உள்ளடக்கத்துக்குச் செல்

திருச்சினாப்பள்ளியின் புராதான சரித்திரம்/பாண்டிய சேர சிங்களர்

விக்கிமூலம் இலிருந்து

7-ம் அதிகாரம்.
பாண்டிய சேர சிங்களர்.

ஜடாவர்ம சுந்தர பாண்டியன் I (1173-1183) நெல்லூர் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டினான். அவன் சாஸனங்கள் நெல்லூர், தஞ்சாவூர், ஸ்ரீரங்கம் முதலிய இடங்களில் காணப்பட்டிருக்கின்றன. அவன் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் ஆலயத்தின் விமானத்தைத் தங்க முலாம் பூசி பல திருப்பணிகள் செய்தான். வேறு மூன்று பாண்டியக் கோமான்கள் — மாரவர்மகுலசேகரன் 1, ஜடாவர்ம சுந்தர பாண்டியன் II, மாரவர்ம குலசேகரன் II - திருச்சினாப்பள்ளியிலிருந்ததாகவும் சாஸனங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் பாண்டிய ஹாய்ஸால நாடுகளின் எல்லைகளைத் தீர்மானிக்கவாவது சோழர்களின் அதிகாரம் எம்மட்டுமிருந்ததென்றறியவாவது ஹேதுக்களொன்றுமில்லை.

சோழபாண்டியர் ஒருவருக்கொருவருடன் கடும்போர் புரிந்தனர். ராஜராஜச் சோழன் I (907-935) பாண்டியர் நாட்டைத் தன்னுடையதாக்கிக்கொண்டான். அதற்கு ராஜராஜப் பாண்டியநாடு என்றும் அதன் தலைநகருக்கு சோழேந்திரஸிம்ஹ சதுர்வேதிமங்கலம் என்றும் பெயரிட்டான். ராஜேந்திரச்சோழன் I (936-966) பாண்டிய நாட்டில் 'சோழபாண்டியர்' என்ற பெயருடன் ஒரு புதிய வம்சத்தாரை அரசாக்ஷி செய்ய நியமித்தான். ராஜாதி ராஜச்சோழன் I (967-975) காலத்தில் கலகம் செய்த பாண்டியர் தோற்கடிக்கப்பட்டனர். வீரராஜேந்திரச் சோழன் (987-990) ஆக்ஷிபுரியும்போதும் கலகம் செய்த பாண்டியர் தோற்கடிக்கப்பட்டு அவர் மன்னனும் இறந்தான். குலோத்துங்கச் சோழன் I (993-1040) காலத்திலும் 995-ல் பாண்டியர் கலகம் செய்தனர். சோழமன்னனோ அவர் நாட்டை ஜயித்து திருவாங்கூர் எல்லையில் கோட்டாற்றின் சமீபம்வரை சென்று அங்கே ஒரு ஸேனையை பாதுகாப்பிற்காக ஸ்தாபித்து விட்டு வந்தான். 'சோழ பாண்டியர்' என்பவர் 1057 வரையில் சோழருக்குக் கீழ் சிற்றரசராயிருந்து, பிறகு இருந்த இடம் தெரியாமல் மறைந்திருக்கவேண்டும். பாண்டியரும் அக்காலத்துக்குப்பிறகு சோழராதீனத்தை மீறி ஸ்வாதந்திரியமடைந்திருப்பார்கள் போலிருக்கிறது.

ஏறக்குறைய 9-ம் நூற்றாண்டு முதல் ஸிங்களர் சோழருடன் யுத்தம் செய்ய ஆரம்பித்திருக்கவேண்டும். பரந்தகன் I (828-868) அவர்களைத் தோற்கடித்தான். ராஜராஜன் 1(907-935) லங்கைத்தீவு முழுமையும் தன்னுடையதாக்கிக்கொண்டான். அவனால் ஏற்படுத்தப்பட்டச் சோழ வம்சத்தவர் குலோத்துங்கன் I (993-1040) காலம் வரையில் அத்தீவில் ஆக்ஷி செலுத்தினர். பிற்பாடு சிங்களர் கலகம் செய்து சோழரைத் துறத்திவிட்டார்கள். ராஜாதி ராஜன் I (967-975) காலத்திலும் அவர் செய்த கலகம் அடக்கப்பட்டது. ராஜாதிராஜன் II (1094-1100)-ம் குலோத்துங்கன் III (1101-1151)-ம் அவருடன் கடும் போர்புரிந்தபோதிலும் பின் வந்த சோழமன்னரொருவராவது லங்கைத் தீவில் ராஜ்யம் ஸம்பாதித்ததாக தோன்றவில்லை.

ராஜேந்திரன் I (936-966) பர்மாவுக்கு ஸைந்யத்தையனுப்பி அந்நாட்டையும் மலேயா தீவுகளையும் கைப்பற்றினான். ஆனால் அவ்விடங்களில் சோழர் ஆக்ஷி எப்படி குன்றிற்று என்பது புலப்படவில்லை.

பாண்டியரைப்போலவே சேரரும் அடிக்கடி சோழருடன் சண்டைகள் செய்தனர். கரிகாலச்சோழனும் அவன் குமாரன் நலன்கிள்ளியும் அவரை அடிக்கடி எதிர்த்து தோற்கடித்தனர். ராஜராஜன் I (907-935) சேர நாட்டுத் துறைமுகமொன்றைப் பிடித்தழித்தான். ராஜாதி ராஜன் I (967-975)-ம் வீரராஜேந்திர (987-990) - னும் அவருடன் யுத்தம் பண்ணி வெற்றி பெற்றார்கள். குலோத்துங்கன் I (993-1040) சேரர் கலகத்தையடக்கி அவர் ஊர் ஓரம் கோட்டாற்றில் ஒரு ஸைன்யத்தையும் ஸ்தாபித்தான். 13-ம் நூற்றாண்டில் (1235) ரவிவர்மச்சேரன் ஸ்ரீரங்கத்திற்கும் காஞ்சீபுரத்திற்கும் சென்றான்.

குறிப்பு

[தொகு]