திருக்கோவையார்/பன்னிரண்டாம் அதிகாரம் - சேட்படை

விக்கிமூலம் இலிருந்து

பன்னிரண்டாம் அதிகாரம்
12. சேட்படை

பேரின்பக் கிளவி
சேட்படை இருபத் தாறு துறையும்
கிடையா இன்பம் கிடைத்தலால் உயிரை
அருமை காட்டி அறியாள் போலப்
பலபல அருமை பற்றி உரைத்த
அருளே சிவத்தோ(டு) ஆக்க அருளல்.

1. தழைகொண்டு சேறல்
தேமென் கிளவிதன் பங்கத்(து) இறையுறை தில்லையன்னீர்
பூமென் தழையும்அம் போதும்கொள் ளீர்தமி யேன்புலம்ப
ஆமென்(று) அருங்கோடும் பாடுகள் செய்துநும் கண்மலராம்
காமன் கணைகொண்(டு) அலைகொள்ள வோமுற்றக் கற்றதுவே. .. 90


கொளு
கொய்ம் மலர்க் குழலி குறைந யந்தபின்
கையுறை யோடு காளை சென்றது.

2. சந்தனத் தழை தகாதென்று மறுத்தல்
ஆரத் தழையராப் பூண்(டு)அம் பலத்(து)அன லாடிஅன்பர்க்(கு)
ஆரத் தழையன்(பு) அருளிநின் றோன்சென்ற மாமலயத்(து)
ஆரத் தழையண்ணல் தந்தால் இவைஅவள் அல்குல்கண்டால்
ஆரத் தழைகொடு வந்தார் எனவரும் ஐயுறவே. .. 91


கொளு
பிறை நுதற் பே¨¡தயைக் குறைநயப் பித்தது
உள்ளறி குற்றம் ஒள்ளிழை யுரைத்தது.

3. நிலத்தின்மை கூறிமறுத்தல்
முன்தகர்த்(து) எல்லா இமையோரை யும்பின்னைத் தக்கன்முத்தீச்
சென்(று)அகத்(து) இல்லா வகைசினத்த தோன்திருந்(து) அம்பலவன்
குன்றகத்(து) இல்லாத் தழைஅண் ணல்தந்தால் கொடிச்சியருக்(கு)
இன்(று)அகத்(து) இல்லாப் பழிவந்து மூடும்என்(று) எள்குதுமே. .. 92


கொளு
கொங்கலர் தாரோய் கொணர்ந்த கொய்தழை
எங்குலத் தாருக்(கு) ஏலாது என்றது.

4. நினைவறிவு கூறி மறுத்தல்
யாழார் மொழிமங்கை பங்கத்(து) இறைவன் எறிதிரைநீர்
ஏழாய் எழுமொழி லாய்இருந் தோன்நின்ற தில்லையன்ன
சூழார் குழல்எழில் தொண்டைச்செவ் வாய்நவ்வி சொல்லறிந்தால்
தாழா(து) எதிர்வந்து கோடும் சிலம்ப தரும்தழையே. ... 93


கொளு
மைதழைக் கண்ணி மனமறிந்(து) அல்லது
கொய்தழை தந்தால் கொள்ளேம் என்றது.

5. படைத்து மொழியான் மறுத்தல்
எழில்வாய் இளவஞ்சி யும்விரும் பும்மற்று இறைகுறையுண்டு
அழல்வாய் அவிரொளி அம்பலத்து ஆடும்அம் சோதி அம்தீம்
குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற் றாலத்துக் கோலப்பிண்டிப்
பொழில்வாய் தடவரை வாயல்ல(து) இல்லைஇப் பூந்தழையே. ... 94


கொளு
அருந்தழை மேன்மேல் பெருந்தகை கொணரப்
படைத்துமொழி கிளவியில் தடுத்தவள் மொழிந்தது.

