திருச்சினாப்பள்ளியின் புராதான சரித்திரம்/விஜயநகர ஸமஸ்தானம்
9-ம் அதிகாரம்.
விஜயநகர ஸமஸ்தானம்.
1232-ல் மாலிக்காபூரினால் ஹாய்ஸால ராஜ்யம் அழிக்கப்பட்ட பின்பு, துங்கபத்திரை நதிக்கரையில் ஹம்பி பிரதேசத்தில் விஜயநகா ஸமஸ்தானம் ஸ்தாபிக்கப்பட்டது. வடக்கே துங்கபத்திரா கிருஷ்ணாவிலிருந்து தெற்கே கன்யாகுமாரிவரையில் அதன் அதிகாரம் ஏற்பட்டதால் சோழ பாண்டிய நாடுகளும் இச்சமஸ்தானத்தின் பாகங்களாய்விட்டன. விஜயநகர அரசர்களான ஹரிஹரன் I-ம் புக்காவும் 1258-முதல் 1298-வரையில் ஆண்டார்கள். தெற்கே மஹமதியர் படையெடுக்காதபடி இவர்கள் தடுத்தனர். வடமொழியில் பல கிரந்தங்கள் இயற்றிய மாதவாசார்யரும் சாயனாசார்யரும் விஜயநகர ஸமஸ்தானத்தில் மந்திரிகளாயிருந்தவர்கள். 1365-ல் அச்சமஸ்தானத்தின் ராஜதானிக்கு பெர்ஸியாவின் ராஜதுதன் ஒருவன் வந்தான். விஜயநகாத்தினுடைய மஹிமையைப்பற்றி அவனும் போர்ச்சுகீஸ் பிரயாணிகளும் எழுதியிருக்கிறார்கள். விஜயநகரத்தாரின் சிலாசாஸனங்கள் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், ரத்தினகிரீசுவா மலை, அம்பில், திருப்பளாத்துரை, திருச்சி, இவ்வூர்களில் கிடைத்திருக்கின்றன.
மாலிக்காபூர் மதுரையிலும் திருச்சினாப்பள்ளியிலும் மஹமதிய கவர்னர்களை ஏற்படுத்தியிருந்தான். அவர்கள் 1249 முதல் 1287 வரையில் ஆட்சி செலுத்தி வந்தனர். பிறகு விஜயநகரம் ஓங்கிற்று. ஸ்ரீரங்கத்திலிருந்து கொண்டு போகப்பட்ட ஸ்ரீராமர் விக்கிரஹம் 1293-ல் மறுபடியும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விஷயம் ஏற்கனவே சொல்லப்பட்டது. விஜயநகர ராஜவம்சத்தில் பிறந்த கம்பண்ண உடையான், விரூபாக்ஷன் முதலியவர் தம் ஸ்வாதீனத்தைத் திருச்சினப்பள்ளி, தென் ஆற்காடு, மதுரைப் பிரதேசங்களில் ஏற்படுத்தினார்கள். கம்பண்ண உடையானின் சிலா சாஸனங்கள் திருப்பளாத்துறையில் கிடைத்திருக்கின்றன.
ஹரிஹரன் II (1301-1328)-இன் சாஸனங்கள் திருச்சியிலேயே கிடைத்திருக்கின்றன.கிருஷ்ண ராஜ(ய) தேவன் (1431-1451) :— இவன் மத வைராக்கியத்துக்கும் ஜனசுச்ரூஷைக்கும் பேர்போன தர்மப் பிரபுவாய் விளங்கினான். இவன்தான் ஸ்ரீரங்கத்தில் வெளிப்பிராகாரத்தையும் ராஜ(ய)கோபுரத்தையும் கட்டினான். கோபுரத்தின் நீளம் 130 அடி, அகலம் 100 அடி, உயரம் 43 அடி ; வாசல் கதவு நிலையின் உயரம் 23 அடி. இது கட்டி முடியுமுன் மஹமதியருடன் சண்டையுண்டாய்விட்டது. ஆதலால் கோபுரம் முடிவுபெறவில்லை. இவன் மந்திரி சேஷராஜ(ய)ன் ஸ்ரீரங்கத்தில் ஆயிரக்கால் மண்டபத்துக்கெதிரில் ஒரு மண்டபம் கட்டினான். அது இப்பொழுதும் சேஷராஜ(ய)ன் மண்டபம் எனப் பெயர் பூண்டிருக்கிறது. கிருஷ்ணராஜ(ய)தேவனின் சாஸனங்கள் திருப்பளாத்துரையில் கிடைத்கிருக்கின்றன.
