உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்கோவையார்/பதினைந்தாம் அதிகாரம் - ஒருவழித் தணத்தல்

விக்கிமூலம் இலிருந்து
416716திருக்கோவையார் — பதினைந்தாம் அதிகாரம் - ஒருவழித் தணத்தல்மாணிக்கவாசகர்

பதினைந்தாம் அதிகாரம்
15. ஒருவழித் தணத்தல்

பேரின்பக் கிளவி
ஒருவழித் தணத்தல் ஒருபதின் மூன்றும்
சிவனது கருணை அருள்தெரி வித்தது.

1. அகன்று அணைவு கூறல்
புகழும் பழியும் பெருக்கில் பெருகும் பெருகிநின்று
நிகழும் நிகழா நிகழ்த்தின்அல் லால்இது நீநினைப்பின்
அகழும் மதிலும் அணிதில்லை யோன்அடிப் போதுசென்னித்
திகழும் அவர்செல்லல் போலில்லை யாம்பழி சின்மொழிக்கே. .. 181


கொளு
வழிவேறு படமன்னும் பழிவேறு படும்என்றது.

2. கடலொடு வரவு கேட்டல்
ஆரம் பரந்து திரைபொரு நீர்முகில் மீன்பரப்பிச்
சீரம் பரத்தின் திகழ்ந்தொளி தோன்றும் துறைவர்சென்றார்
போரும் பரிசு புகன்றன ரோபுலி யூர்ப்புனிதன்
சீரம்பல் சுற்றி எற்றிச் சிறந்தார்க்கும் செறிகடலே. .. 182


கொளு
மணந்தவர் ஒருவழித் தணந்ததற்(கு) இரங்கி
மறிதிரை சேரும் எறிகடற்(கு) இயம்பியது.

3. கடலொடு புலத்தல்
பாணிகர் வண்டினம் பாடப்பைம் பொன்தரு வெண்கிழிதம்
சேணிகர் காவின் வழங்கும்புன் னைத்துறைச் சேர்ப்பர்திங்கள்
வாணிகர் வெள்வளை கொண்டகன் றார்திறம் வாய்திறவாய்
பூணிகர் வாளர வன்புலி யூர்சுற்றும் போர்க்கடலே. .. 183


கொளு
செறிவளைச் சின்மொழி எறிகடற்(கு) இயம்பியது.

4. அன்னமோடு ஆய்தல்
பகன்தர மரைக்கண் கெடக்கடந் தோன்புலி யூர்ப்பழனத்(து)
அகன்தா மரையென்ன மேவண்டு நீல மணியணிந்து
முகன்தாழ் குழைச்செம்பொன் முத்தணி புன்னகையின் னும்உரையாது
அகன்றார் அகன்றே ஒழிவர்கொல் லோநம் அகன்துறையே. .. 184


கொளு
மின்னடை மடந்தை அன்னமோ(டு) ஆய்ந்தது.

5. தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல்
உள்ளும் உருகி உரோமம் சிலிர்ப்ப உடையவன் ஆட்
கொள்ளும் அவரிலோர் கூட்டம்தந் தான்குனி கும்புலியூர்
விள்ளும் பரிசுசென் றார்வியன் தேர்வழி தூரல்கண்டாய்
புள்ளும் திரையும் பொரச்சங்கம் ஆர்க்கும் பொருகடலே. .. 185


கொளு
மீன்தோய் துறைவர் மீளும் அளவும்
மான்தேர் வழியை அழியேல் என்றது.

6. கூடல் இழைத்தல்
ஆழி திருத்தும் புலியூர் உடையான் அருளின் அளித்(து)
ஆழி திருத்தும் மணற்குன்றின் நீத்தகன் றார்வருகென்(று)
ஆழி திருத்திச் சுழிக்கணக்(கு) ஓதிநை யாமல்ஐய
வாழி திருத்தித் தரக்கிற்றி யோஉள்ளம் வள்ளலையே. .. 186


கொளு
நீடலந் துறையில் கூடல் இழைத்தது.

