திருவாசகத்தேன்/உயிரின் தவிப்பு!

விக்கிமூலம் இலிருந்து
உயிரின் தவிப்பு

யானை பெரிய விலங்கு. ஆம்! உடலால் பெரிய விலங்கு! அதனால் பெரிய கையால் உண்கிறது! தும்பிக்கை நீண்ட பெரிய கை! ஒரே நேரத்தில் தும்பிக்கையாலும் வாயிலும் உணவு வைத்துக்கொண்டு அளவுக்கு அதிகமாக உண்டு, ஊன் பெருக்கும் யானை அந்தோ பரிதாபம்: தன்னை, தன் உடலை அறிந்து கொள்ள இயலாதது யானை! சமய நெறியில் கடவுளைத் தெரிந்துகொள்ளுதல், கடவுளை வழிபடுதல் இரண்டாம் நிலையே! முதலில், மனிதன் தன்னை அறிந்து கொள்ளுதல் வேண்டும். அதனால்தான் மாணிக்கவாசகர் ஆன்ம ஆய்வில் "நான் ஆர்" என்று முதலில் தன்னைப் பற்றிய ஆய்வைத் தொடங்குகின்றார். "தன்னை யறிதல்" முதல் கடமை! தன்னுடைய குறைகள் அறிந்தால்தானே நிறைகளை நாடிப் பயணம் செய்ய இயலும் "தம்மை யறிந்து தலைவனை உணர்தல்" என்பது மெய்கண்டார் வாக்கு!

மனிதன் யார்? மனிதன் தானா? மிருகத்தில் மனிதன்; மனிதனில் மிருகம் மனிதனில் மனிதன் என்ற படிமுறைகள் உண்டு! இந்த வரிசையில் மனிதன் யார்? தான் யார் என்று அறியாத நிலையில் வளர்ச்சியில்லை! ஆதலால், தன்னையறிதல் வாழ்க்கையில் முதல் நிலை! யானைக்கு எப்படி தன்னை, தன் உடலை அறிய,முடியாத நிலையோ அதுபோலவே மனிதனுக்கும் தன்னை அறிய முடியாத நிலை யானை, இரு கையாலும் உண்டு ஊனைப் பெருக்கி வளர்த்துக் கொள்கிறது! இன்றைய மனிதனின் நிலை என்ன? எங்குப் பார்த்தாலும் உணவுச் சாலைகள்! இரை தேடி அலைகிறான்! திருக்கோயில் களையும் உணவு விற்கும் சாலைகளாக மாற்றிவிட்டான்! உண்டி நாலு விதத்தால் அறுசுவையில் தேர்ந்து உண்டு ஊனினைப் பெருக்கி வளர்கிறான்! இதன் விளைவே நீரிழிவு நோய் உடற் கனம்! இதயப் பாதிப்பு: மூட்டு வலிகள்! ஊனின் எடை குறையவேண்டும்! ஊனாகிய உடல் ஆன்மாவுக்குப் பணி செய்யவேண்டும்! ஊன் உருகுதல் வேண்டும்!

யானை, கட்டுத் தறியில் தன் தலையில் தானே புழுதியை அள்ளிப் போட்டுக் கொள்ளும்! அதுபோல் ஆன்மா தன்னுடைய துன்பத்தைத் தானே வரவழைத்துக் கொள்கிறது. இன்பமே உலகத்து இயற்கை துன்பமெலாம் மனிதனின் படைப்பே அறியாமையின் காரண மாக மனிதன் தனக்குத் தானே துன்பம் செய்து கொள்கிறான்! அறியாமை என்றால் என்ன? ஒன்றும் தெரியாமை அறியாமை அல்ல. ஒன்றைப் பிறிதொன்றாக முறைபிறழ உணர்தலே அறியாமை! "நன்றுடையான், தீயதிலான்"- இறைவன் என்பது திருஞானசம்பந்தர் வாக்கு! "நன்றுடையான்"என்று சொன்னால் போதுமே! ஏன் எதிர்மறையாலும் "தீயதிலான்" என்று சொல்லவேண்டும்?. எது நன்மை! எங்கும் எப்பொழுதும் எல்லாருக்கும் நன்மையாக எது இருக்கிறதோ அதுவே நன்மை! ஒருபொழுது நன்மையாகவும் ஒருபொழுது தீமையாகவும் இருப்பது நன்மையாகாது. இன்று மனிதர் நன்மையென்று நினைத்துக் கொண்டிருப்பது தீமை கலந்த நன்மையையேயாம்! ஆதலால் பழக்க வாசனையால் தீமை கலந்த நன்மையை-- தீமையாக உள்ளதை நன்மையாக மனிதர் அறியாமையால் கருதுகின்றனர். இறைவன் முற்றாக நன்மை. ஆதலால், மனிதர்கள் யானை தன் தலையில் மண்ணையள்ளிப் போட்டுக் கொள்ளுதல் போலத் தங்களுக்குத் தாங்களே தீமை செய்து கொள்கின்றனர். ஆதலால், மனிதருக்கு வரும் துன்பம், பிறர் செய்ததன்று. தீதும் நன்றும் பிறர்தர வாரா! கடவுள் தந்ததுமன்று! எல்லாம் அவரவர் செய்து கொள்வதே! யானை தலையில் புழுதி அள்ளிப் போட்டுக் கொண்ட கதைதான்!

