திருச்சினாப்பள்ளியின் புராதான சரித்திரம்/நாயக்கர்

விக்கிமூலம் இலிருந்து

10-ம் அதிகாரம்.
நாயக்கர்.

விசுவனாத நாயக்கன் (1431-1485) :— இவன் ஆக்ஷி திருச்சினாப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் முதலிய ஜில்லாக்களில் ஏற்பட்டது. தஞ்சாவூர் நாயக்கனுக்கு வல்லத்தைக் கொடுத்து அதற்குப்பதிலாய் ஸ்ரீரங்கத்தைப் பரிவர்த்தனை செய்து கொண்டான். திருச்சியில் கோட்டைச்சுவர்களை பலப்படுத்தி மலைக்கோட்டைத்தெருவை கட்டி தெப்பக்குளத்தையும் வெட்டினான். கோட்டையைச் சுற்றி இரட்டை மதில் சுவர்கள் கட்டி அகிழ்களை வெட்டி அவ்வகிழ்களுக்கு காவேரியிலிருந்து ஜலம் வரும்படி ஏற்பாடு செய்தான். கோட்டைக்கு நாற்புரங்களிலும் கோபுரங்கள் கட்டி வாசல்கள் ஏற்படுத்தினான். இப்பொழுது இருக்கும் மெய்ன் கார்டு கேட் தான் மேலவாசல்.[1] இவன் ஸ்ரீரங்கம் கோவிலிற்கு விசேஷ திருப்பணிகளும் செய்தான். திருட்டு முதலிய குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு சிலரை பாளையக்காரராய் அமர்த்தி அவருக்கு நிலம் கொடுத்து யுத்தகாலங்களில் அவர் தனக்கு உதவிசெய்யும்படி ஏற்பாடு செய்தான். திருச்சியில் தாலூகா கச்சேரி இருக்குமிடத்தில் தான் இவன் அரண்மனையிருந்தது. சர்க்கார் பாளையம் இவனுடைய பாளையம்.

குமார கிருஷ்ணப்பன் (1486-1495):— இவன் விசுவனாதன் குமாரன். இவன் லங்கையை ஜயித்தான். 1524 வரையில் ஆண்ட இவன் சந்ததியாரைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை.

முத்துகிருஷ்ணப்பன் (1524-1531) :— சேதுபந்த ராமேசுவரத்திற்குப் போய்வரும் யாத்திரிகரின் ரக்ஷணார்த்தம் ராமனாதபுரத்தில் சேதுபதி வம்சத்தை இவன் ஸ்தாபித்தான்.

முத்துவீரப்பன் (1532-1545) :—

திருமலை நாயக்கன் (1546-1581) :- விஜயநகரத்தில் 1487-ல் நடந்த சண்டையில் விஜயநகர அரசன் தோற்கடிக்கப்பட்டு ராஜதானியும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதால் இவன் கப்பங் கட்டுவதை நிறுத்திவிட்டான். 1562-ல் சந்திரகிரியாசன் ரங்கராஜ(ய) தேவன் தென்னாட்டிற்கு வந்தான். திருமலையின் தூண்டுதலின் பேரில் கோல்கொண்டா ஸூல்டான் சந்திரகிரியை தாக்கவே அவன் திரும்பிவிட்டான், மஹமதியர் அவனைத் தோற்கடித்து விட்டு 1566-ல் தெற்கே வந்து ஜிஞ்ஜிக்கோட்டையை முற்றுகை போட்டனர். பீஜப்பூர் ஸுல்டானிடமிருந்து திருமலையின் உதவிக்காக வந்த மஹமதிய போர்வீரர் தம்மினத்தாருடன் சேர்ந்து கொண்டு திருமலையை மதுரைக்கு விரட்டியடித்தார். பிறகு மஹமதியர் தஞ்சாவூருக்குச் சென்று அந்த நாயக்கனிடமிருந்தும் திருமலையினிடமிருந்தும் கப்பம் பெற்று வடக்கே திரும்பினர்.

தனக்கு விரோதமாய் சந்திரகிரியாசனுக்கு மைசூர் மன்னன் உதவி செய்ததற்காக திருமலை மஹமதியரின் உதவியைக்கொண்டு மைசூரைத் தாக்கினான். நடந்த யுத்தத்தில் மைசூரார் அடக்கப்பட்டனர். விஜயநகர ராஜவம்சமும் இருந்தவிடம் தெரியாமல் போயிற்று. திரும்பவும் மஹமதியருக்கு திருமலையும் தஞ்சாவூர் நாயக்கனும் ஏராளமாய்ப் பொருள் தானம் செய்தனர்.

