றாயின் நன்றாம்.

பழிக்கப்படுவ தென்றது இழிகுணத்தாளாகிய மனையாளை.

இனி வாழ்க்கைத் துணைநலம் கூறுகின்ற ராதலின், இஃது ஈண்டுக் கூறப்பட்டது. ௫0.