திருச்சினாப்பள்ளியின் புராதான சரித்திரம்/மஹமதியர் படையெடுப்பு
8-ம் அதிகாரம்.
மஹமதியர் படையெடுப்பு.
13-ம் நூற்றாண்டில் (1232) டெல்லி மஹமதிய சக்ரவர்த்தியின் ஸேனைத்தலைவருள் ஒருவன் மாலிக்காபூர் என்பான் தென்னாட்டின் மேல் படையெடுத்து ஹாய்ஸால ராஜ்யத்தை யழித்தான். அவன் ராமேசுவரம்வரை செல்ல வில்லையானாலும் 1249 முதல் 1287 வரை மஹமதிய அதிகாரிகள் திருச்சினாப்பள்ளி மதுரை ஜில்லாக்களில் இருந்தனரென நிச்சயிக்கலாம். இக்காலத்தில்தான் (1235) ரவிவர்மச்சேரன் ஸ்ரீரங்கத்திற்கும் காஞ்சீபுரத்திற்கும் சென்றான். சோழபாண்டியர் அழிந்து போகவில்லையென்றாலும் அவரைப்பற்றியொன்றும் தெரியவில்லையாதலால் அவர் ஸ்வாதந்திரியத்தை இழந்து விட்டாரென்று தோன்றுகிறது.
தக்ஷித்தில் ஏற்பட்ட மஹமதிய ராஜ்யங்களுள் முதன்மையாயிருந்தது கோல்கொண்டா. இந்த ராஜ்யத்தில் பத்திரகிரி மலையில் புராதனமாய் ஏற்பட்ட ஸ்ரீராமர் ஆலயம் ஒன்று உண்டு. பத்திரகிரியில் கோபன்னா என்றொரு ராமபக்தரிருந்தார். இவர் தினந்தோறும் எழைகளுக்கு அன்னதானம் செய்வது வழக்கம். இவரது தர்மத்தின் பலனாக இறந்து போன இவருடைய 5 வயது குழந்தை உயிர்த்தெழுந்தது. கோல்கொண்டாவின் மஹமதிய அதிகாரி கோபன்னாவிடம் ப்ரீதிகொண்டு அவரைப் பத்ராசலம் தாசில்தாராக நியமித்தான். ஸர்க்கார் கிஸ்தி 6 லக்ஷம் ரூபாய் வரையில் பாக்கி வசூலாகவேண்டியிருந்த்து. பணத்தை பாக்கியில்லாமல் வசூல் செய்து அதைக் கொண்டு இடிந்து கிடந்த ஸ்ரீராமர் ஆலயத்தை கோபன்னா புதுப்பித்தார். அதிகாரி தன் பணத்திற்காக கோபன்னாவைச் சிறையிலிட்டான். அன்று இரவே ஸ்ரீராமர் அவனிடம் கோபன்னா வேஷத்துடன் சென்று பணத்தைப் பூராவும் செலுத்தி அவனுக்கு பொற்பாத தரிசனமளித்து சிறையிலுறங்கிக்கொண்டிருந்த கோபன்னாவின் தலைமாட்டில் ரசீதை வைத்துவிட்டு மறைந்தார். மறுநாள் காலையில் அதிகாரி கோபன்னாவிடம் நேரில் வந்து பொற்பாதத்தின் ரஹஸ்யத்தை வினவ கோபன்னா அவனை மலைக்கழைத்துச் சென்றார். தன் ஸன்னிதானத்திற்கு வந்த மஹமதியனுக்கு ஸ்ரீராமர் தரிசனம் கொடுத்தார். இந்த மாதிரியாக சிற்சில மஹமதியர்களுக்கு ஹிந்து மதத்தில் விசுவாஸமுண்டாகி மஹமதியர்களுள் ஹிந்து மதம் பரவ ஆரம்பித்தது. ஹிந்துக்களும் மஹமதியராவதை நிறுத்தினர். இப்படி ஹிந்துவான மஹமதியருள் ஒருவர் கபீர்தாஸர். இது நிற்க, கோபன்னாவை மறுபடியும் தாசில் வேலை பார்க்க மஹமதிய அதிகாரி உத்தரவு கொடுத்தான். ஒரு நாள் அரண்மனையில் உலாவிக்கொண்டிருந்தபோது ஸ்ரீரங்கம் ரங்கனாதர் ஆலயத்திலிருந்த ஸ்ரீராமரின் பொன் விக்கஹத்தை வைத்துக்கொண்டு அவன் குமாரி விளையாடினதைப் பார்த்த கோபன்னா 'அது ஏது' என வினவ, 'ஸ்ரீரங்கத்திலிருந்து மாலிக்காபூரினால் அது கொண்டுவரப்பட்டது' என்றறிந்து, அவ்விக்ரஹத்தைத் தந்திரமாய்க் கைப்பற்றி அதை ஸ்ரீரங்கத்தில் மறுபடியும் பிரதிஷ்டை செய்து அவ்விருத்தாந்தத்தையும் மதில் சுவர்களில் எழுதி வைத்தார்.