திருக்குறள் மணக்குடவருரை/நீத்தார் பெருமை

விக்கிமூலம் இலிருந்து

௩-வது.-- நீத்தார் பெருமை.

நீத்தார் பெருமையாவது துறந்த முனிவரது பெருமை. இது, கடவுளரை வணங்கினாற் போல முனிவரையும் வணங்க வேண்டுமென்பதனானும், மழையையும் அவர் அடக்கத்தக்கவ ரென்ற கருத்தினானும், அவையிற்றின் பின் கூறப்பட்டது.

ழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

இ-ள்:- ஒழுக்கத்து நீத்தார் பெருமை - ஒழுக்கத்தின் பொருட்டு (எல்லாப் பொருள்களையும்) துறந்தாரது பெருமையை, பனுவல் துணிவு விழுப்பத்து வேண்டும் - நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும். [விழுப்பம் - மேன்மை].

யாதானும் ஒரு பொய்யைச் சொல்லும் நூலும், தன்னை எல்லாரும் கொண்டாடுதற்காகத் துறந்தார் பெருமையை நன்குமதித்துக் கூறும், அதனானே, யாதும் சொல்லுகின்றே னென்றது. இது. ௨௧.

துறந்தார் பெருமை துணைக் கூறின்,வையத்
திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று.

இ-ள்:- துறந்தார் பெருமை துணை கூறின் - (காமம் முதலாகத்) துறந்தாரது பெருமைக்கு அளவு கூறின், வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டால் அந்று - உலகத்துப் பிறந்திருந்தார் இத்துணையரென்று எண்ணி யறியலுற்றாற் போலும். [ஆல் கெட்டது.]

அவர் பெருமைக்கு எல்லை கூறுதல் அரிதாயினும், சில சொல்லப் புகாநின்றே னென்றது இது. ௨௨.

ரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்,
வரனென்னும் வைப்புக்கோர் வித்து.

இ-ள்:- உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்-அறிவாகிய தோட்டியானே பொறியாகிய ஒப்பற்ற யானை ஐந்தினையும் (புலன்களில் செல்லாமல்) மீட்பவன், வரன் என்னும் வைப்புக்கு ஓர் வித்து - மேலாகிய இடத்தே ஆதற்கு (இவ்விடத்தே இருப்பதாகிய) ஒரு வித்து.

அவர் பெருமை சொல்லுவார், முற்பட அவன் மக்கட்டன்மையனாய் இவ்வுலகின்கண் வாழ்பவன் அல்லன், தேவருள் ஒருவன் என்று கூறினார். ௨௩.

சுவைஒளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

இ-ள்:- சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் வகை - சுவை முதலாகக் கூறிய ஐந்து புலன்களின் வகையை, தெரிவான் கட்டே உலகு - ஆராய்வான் கண்ணதே உலகம்,

எனவே, இவற்றின் காரியம் வேறொன்றாகத் தோன்றுமன்றே; அதனை அவ்வாறு கூறுபடுத்துக் காண அவற்றின் காரணமும் தோற்றும்.

[வேறொன்றாக - உலகமாக. அவ்வாறு - அவ்வைந்து புலன்களாக. அவற்றின் காரணம் - அவ்வைந்து புலன்களையும் உணரும் அறிவு.]

ஆதலால், உலகம் அறிவான் கண்ணதா மென்றார். ௨௪.

ந்தவித்தான் ஆற்றல், அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.

இ-ள்:- ஐந்து அவித்தான் ஆற்றல் - நுகர்ச்சியாகிய ஐந்தனையும் துறந்தானது வலிக்கு, அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி-அகன்ற விசும்பி லுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே அமையும் சான்று,

இந்திரன் சான்றென்றது, இவ்வுலகின்கண் மிகத் தவம்செய்வார் உளரானால் அவன் தன் பதம் இழக்கின்றானாக நடுங்கு மாதலான்.

இது, தேவரினும் ஐந்தவித்தான் வலிய னென்றது. ௨௫.

ருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.

இ-ள்:- இருமை வகை தெரிந்து - பிறப்பும் வீடும் என்னும் இரண்டினது கூறுபாட்டை ஆராய்ந்து, ஈண்டு அறம் பூண்டார் - இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது, பெருமை உலகில் பிறங்கிற்று - பெருமை உலகத்தில் மிக்கது. [மிக்கது - மேம்பட்டது.]

இஃது, எல்லாராலும் அவர் பெருமை போற்றப்படு மென்றது. ௨௬.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

இ-ள்:- நிறை மொழி மாந்தர் பெருமை - நிரம்பிய கல்வியையுடைய மாந்தரது பெருமையை, நிலத்து மறை மொழி காட்டி விடும் - அவரால் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும்.

இஃது, அவரால் நடக்கு மென்று கூறிற்று. ௨௭.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

இ-ள்:- குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி - குணமாகிய மலையை மேற்கொண்டு நின்றார் மாட்டு உளதாகிய வெகுளியால் வரும் தீமையை, கணமேயும் காத்தல் அரிது - சிறிது பொழுதாயினும் வாராமல் காத்தல் அரிது,

அவர் சாபத்தால் நகுடன் பாம்பாயினான்.

இஃது, அவர் வெகுளியைப் பொறுத்தல் அரிதென்று கூறிற்று. ௨௮.

செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

இ-ள்:- செயற்கு அரிய செய்வார் பெரியார் - செய்தற்கு அரியனவற்றைச் செய்வார் பெரியோ ரென்று சொல்லப்படுவார், செயற்கு அரிய செய்கலா தார் சிறியர் - அவற்றைச் செய்யமாட்டாதார் (துறந்தாராயினும்) சிறியோரென்று சொல்லப்படுவர்.

செயற்கரியன, இயமம் நியமம் முதலாயின.

இவ்வதிகாரம் "நீத்தார் பெருமை" என்னப்பட்டதாயினும், நீத்த மாத்திரத்தானே பெரியரென்று கொள்ளப்படார், செயற்கு அரியனவற்றைச் செய்வாரே பெரியரென்று கொள்ளப்படுவர் என்று இது கூறிற்று, ௨௯.

ந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

இ-ள்:- அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்போரும் துறந்தோராகக் கொள்ளப்படுவர், எவ் உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - அவர் எல்லா உயிர்க்கும் செவ்விய தட்பம் செய்தலை மேற்கொண்டு ஒழுகலானே. (மற்று - அசை.]

மேல், துறந்தவர்களினும் சிறியார் உளரென்று கூறினார். ஈண்டு, துறவாதாரினும் பெரியார் உளரென்று கூறினார். இவை எட்டானும் துறந்தார் பெருமை கூறப்பட்டது. ௩0.