7. சுடரொடு புலம்பல்
கார்த்தரங் கம்திரை தோணி சுறாக்கடல் மீன்எறிவோர்
போர்த்த(ரு)அங் கம்துறைமானும் துறைவர்தம் போக்குமிக்க
தீர்த்தர்அங் கன்தில்லைப் பல்பூம் பொழிற்செப்பும் வஞ்சினமும்
ஆர்த்தர் அங் கம்செய்யு மால்உய்யு மா(று)என்கொல் ஆழ்சுடரே. .. 187


கொளு
குணகடல் எழுசுடர் குடகடல் குளிப்ப
மணமலி குழலி மனம்புலம் பியது.

8. பொழுது கண்டு மயங்கல்
பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர்பற் றவர்க்குப்
புகலோன் புகுநர்க்குப் போக்கரி யோன்எவ ரும்புகலத்
தகலோன் பயில்தில்லைப் பைம்பொழிற் சேக்கைகள் நோக்கினவால்
அகலோங்(கு) இருங்கழி வாய்க்கொழு மீனுண்ட அன்னங்களே. .. 188


கொளு
மயல்தரு மாலை வருவது கண்டு
கயல்தரு கண்ணி கவலை யுற்றது.

9. பறவையடு வருந்தல்
பொன்னும் மணியும் பவளமும் போன்று பொலிந்திலங்கி
மின்னும் சடையோன் புலியூர் விரவா தவரினுள்நோய்
இன்னும் அறிகில வால்என்னை பாவம் இருங்கழிவாய்
மன்னும் பகலே மகிழ்ந்திரை தேரும்வண் டானங்களே. .. 189


கொளு
செறிபிணி கைம்மிகச் சிற்றிடை பேதை
பறவைமேல் வைத்துப் பையுள்எய் தியது.

10. பங்கயத்தோடு பரிவுற்று உரைத்தல்
கருங்கழி காதல்பைங் கானவில் தில்லைஎம் கண்டர்விண்டார்
ஒருங்கழி காதர மூவெயில் செற்றஒற் றைச்சிலைசூழ்ந்(து)
அருங்கழி காதம் அகலும்என் றூழ்என்(று) அலந்துகண்ணீர்
வருங்கழி காதல் வனசங்கள் கூப்பும் மலர்க்கைகளே. .. 190


கொளு
முருகவிழ் கானல் ஒடுபரி வுற்றது.

11 அன்னமோடு அழிதல்
மூவல் தழீஇய அருள்முத லோன்தில்லைச் செல்வன்முந்தீர்
நாவல் தழீஇயஇந் நானிலம் துஞ்சும் நயந்த இன்பச்
சேவல் தழீஇச்சென்று தான்துஞ்சும் யான்துயி லாச்செயிர்எம்
காவல் தழீஇயவர்க்(கு) ஓதா(து) அளிய களியன்னமே. .. 191


கொளு
இன்ன கையவள் இரவரு துயரம்
அன்னத்தோ(டு) அழிந்துரைத்தது.

12. வரவு உணர்ந்து உரைத்தல்
நில்லா வளைநெஞ்சம் நெக்குரு கும்நெடுங் கண்துயிலது
கல்லா கதிர்முத்தம் காற்றும் எனக்கட் டுரைக்கதில்லைத்
தொல்லோன் அருள்களில் லாரிற்சென் றார்சென்ற செல்லல்கண்டாய்
எல்லார் மதியே இதுநின்னை யான்இன்(று) இரக்கின்றதே. .. 192


கொளு
சென்றவர் வரவுணர்ந்து நின்றவள் நிலைமை
சிறப்புடைப் பாங்கி சிறைப்புறத்(து) உரைத்தது.

13. வருத்தமிகுதி கூறல்
வளரும் கறியறி யாமந்தி தின்றுமம் மர்க்(கு)இடமாய்த்
தளரும் தடவரைத் தண்சிலம் பாதன(து) அங்கம்எங்கும்
விளரும் விழும்எழும் விம்மும் மெலியும்வெண் மாமதிநின்(று)
ஒளிரும் சடைமுடி யோன்புலி யூர்அன்ன ஒண்ணுதலே. .. 193


கொளு
நீங்கி அணைந்தவற்குப் பாங்கி பகர்ந்தது.