அச்யுதராஜ(ய) தேவன் (1452-1464) :— இவன் ஆண்ட காலத்தில் திருவாங்கூர் அரசன் பாண்டிய நாட்டை ஜயித்து விஜயநகரத்தாருடன் சண்டைக்கு வந்தான். ஆனால் அவன் தோற்கடிக்கப்பட்டு தாம்பிரபர்ணி வரையில் துரத்தப்பட்டான். அந்நதிமத்தியில் ஜய ஸ்தம்பத்தை நாட்டி விட்டுத் திருவாங்கூர் அரசனிடம் கப்பம் பெற்றுத் திரும்புகையில் அச்யுதராஜ(ய) தேவன் பாண்டிய அரசன் குமாரியை மணம்புரிந்தான்.
1480-ல் உரையூரிலிருந்து சோழ வம்சத்தானொருவன் பாண்டியனுடன் யுத்தம் செய்து அவன் ஊரைப்பிடுங்கிக்கொண்டான். பாண்டியன் விஜயநகரத்தாரை உதவி கேட்க நாகம்மா நாயக்கன் தெற்கே வந்து சோழனைவென்று பாண்டியனுக்கு உதவிசெய்வதற்குப் பதிலாகத் தானே மதுரையில் அரசு செலுத்த ஆரம்பித்தான். நாகம்மாவின் தலையைக் கொண்டுவர விஜயநகரத்திலிருந்து அவன் குமாரன் விசுவனாத நாயக்கன் அனுப்பப்பட்டான். தகப்பனும் குமாரனும் சேர்ந்து யோஜனை செய்து நாகம்மா மன்னிப்புக் கேட்க அவனே தென்னாட்டி னதிகாரத்தைப் பெற்றான். காலக்கிரமத்தில் அவன் சந்ததியார் கப்பம்கட்டுவதை நிறுத்தி தாமே அரசர் பதவியை பேர் நீங்கலாக அடைந்தனர். நாயக்கர் ஆளுகையில் சோழ பாண்டியர் என்ன நிலைமையிலிருந்தார் என்று சொல்லமுடியாது. அவர்களைப்பற்றி சரித்திர ஆராய்ச்சியில் ஒரு சமாசாரமும் கிடைக்கவில்லை.
ராமராஜ(ய)தேவன் :— இவன் 1487-ல் ஹம்பி பிரதேசத்தில் நடந்த யுத்தத்தில் மஹமதியரால் தோற்கடிக்கப்பட்டு உயிர் துறந்தான். ராஜதானியும் பாழாக்கப்பட்டது. பிறகு ஆண்ட அரசர்கள் பெனுகொண்டாவிலிருந்தும், அதற்குப்பிறகு சந்திரகிரியிலிருந்தும் அரசு செலுத்திவந்தார்கள். சந்திரகிரியரசன் ஒருவன் 1562-ல் இங்கிவீஷ் கம்பெனிக்கு மைலாப்பூருக்கு வடக்கேயுள்ள பூமியை விற்றான். அங்கேதான் ஸென்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அவனால் எழுதிக்கொடுக்கப்பட்ட ஸ்வர்ணத் தகட்டு கிரயசாஸனப்பத்திரமும் அங்கேயே இருந்தது. 1668 முதல் 1671 வரையில் பிரஞ்சார் சென்னையைத் தம் ஸ்வாதீனமாக்கினர். அக்காலத்திற்குப் பிறகு அவ்விடம் ஸ்வர்ணத்தகடு காணப்படவில்லை.