திருக்குறள் மணக்குடவருரை/வான் சிறப்பு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

உ-வது.-- வான் சிறப்பு.

வான் சிறப்பாவது மழையினது தலைமை. இது கடவுட்செய்கைத் தாதலான், அதன்பின் கூறப்பட்டது. இஃது ஈண்டுக் கூறியது என்னை யெனின், பின் உரைக்கப்படுகின்ற இல்லறமும் துறவறமும் இனிது நடப்பது மழையுண்டாயின் என்றற்குப் போலும். அன்றியும், வானத்தின் பொருட்டு வணக்கம் கூறினா ரெனினும் அமையும்.

சிறப்பொடு பூசனை செல்லாது, வானம்
வறக்குமேல், வானோர்க்கும் ஈண்டு.

இ-ள்:- வானோர்க்கும் ஈண்டு சிறப்பொடு பூசனை செல்லாது- தேவர்க்கும் இங்குச் சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது, வானம் வறக்குமேல் - வானம் புலருமாகில்.

மழை பெய்யாக்கால் வரும் குற்றம் கூறுவார், முற்பட (நால்வகைப்பட்ட அறங்களில்) பூசை கெடு மென்றார். ௧௧.

தானம் தவம்இரண்டும் தங்கா வியனுலகம்,
வானம் வழங்கா தெனின்,

இ-ள்:- வியன் உலகம் - அகன்ற உலகத்துக்கண், தானம் தவம் இரண்டும் தங்கா - தானமும் தவமு மாகிய இரண்டறங்களும் உளவாகா, வானம் வழங்காதெனின் - மழை பெய்யா தாயின்.

இது, தானமும் தவமும் கெடு மென்றது. ௧௨.

நீரின் றமையா துலகெனின், யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு,

இ-ள்:- நீர் இன்று உலகு அமையாது எனின் - நீரையின்றி உலகம் அமையா தாயின், யார் யார்க்கும் வான் இன்று ஒழுக்கு அமையாது - யாவர்க்கும் மழையையின்றி ஒழுக்கம் உண்டாகாது.

ஒழுக்கம் - விரதம். [அமைதல் - நிரம்புதல்.]

இஃது, ஒழுக்கம் கெடு மென்றது. இவை மூன்றினாலும் நாலறமும் கெடு மென்று கூறினார். ௧௩.

விண்ணின்று பொய்ப்பின், விரிநீர் வியனுலகத்
துண்ணின் றுடற்றும் பசி,

இ-ள்:- விண் நின்று பொய்ப்பின் - வானமானது நிலைநிற்கப் பொய்க்குமாயின், விரி நீர் வியன் உலகத்துள் - விரிந்த நீரினையுடைய அகன்ற உலகத்திடத்தே, பசி நின்று உடற்றும் - பசியானது நின்று வருத்தாநிற்கும் (எல்லா உயிர்களையும்).

பொய்த்தல் - தன் தொழில் மறுத்தல். [நிலைநிற்க-நிலையாக.]

இது, பசியென்று பொதுப்படக் கூறியவதனால், மக்களும் விலங்குகளும் பொருளையும் காமத்தையும் துய்க்கலாற்றாது துன்பமுறு மென்று கூறிற்று. ௧௪.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது.

இ-ள்:- விசும்பின் துளி வீழின் அல்லால் - வானின்று துளி வீழின் அல்லது, ஆங்கு பசும் புல் தலை காண்பு அரிது - அவ்விடத்துப் பசுத்த புல்லினது தோற்றத்தையும் காண்டல் அரிது.

'ஆங்கு' என்பதனை அசையாக்கினும் அமையும். [மற்று--அசை.]

இஃது, ஓரறிவுயிரும் கெடு மென்றது. ௧௫.

ரின் உழாஅர் உழவர், புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

இ-ள்:- உழவர் ஏரின் உழார் - உழவர் ஏரின் உழுதலைத் தவிர்வார், புயல் என்னும் வாரி வளம் குன்றியக்கால் - புயலாகிய வாரியினுடைய வளம் குறைந்த காலத்து. [யகரம் கெட்டது.]

இஃது, உழவர் இல்லை யென்றது. ௧௬.

நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும், தடிந்தெழிலி
தானல்கா தாகி விடின்.

இ-ள்:- நெடும் கடலும் தன் நீர்மை குன்றும்-(நிலமேயன்றி) நெடிய கடலும் தனது தன்மை குறையும், தடிந்து எழிலி நல்காதாகிவிடின் - மின்னி மழையானது பெய்யாவிடின். [தான் - அசை.]

'தடித்து' என்பதற்குக் 'கூறுபடுத்து' என்று பொருளுரைப்பாரு முளர்.

இது, நீருள் வாழ்வனவும் படுவனவும் கெடுமென்றது. இவை நான்கினாலும் பொருட்கேடு கூறினார். பொருள் கெட இன்பம் கெடுமென்பதனால், இன்பக்கேடு கூறிற்றிலர். ௧௭.

கெடுப்பதும் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதும் எல்லாம் மழை.

இ-ள்:- எல்லாம் கெடுப்பதும் - (தான் பெய்யாது) எல்லாப் பொருள்களையும் கெடுப்பதும், கெட்டார்க்குச் சார்வாய் - அவை கெடப்பட்டார்க்குத் துணையாய், எல்லாம் ஆங்கே எடுப்பதும் மழை - (தான் பெய்து) பொருள் களெல்லாவற்றையும் அவ்விடத்தே உண்டாக்குவதும் மழை.

இஃது, இவ்விரண்டினையும் செய்யவற் றென்றது. ௧௮.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாவ தூஉம் மழை.

((nop)) இ-ள்:- துப்பார்க்கு துப்பாய துப்பு ஆக்கி - (பிறவற்றை) உண்பார்க்கு அவர் உண்டற்கான உணவுகளையும் உண்டாக்கி, துப்பார்க்கு துப்பாவதும் மழை - (தன்னை) உண்பார்க்குத் தானே உணவாவதும் மழை.

இது, பசியைக் கெடுக்கு மென்றது, ௧௯.

வானின் றுலகம் வழங்கி வருதலால்,
தானமிழ்தம் என்றுணரும் பாற்று.

இ-ள்:- வான் நின்று உலகம் வழங்கி வருதலால்-மழைவளம் நிலைநிற்றலானே உலகநடை தப்பாது வருதலான், தான் அமிழ்தம் என்று உணரும் பாற்று-அம்மழைதான் (உலகத்தார்) அமுதமென்று உணரும் பகுதியது.

இஃது, அறம் பொருள் இன்பங்களை உண்டாக்குதலானும், பல வகைப்பட்ட உணவுகளை நிலை நிறுத்தலானும், தானே உணவாதலானும் மழையினை மற்றுள்ள பூதமாத்திரையாக நினைக்கக் கூடாதென்று அதன் நிலைமை கூறிற்று. ௨0.