6. நாணுரைத்து மறுத்தல்
உறுங்கள்நி வந்த கணையுர வோன்பொடி யாய் ஒடுங்கத்
தெறுங்கண்நி வந்தசிற்றம்பல வன்மலைச் சிற்றிலின்வாய்
நறுங்கண்ணி சூட்டினும் நாணும்என் வாணுதல் நாகத்தொண்பூங்
குறுங்கண்ணி வேயந்திள மந்திகள் நாணும்இக் குன்றிடத்தே. .. 95


கொளு
வாணுதற் பேதையை நாணுதல் உரைத்தது

7. இசையாமை கூறி மறுத்தல்
நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாகநண்ணி
மறமனை வேங்கை எனநனி அஞ்சும்அஞ் சார்சிலம்பா
குறமனை வேங்கைச் சுணங்கொடு அணங்கலர் கூட்டுபவோ
நிறமனை வேங்கை அதள்அம் பலவன் நெடுவ ரையே. .. 96


கொளு
வசைநீர் குலத்திற்(கு) இசையா(து) என்றது.

8. செவ்வியிலள் என்று மறுத்தல்
சுற்றில கண்டன்னம் மென்னடை கண்மலர் நோக்கருளப்
பெற்றில மென்பிணை பேச்சுப் பெறாகிள்ளை பிள்ளையின்றொன்(று)
உற்றிபள் உற்ற(து) அறிந்திலள் ஆகத்(து) ஒளிமிளுரும்
புற்றில வாளர வன்புலி யூரன்ன பூங்கொடியே. ... 97


கொளு
நவ்வி நோக்கி செவ்வியிலள் என்றது.

9. காப்புடைத்தென்று மறுத்தல்
முனிதரும் அன்னையும் என்ஐயர் சாலவும் மூர்க்கர்இன்னே
தனிதரும் இந்நிலத் தன்(று)ஐய குன்றமும் தாழ்சடைமேல்
பனிதரு திங்கள் அணிஅம் பலவர் பகைசெகுக்கும்
குனிதரு திண்சிலைக் கோடுசென் றான்சுடர்க் கொற்றவனே. .. 98


கொளு
காப்புடைத் தென்று சேட்ப டுத்தது.

10. நீயே கூறென்று மறுத்தல்
அந்தியின் வாயெழில் அம்பலத்(து) எம்பரன் அம்பொன்வெற்பின்
பந்தியின் வாய்ப்பல வின்சுளை பைந்தே னொடும்கடுவன்
மந்தியின் வாய்க்கொடுத்(து) ஓம்பும் சிலம்ப மனம்கனிய
முந்தியின் வாய்மொழி நீயே மொழிசென்றம் மொய்குழற்கே. .. 99


கொளு
அஞ்சுதும் பெரும பஞ்சின்மெல் லடியைக்
கூறுவ நீயே கூறு கென்றது.

11. குலமுறை கூறி மறுத்தல்
தெங்கம் பழம்கமு கின்குலை சாடிக் கதலிசெற்றுக்
கொங்கம் பழனத்(து) ஒளிர்குளிர் நாட்டினை நீயுமைகூர்
பங்கம் பலவன் பரங்குன்றில் குன்றன்ன மாபதைப்பச்
சிங்கம் திரிதரு சீறூர்ச் சிறுமிஎம் தேமொழியே. .. 100


கொளு
தொழுகுலத்தீர் சொற்காகேம்
இழிகுலத்தேம் என்வுரைத்தது.

12. நகையாடி மறுத்தல்
சிலையன்று வாணுதல் பங்கன்சிற் றம்பல வன்கயிலை
மலையன்று மாமுகத்(து) எம்ஐயர் எய்கணை மண்குளிக்கும்
கலையன்று வெங்கணை யோடு கடுகிட்ட தென்னிற்கெட்டேன்
கொலையென்று திண்ணிய வா(று)ஐயர் கையிற் கொடுஞ்சிலையே. .. 101


கொளு
வாள்தழை எதிராது சேட்படுத் தற்கு
மென்னகைத் தோழி இன்னகை செய்தது.