திருமலையின் மேல் கோபங்கொண்ட மைசூராசன் கோயம்புத்தூரைப் பிடித்துக்கொண்டு மதுரையைத் தாக்கினான். மைசூரார் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டார். திருமலையின் சகோதரன் மைசூர் நாட்டினுட்சென்று அரசனைப் பிடித்து அவன் மூக்கையறுத்து அதை மதுரைக்கனுப்பினான்.

1581-ல் திருமலையிறந்தபோது அவன் அதிகாரத்தின் கீழ் திருச்சினாப்பள்ளி, மதுரை, ராமனாதபுரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், புதுக்கோட்டை, திருவாங்கூர் முதலியவையிருந்தன. அவன் ராஜதானி மதுரை; திருச்சியிலும் வசித்தான். மதுரையில் பெரிய மால் ஒன்றைக்கட்டினான். இப்பொழுதும் 'திருமலை நாயக்கன் மால்' என்ற பிறஸித்தியுண்டு.

முத்து அளகாத்திரி (1582-1584) :— மஹமதியருடன் முரண் செய்ததில் முத்து அளகாத்திரி காட்டிற்குள் விரட்டியடிக்கப்பட்டான். தஞ்சாவூர், வல்லம், இவைகளையும் மஹமதியர் கைப்பற்றினர். முத்து அளகாத்திரி பயந்து, திரவியத்தைக்கொடுத்து, அவர் தயவை மறுபடியும் அடைந்தான்.

சொக்கனாதன் (1585-1604) :— தஞ்சாவூர் நாயக்கன் தூண்டுதலின் பேரில் திருச்சினாப்பள்ளிக்கு மஹமதியர் இரண்டு தடவை வந்தனர். முதல் தடவை தோற்கடிக்கப் பட்டபோதிலும் இரண்டாந்தடவையில் அவர் சொக்கனாதனிடம் கப்பம் பெற்றுச் சென்றார். தஞ்சாவூர் நாயக்கனின் குமாரியைக் கலியாணம் செய்ய நினைத்த சொக்கனாதன் தன் எண்ணம் நிறைவேறாமல் தஞ்சைக் கோட்டையைத் தாக்கினான். தன் குமாரியையும் அரண்மனையிலுள்ள மற்ற ஸ்திரீகளையும் ஓர் அறையிலிருக்கச்செய்து, வெடி மருந்தால் அதைத் தகர்த்திவிட்டு, யுத்தத்திற்குச் சென்ற தஞ்சை நாயக்கன் தோற்கடிக்கப்பட்டு தலையையிழந்தான். சொக்கனாதன் சகோதரன் அளகிரி தஞ்சாவூரில் ஸ்தாபிக்கப்பட்டான். ஆனால் அவன் கொஞ்ச காலத்தில் ஸ்வதந்திரனானான்.

இறந்து போன தஞ்சாயூர் நாயக்கனின் சந்ததியாருள் ஒருவன் பீஜப்பூர் ஸுல்டானிடம் உதவிகேட்க 1596-ல் மஹாராஷ்ட்ர வெங்காஜி (சீவாஜி சத்ரபதியின் சகோதான்) ஒரு பெரும் சேனையுடன் அனுப்பப்பட்டான். அளகிரியைத் தோற்கடித்து விட்டு வெங்காஜி தானே ராஜ்யத்தை வைத்துக்கொண்டான்.

இந்த சமயத்தில் மைசூர் சிக்க தேவராஜ உடையான் கோயம்புத்தூரைப் பிடித்துக்கொண்டான். சொக்கனாதன் ஒன்றும் செய்யமுடியவில்லை. அவன் மந்திரிகள் அவனைத் துலைத்துவிட்டு அவன் சகோதரனை அவன் ஸ்தானத்தில் வைத்தார்கள். 1600-ல் மஹமதியர் உதவியைக்கொண்டு சொக்கனாதன் தன் சிம்ஹாஸனத்தை மீட்டான். 1604-ல் மைசூரார் திரும்பவும் திருச்சிக்கு வந்தார்கள். மஹாராஷ்டிரர் மைசூராரைத் தோற்கடித்து திருச்சியை வளைத்துக் கொண்டார். துக்கத்தால் சொக்கனாதனுமிறந்தான்.

