உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் மணக்குடவருரை/அறன் வலியுறுத்தல்

விக்கிமூலம் இலிருந்து

௪-வது. - அறன் வலி யுறுத்தல்.

அறன் வலியுறுத்தலாவது, அறம் வலிமையுடைத் தென்பதனை அறிவித்தல். இதனானே அறத்துப்பாலை முன்கூறுதற்குக் காரணம் சொன்னாருமாம். இது, மேற்கூறிய முனிவரால் கொண்டுய்ககப்படுதலின் பின் கூறப்பட்டது.

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்
காக்கம் எவனோ உயிர்க்கு?

இ-ள்:- சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் - முத்தியும் தரும் செல்வமும் தருமாதலால், அறத்தின் ஊங்கு உயிர்க்கு ஆக்கம் எவன் - அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கம் தருவது யாது? [ஓ -அசை.]

பொருளான் ஆக்கம் உண்டென்பாரை மறுத்து, அறனே அதனை உண்டாக்கும் வலியுடைத்தென்று இறு கூறிற்று. ௩௧

ல்லும் வகையால் அறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாம் செயல்.

இ-ள்:- ஒல்லும் வகையால் - நமக்கு இயலும் திறத்தானே, அறவினை ஓவாதே - அறவினையை ஒழியாதே, செல்லும் வாய் எல்லாம் செயல் - செய்யலாம் இடமெல்லாம் செய்க.

இயலும் திறம் - மனம் மொழி மெய்களும் பொருளும், செல்லும் வாய் - அறம் செய்தற்குத் தக்க பல இடங்களும், ஒழியாதே - நாள்தோறும்.

அறம் வலிதென்று அறிந்தவர்கள் அதனை இவ்வாறு செய்க என்று கூறிற்று இது. ௩௨.

ன்றறிவாம் என்னா தறம்செய்க; மற்றது.
பொன்றுங்கால் பொன்றாத் துணை,

இ-ள்:- அன்று அறிவாம் என்னாது அறம்செய்க - பின்பே அறிந்து செய்வோம் என்னாது முன்பே அறத்தைச் செய்க; அது பொன்றுங்கால் பொன்றாத் துணை - அது சாம் காலத்திலும் சாகாதே நின்று பிறக்கும் இடத்திற்குத் துணையாம்.

இஃது, அறம் செய்யுங்கால் விரைந்து செய்ய வேண்டுமென்றும், அது மறுமைக்கும் துணையா மென்றும் கூறிற்று, ௩௩.

றத்தா றிதுவென வேண்டா; சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை.

இ-ள்:- அறத்து ஆறு இது எனவேண்டா - அறத்தின்பயன் இத்தன்மைத் தென்று நீங்கள் (கேள்வியால்) அறியவேண்டா, சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை - சிலிகையைக் காவுவானோடு செலுத்துவானிடை (க்காட்சியால்) அறியலாம்.

பொன்றினாலும் துணையாகுமோ என்றார்க்குத் துணையாயவாறு காட்டிற்று இது. ௩௪. .

றத்தான் வருவதே யின்பம்;மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.

இ-ள்:- அறத்தான் வருவதே இன்பம் - அறத்தால் வருவது (யாதொன்று அது)வே இன்பமும் புகழுமாம். மற்று எல்லாம் புறத்த புகழும் இல் - அதனான்றி வருவனவெல்லாம் துன்பமாம் புகழும் இலவாம்.

எல்லாப் போக நுகர்ச்சியும் இதனானே வரு மென்றது. ௩௫.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின், அஃதுதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்,

இ-ள்:- வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் - ஒரு நாள் இடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின், அஃது - அச்செயல், ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் - ஒருவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை அடைப்பதோர் கல்லாம்.

இது, வீட்டைத் தரு மென்றது. ௩௬.

செயற்பால தோரும் அறனே; ஒருவற்
குயற்பால தோரும் பழி.

இ-ள்:- ஒருவற்கு செயல் பாலது அறனே - ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே; உயல் பாலது பழி - தப்பும் பகுதியது பழியே.

மேல், அறம் செய்யப் பிறப்பது மென்றார், அதனோடு பாவம் செய்யின் அறாதென்றற்கு இது கூறினார். ௩௭.

றத்தினூங் காக்கமும் இல்லை; அதனை
மறத்தலினூங் கில்லையாம் கேடு.

இ-ள்:- அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை - (ஒருவனுக்கு) அறம் செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை - அதனைச் செய்யாமையின் மேற்பட்ட கேடும் இல்லை. [ஆம் என்பது அசை.]

இது, அறம் செய்யாக்கால் கேடு வரு மென்று கூறிற்று. ௩௮

ழுக்கா றவாவெகுளி இன்னாச் சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்.

இ-ள்:- அழுக்காறு - மனக்கோட்டமும், அவா - ஆசையும், வெகுளி வெகுளியும், இன்னாச்சொல் - கடுஞ்சொல்லும், நான்கும் இழுக்கா - என்னும் நான்கினையும் ஒழித்து, இயன்றது அறம் - நடந்த (அது யாதொன்று) அஃது அறமென்று சொல்லப்படும்.

பின்னர்ச் செய்யலாகா தென்று இந் நூல் கூறுவனவெல்லாம் இந்நான்கினுள் அடங்குமென்றும், அறம் எத்தன்மைத்தென்றும் இது கூறிற்று. ௩௯.

னத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்;
ஆகுல நீர பிற.

இ-ள்:- மனத்துக்கண் மாசிலனாதல் - (ஒருவன் தன்) மனத்தின்கண் குற்றமிலனாதலே, அனைத்து அறன்-எல்லா அறமுமாம். பிற ஆகுல நீர - (அதில் குற்றமுண்டாயின்) மேல் செய்வனவெல்லாம் ஆரவார நீர்மையன.

பிறர் அறியவேண்டிச் செய்தானா மென்றாயிற்று. மேல் நாலு பொருளைக் கடிய வேண்டு மென்றார். அவை நான்கும் மனமொன்றும் தூயதாகப் போமென்று அதன்பின் இதனைக் கூறினார். ௪0