13. இரக்கத்தோடு மறுத்தல்
மைத்தழை யாநின்ற மாமிடற்(று) அம்பல வன்கழற்கே
மெய்த்தழை யாநின்ற அன்பினர் போல விதிர்விதிர்த்துக்
கைத்தழை யேந்திக் கடமா வினாய்க் கையில் வில்லின்றியே
பித்தழை யாநிற்ப ரால்என்ன பாவம் பெரியவரே. .. 102


கொளு
கையுறை எதிராது காதல் தோழி ஐய நீபெரி(து) அயர்த்தனை என்றது.

14. சிறப்பின்மை கூறி மறுத்தல்
அக்கும் அரவும் அணிமணிக் கூத்தன்சிற் றம்பலமே
ஓக்கும் இவள(து) ஒளிர்உரு அஞ்சி மஞ் சார்சிலம்பா
கொக்கும் சுனையும் குளிர்தளி ரும்கொழும் போதுகளும்
இக்குன்றில் என்றும் மலர்ந்தறி யாத இயல்பினவே. .. 103


கொளு
மாந்தளிரும் மலர்நீலமும் ஏந்தல் இம்மலை இல்லை என்றது.

15. இளமை கூறி மறுத்தல்
உருகு தலைச்சென்ற உள்ளத்தும் அம்பலத் தும்ஒளியே
பெருகு தலைச்சென்று நின்றோன் பெருந்துறைப் பிள்ளைகள்ளார்
முருகு தலைச்சென்ற கூழை முடியா முலைபொடியா
ஒருகு தலைச்சின் மழலைக் கென் னோஐய ஓதுவதே. .. 104


கொளு
முளைஎயிற்(று) அரிவை விளைவிலள் என்றது.

16. மறைத்தமை கூறி நகைத்துரைத்தல்
பண்(டு)ஆல் இயலும் இலைவளர் பாலகன் பார்கிழித்துத்
தொண்டால் இயலும் சுடர்க்கழ லோன்தொல்லைத் தில்லையின்வாய்
வண்டால் இயலும் வளர்புந் துறைவ மறைக்கின்என்னைக்
கண்டால் இயலும் கடனில்லை கொல்லோ கருதியதே. .. 105


கொளு
என்னை மறைத்தபின் எண்ணியது அரிதென
நன்னுதல் தோழி நகைசெய்தது.

17. நகை கண்டு மகிழ்தல்
மத்தகம் சேர்தனி நோக்கினன் வாக்கிறந்(து) ஊறமுதே
ஒத்தகம் சேர்ந்தென்னை உய்யநின் றோன்தில்லை ஒத்திலங்கு
முத்தகம் சேர்மென் னகைப் பெருந் தோளி முகமதியின்
வித்தகம் சேர்மெல்லென் நோக்கமன்றோஎன் விழுத்துணையே. .. 106


கொளு
இன்னகைத் தோழி மென்னகை கண்டு
வண்ணக் கதிர்வேல் அண்ணல் உரைத்தது.

18. அறியாள் போன்று நினைவு கேட்டல்
விண்இறந் தார்நிலம் விண்டலர் என்றுமிக் கார்இருவர்
கண்இறந் தார்தில்லை அம்பலத் தார்கழுக் குன்றினின்று
தண்நறுந் தா(து)இவர் சந்தனச் சோலைப்பந் தாடுகின்றார்
எண்இறந் தார்அவர் யார்கண்ண தோமன்ன நின்னருளே. .. 107


கொளு
வேந்தன் சொன்ன மாந்தளிர் மேனியை
வெறியார் கோதை யறியேன் என்றது.

19. அவயவம் கூறல்
குவவின கொங்கை குரும்பை குழல்கொன்றை கொவ்வைசெவ்வாய்
கவவின வாள்நகை வெண்முத்தம் கண்மலர் செங்கழுநீர்
தவவினை தீர்ப்பவன் தாழ்பொழில் சிற்றம்பலம் அனையாட்(கு)
உவவின நாள்மதி போன்றொளிர் கின்ற(து) ஒளிமுகமே. .. 108


கொளு
அவயவம் அவளுக்(கு) இவைஇவை என்றது

20. கண் நயந்து உரைத்தல்
ஈசற்(கு) யான்வைத்த அன்பின் அகன்றவன் வாங்கியஎன்
பாசத்தின் காரென்(று) அவன்தில்லை யின்ஒளி போன்றவன்தோள்
பூ(க)அத் திருநீ(று) எனவெளுத்(து) அங்கவன் பூங்கழல்யாம்
பே(சு)அத் திருவார்த்தை யிற்பெரு நீளம் பெருங்கண்களே. .. 109


கொளு
கண்இணை பிறழ்வன வண்ணம் உரைத்தது.