ரங்க கிருஷ்ண முத்து வீரப்பன் (1605-1611) :— நாயக்கர் ராஜ்யத்தின் விஸ்தீர்ணம் குரைந்து போய்விட்டது. மைசூராரும் மஹாராஷ்ட்ரரும் கொள்ளை கொண்டது போக மீதிதான் இவனுக்குக் கிடைத்தது. 1607-ல் தன் ராஜதானியையும் ராஜ்யத்தில் ஒருபான்மையையும் திரும்ப அடைந்தான். இந்த சமயத்தில் தென்னாட்டிற்கே ஒரு புதுச் சத்துருவேற்பட்டான். 1607-முதல் தான் இறந்த 1629 வரை டெல்லி சக்ரவர்த்தி அவுரங்கஸீப் தக்ஷிணத்திலேயே தங்கினான்.

மங்கம்மாள் (1612-1626) :— அவன் குமாரன் பால்யமாயிருந்தபடியால் அவனன்னை மங்கம்மாள் ஆக்ஷிபுரிந்தாள். இவள் அநேக கோவில் திருப்பணிகள் செய்தாள். நிழல் தரும் விருக்ஷங்களை ரஸ்தாக்களின் இருபுறமும் நட்டாள். ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபத்தைக் கட்டினாள். திருச்சியில் டவுன் ஹாலென விளங்கும் கொலுமண்டபத்தைக் கட்டி அதிலிருந்து நகர பரிபாலனம் செய்தாள். மணப்பாரையில் ஒரு முசாபுரி பங்களாவைக் கட்டினாள். உய்யக்கொண்டானின் இடிந்து போன பாலத்தைப் புதுப்பித்தாள்.

புத்தூரிலிருந்து அரைமைல் மேற்கே உய்யக்கொண்டான் சில பாறைகளின் மேல் ஓடுகிறது. அதுவே திருச்சியில் உய்யக்கொண்டான் ஓடும் மேட்டுப் பிரதேசம். காவேரி வெள்ளம் உய்யக்கொண்டானில் தாக்கினால் ஊருக்கே அனர்த்தம் விளையுமென்று கண்டு அப்பாறைகளின் மேல் அதிக ஜலம் தானே வழிந்து ஓடி குடமுருட்டி வழியாய்க் காவேரியிலேயே விழும்படி ஏற்பட்டுள்ள அணையை மங்கம்மாள் தான் கட்டினது. சத்துருக்கள் குடி தண்ணீரில் விஷம் கலக்காமல் பாதுகாக்க உய்யக்கொண்டான் திருமலையிலும் ரத்தினகிரீசுவர மலையிலும் சிறு காவல் ஸேனைகளை (out-post) ஸ்தாபித்தாள். உய்யக்கொண்டானிலிருந்து ஊரிலுள்ள 64 குளங்களுக்கும் பூமிக்கடி வழியே ஜலம் செல்லும்படி ஏற்பாடும் செய்தாள்.

1615-ல் அவுரங்கஸீப்பின் ஸேனைத்தலைவன் ஒருவன் ஸுல்பிகர்கான் என்பான் திருச்சி தஞ்சைக்குவந்து கப்பம் பெற்றுச் சென்றான். 1617-ல் மைசூரார் திருச்சியைத் தாக்கினார் ; வடக்கேயிருந்து மஹமதியர் மைசூர்மேல் படையெடுக்க ஊருக்குத் திரும்பிவிட்டனர்.

விஜயரங்க சொக்கநாதன் (1627-1653) :— மங்கம்மாளின் பௌத்ரன் விஜயரங்க சொக்கனாதன் பட்டத்துக்கு வந்த பிறகு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அநேக திருப்பணிகள் செய்தான். அவைகளில் இருப்பதினாயிரம் ரூபாய் பொறுமான தங்கக்குடம் ஒன்று. இவனுடையவும் இவன் குடும் பத்தாருடையவும் தந்தபிரதிமைகள் ஸ்ரீரங்கம் கோவிலில் வைக்கப்பட்டிருக்கின்றன.

