திருக்கோவையார்/பதினொன்றாம் அதிகாரம் - குறை நயப்புக் கூறல்

விக்கிமூலம் இலிருந்து

பதினொன்றாம் அதிகாரம்
11. குறை நயப்புக் கூறல்

பேரின்பக் கிளவி
குறைநயப் புத்துறை அவை இரு நான்கும்
சிவந்தோ(டு) உயிரைச் சேர்க்க வேண்டி
உயிர்ப்பரிவு எடுத்தெடுத்(து) உரைத்(து)அறி உறுத்தல்.

1. குறிப்பறிதல்
தாதேய் மலர்க்குஞ்சி அஞ்சிறை வண்டுதன் தேன்பருகித்
தேதே எனும்தில்லை யோன்சேய் எனச்சின் வேல்ஒருவர்
மாதே புனத்திடை வாளா மருவர்வந்(து) யாதும்சொல்லார்
யாதே செயத்தக் கதுமது வார்குழல் ஏந்தியே. .. 82


கொளு
நறைவளர் கோதையைக் குறைநயப் பித்தற்(கு)
உள்ளறி குற்ற ஒள்ளிழை யுரைத்தது.

2. மென்மொழியால் கூறல்
வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம் மிக்கென்ன மாயங்கோலோ
எரிசேர் தளிரென்ன மேனியென் ஈர்ந்தழை யன்புலியூர்ப்
புரிசேர் சடையோன் புதல்வன்கொல் பூங்கணை வேள்கொலென்னத்
தெரியேம் உரையன் பிரியான் ஒருவன்இத் தேம்புனமே. .. 83


கொளு
ஒளிருறு வேலவன் தளர்வறு கின்றமை
இன்மொழி யவட்கு மென்மொழி மொழிந்தது.

3. விரவிக் கூறல்
நீகண் டணையெனின் வாழலை நேரிழை அம்பலத்தான்
சேய்கண் டனை யன்சென் றாங்கோர் அலவன்தன் சீர்ப்பெடையின்
வாய்கண் டனையதோர் நாவற் கனிநனி நல்கக்கண்டு
பேய்கண்(டு) அனையதொன் றாகிநின் றான்அப் பெருந்தகையே. .. 84


கொளு
வன்மொழியன்மனம் மெலிவ(து) அஞ்சி
மென்மொழி விரவி மிகுந்து ரைத்தது.

4. அறியாள் போறல்
சங்கம் தருமுத்தி யாம்பெற வான்வழி தான்கெழுமிப்
பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகழிப் பாறுலவு
துங்க மலிதலை யேந்தலின் ஏந்திழை தொல்லைப்பன்மா
வங்கம் மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே. .. 85


கொளு
அறியாள் போன்று குறியாள் கூறியது.

5. வஞ்சித்து உரைத்தல்
புரங்கடந் தான்அடி காண்பான் புவிவிண்டு புக்கறியா(து)
இரங்கி(டு)எந் தாய்என்(று) இரப்பத்தன் ஈரடிக்(கு) என்இரண்டு
கரங்கள்தந் தான் ஒன்று காட்டமற்(று) ஆங்கதும் காட்டிடென்று
வரங்கிடந் தான்தில்லை அம்பல முன்றில் அம் மாயவனே. .. 86


கொளு
நெஞ்சம் நெகிழ்வகை வஞ்சித்(து) இவையிவை
செஞ்சடை யோன்புகழ் வஞ்சிக்(கு) உரைத்தது.

6. புலந்து கூறல்
உள்ளப் படுவன வுள்ளி உரைத்தக் கவர்க்குரைத்து
மெள்ளப் படிறு துணிதுணி யேல்இது வேண்டுவல்யான்
கள்ளப் படிறர்க்(கு) அருளா அரன்தில்லை காணலர்போல்
கொள்ளப் படாது மறப்ப(து) அறிவிலென் கூற்றுக்களே. .. 87


கொளு
திருந்திய சொல்லில் செவ்வி பெறாது
வருந்திய சொல்லின் வகுத்து ரைத்தது.

7. வன்மொழியாற் கூறல்
மேவிஅம் தோல் உடுக் கும்தில்லை யான்பொடி மெய்யிற்கையில்
ஓவியம் தோன்றும் கிழிநின் எழில்என்(று) உரையுளதால்
தூவியம் தோகையன் னாய்என்ன பாவம்சொல் ஆடல்செய்யான்
பாவிஅந் தோபனை மாமடல் ஏறக்கொல் பாவித்ததே. .. 88


கொளு
கடல்உல(கு) அறியக் கமழலந் துறைவன்
மடலே றும்என வன்மொழி மொழிந்தது.

8. மனத்தொடு நேர்தல்
பொன்னார் சடையோன் புலியூர் புகழார் எனப்புரிநோய்
என்னால் அறிவில்லை யானொன்று உரைக்கிலன் வந்தயலார்
சொன்னார் எனும்இத் துரிகதுன் னாமைத் துணைமனனே
என்ஆழ் துயர்வல்லை யேற்சொல்லு நீர்மை இனியவர்க்கே. .. 89


கொளு
அடல்வேலவன் ஆற்றானெனக்
கடல்அமிழ் தன்னவன் காணல் உற்றது.