21. தழையெதிர்தல்
தோலாக் கரிவென்ற தற்கும் துவள்விற்கும் இல்லின்தொன்மைக்(கு)
ஏலாப் பரி(சு)உள வேயன்றி ஏலேம் இருஞ்சிலம்ப
மாலார்க்(கு) அரிய மலர்க்கழல் அம்பல வன்மலையில்
கோலாப் பிரசம் அன் னாட்(கு)ஐய நீதந்த கொய் தழையே. .. 110


கொளு
அகன்ற இடத்(து) ஆற்றாமை கண்டு கவன்ற தோழி கையுறை எதிர்ந்தது

22. குறிப்பறிதல்
கழைகாண் டலும்சுளி யுங்களி யானையன் னான்கரத்தில்
தழைகாண் டலும்பொய் தழைப்பமுன் காண்பன்இன்(று) அம்பலத்தான்
உழைகாண் டலும்நினைப் பாகும்மெல் நோக்கிமன் நோக்கங்கண்டால்
இழைகாண் பணைமுலை யாய்அறி யேன்சொல்லும் ஈடவற்கே. .. 111


கொளு
தழை எதிரா(து) ஒழிவதற்கோர்
சொல்லறி யேனெனப் பல்வளைக்(கு) உரைத்தது.

23. குறிப்பறிந்து கூறல்
தவளத்த நீறணி யும்தடந் தோள்அண்ணல் தன்னொருபால்
அவள்அத்த னாம்மக னாம்தில்லை யான்அன்(று) உரித்ததன்ன
கவளத்த யானை கடிந்தார் கரத்தகண் ணார்தழையும்
துவளத் தகுவன வோசுரும் பார்குழல் தூமொழியே. .. 112


கொளு
ஏழைக்(கு) இருந்தழை தோழிகொண்(டு) உரைத்தது. 23

24. வகுத்துறைத்தல்
ஏறும் பழிதழை யேன்பின்மற்(று) ஏலா விடின்மடன்மா
ஏறும் அவன்இட பங்கொடி ஏற்றிவந்(து) அம்பலத்துள்
ஏறும் அரன்மன்னும் ஈங்கோய் மலைநம் இரும்புனம்காய்ந்(து)
ஏறும் மலைதொலைத் தாற்(கு)என்னை யாம்செய்வ(து) ஏந்திழையே. .. 113


கொளு
கடித்தழை கொணர்ந்த காதல் தோழி
மடக்கொடி மாதர்க்கு வகுத்துரைத்தது.

25. தழையேற்பித்தல்
தெவ்வரை மெய்யெரி காய்சிலை ஆண்டென்னை ஆண்டுகொண்ட
செவ்வரை மேனியன் சிற்றம் பலவன் செழுங்கயிலை
அவ்வரை மேலன்றி யில்லைகண் டாய்உள்ள வா(று)அருளான்
இவ்வரை மேற்சிலம் பன்எளி தில்தந்த ஈர்ந்தழையே. .. 114


கொளு
கருங்குழல் மடந்தைக்(கு) அரும்பெறல் தோழி
இருந்தழை கொள்கென விரும்பிக் கொடுத்தது.

26. தழை விருப்புரைத்தல்
பாசத் தளையறுத்(து) ஆண்டுகொண் டோன்தில்லை அம்பலம் சூழ்
தேசத் தனசெம்மல் நீதந் தனசென்(று) யான்கொடுத்தேன்
பேசிற் பெருகும் சுருங்கு மருங்குழல் பெயர்ந்தரைத்துப்
பூசிற் றிலள்அன்றிச் செய்யா தனஇல்லை பூந்தழையே. .. 115


கொளு
விருப்பவள் தோழி பொருப்பற்(கு) உரைத்தது.