மீனாக்ஷி (1654-1658) :— விஜயரங்க சொக்கனாதனுக்குக் குமாரனில்லை. அவன் மனைவி மீனாக்ஷி வங்காருதிருமலையின் குமாரனை ஸ்வீகாரம் எடுத்துக்கொண்டாள். 1656-ல் வங்காரு தனக்கு ராஜப்ரதிநிதித்வம் வேண்டுமென்று கலகம் செய்தான். அதே சமயத்தில் ஆர்க்காட்டிவிருந்து ஸப்தார் அவி கானும் சண்டா சாஹிப்பும் பெரும் படையுடன் தெற்கே வந்தனர்.[2]

மஹமதியர் தஞ்சாவூர் மார்க்கமாய் மதுரை திருநெல்வேலிக்குச் சென்றுத் திரும்புகாலில் மீனாக்ஷிக்கும் வங்காரு திருமலைக்கும் மத்தியஸ்தம் செய்வதாய் ஒப்புக்கொண்டனர். வங்காருவினிடம் 30 லக்ஷம் ரூபாய்க்குச் சீட்டுப் பெற்றான் ஸப்தார் அலி கான். சண்டாசாஹிப்போ மீனாக்ஷியிடம் கோடி ரூபாய்க்குச் சீட்டு வாங்கிக்கொண்டு, செங்கல்லைப் பட்டினால் போற்றி, அதையே கொரான் என்று சொல்லி, அவளைக் காப்பாற்றுவதாய் அதன் மேல் ஆணையிட்டான். ஆனாவிருவரும் ஒரு காரியமும் செய்யாமல் ஆர்க்காட்டுக்குச் சென்று விட்டனர். மீனாக்ஷியும் வங்காருவும் தம் சண்டையைத்தாமே தீர்த்துக்கொண்டனர். மதுரையும் திருநெல்வேலியும் வங்காரு வீதத்துக்குக் கிடைத்தன.

1658-ல் சண்டாசாஹிப் திரும்பவும் திருச்சிக்கு வந்து மீனாக்ஷியை கைதியாக்கி அவளை மானபங்கப்படுத்த யத்தனித்ததில் அவள் விஷம் உண்டு உயிர் துறந்தாள். அவளுடன் நாயக்கர் வம்ச ஆளுகையும் முடிவு பெற்றது. வங்காருவைத் தோற்கடித்துவிட்டு, சண்டாசாஹிப், மைசூராருக்குச் சொந்தமான கரூரைப் பிடித்துக்கொண்டு, திருச்சியில் அதிகாரம் செலுத்த ஆரம்பித்தான்.

நாயக்கர் வம்சாவளி

நாகம்மா நாயக்கன்

விசுவநாத நாயக்கன்

(1481-1485)

குமாரகிருஷ்ணப்பன்

(1486-1495)

முத்துக்கிருஷ்ணப்பன்

(1524-1531)

முத்து வீரப்பன்

(1532-1545)

திருமலைநாயக்கன்

(1546-1581)

முத்து அளகாத்திரி

(1582-1584)

சொக்கனாதன் = மங்கம்மாள்

(1585-1604) (1612-1626)

ரங்ககிருஷ்ண முத்துவீரப்பன்

(1605-1611)

விஜயரங்க சொக்கனாதன் = மீனாக்ஷி

(1627-1653) (1654-1658)

ஸ்வீகார குமாரன்

(வங்காரு திருமலையின் ஜனக குமாரன்)



குறிப்புகள்[தொகு]

  1. கோட்டை ரெயில் ஸ்டேஷனுக்கும் மேலவாசல் என்ற பெயர் சிலர் கொடுத்திருக்கின்றனர். மெய்ன் கார்டு கேட்டுக்கு சமீபத்தில் அது ஏற்பட்டது தான் அப்பெயருக்குக் காரணம்.
  2. 1615-ல் மங்கம்மாளிடம் ஸுல்பிகர்கான் கப்பம் பெற்றுப் போன பிறகு கொள்ளிடத்திற்கு வடக்கேயுள்ள கர்னாடகம் (1620-லிருந்து) மஹமதிய நவாபால் ஆளப்பட்டது. டெல்லி சக்ரவர்த்திக்குக்கீழ் அதிகாரம் செலுத்தினவன் தக்ஷிண ராஜப்ரதிநிதியாகிய நிஜாம் ஆனான்.