அடுத்து யானை தன்னைக் கட்ட, சங்கிலியைத் தானே எடுத்துப் பாகனிடம் கொடுக்கும். அதுபோல மனிதன் தன்னைத்தானே வினைக் கட்டுகளுக்கு உட்படுத்திக் கொள்கிறான். ஆன்மாவின் முதற் பிறப்பு கருமேனி கழிக்க வந்த பிறப்பே அறியாமை அகல இறைவன் அருளிச் செய்த பிறப்பே, அற்புதமான பிறப்பு. அறிவுக் கருவிகள் செயற் கருவிகள் இணைந்த மகத்தான் தோற்றம் "வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்!” என்பது திருமுறை. ஆயினும் என்? உயிர்கள் தற்சார்பு, தன்முனைப்பு காரணமாக 'நான்', 'எனது', என்ற செருக்கின் வழியாக இருவினை பெருக்கி அல்லற்பட்டு உழல்கின்றன. வினைகட்டு-வினைத் துன்பம் உயிர்களின் ஈட்டம்! அவரவர் வினைவழி அவரவர் வந்தனர். எவர் எவர்க்கு உதவினர்? எவர் எவர்க்கு உதவிலர்? என்றெல்லாம்.சிந்திப்பது தவறு. உயிர்கள் தமக்குத் தாமே யானையைப் போலக் கட்டுக்களைப் போட்டுக் கொள்கின்றன.

இவையெல்லாம் போகட்டும்! யானைக்குத் தன் மேல் யானைப் பாகன் இருந்து செலுத்துகிறான் என்பது தெரியுமா? உணருமா? தெரியாது! உணராது. அதுபோலத் தான் உயிர்களுக்கு உயிர்களின் உயிருக்குள் உயிரதாக, இருந்து விளங்கி உயிர்களை இயக்கிடும் கடவுளைப் பலர் அறியார் உணரார். கடவுள் உயிர்க்குக் கருவாக, உயிராக விளங்கியருள் செய்யும் பான்மையை அறியாதன! உணராதன! வேடிக்கை என்னவென்றால் யானை தன் முதுகுப் புறத்தே இருந்து செலுத்தும் பாகனை அறிவதில்லை. ஆன்மாக்களோ உயிர் நிலையில் உயிர்க்கு உயிராக- கருவாக இருந்தருளும் கடவுளைத் தெரிந்து கொள்ள இயலவில்லை; தெரிந்து கொள்ளும் முயற்சி இல்லை. இதனால், விளைந்த பயன் என்ன? துன்ப்மே ஒழிய வேறில்லை. உயிர்க்கு உயிராக உள்ள இறைவனை நினைந்து, உணர்ந்து அந்தப் பேரறிவு ஒளிக்காட்சியின் திசையில் வாழ்ந்தால் துன்பம் வராது. அங்ங்ணமின்றி ஆணவத்தோடு தொடக்குண்டு ஆணவத்தின் வழி இயங்கு வதால் கண்டதெல்லாம் துன்பமேயாம்! இந்த உலக இன்பங்களில் துன்பத் தொடக்கு இல்லாத - துன்பக் கலப்பு இல்லாத இன்பம் எது? ஒன்றும் இல்லை! அதிலும் இறை ஒளியுடன் தொடர்பில்லாதன எல்லாம் துன்பமேயாம்!

கடவுளைக் காணப் பலரும் முயற்சி செய்கின்றனர். புற்றாக, மரமாகத் தவம் செய்கின்றனர். ஆனாலும் கடவுட்காட்சி கிடைப்பதில்லை; திருவ்ருட் சார்பில்லாததிருவருள் துணையல்லாத ஆன்ம அறிவால் கடவுளைக் காண முடியாது. கடவுளைக் கண்ணால் சிலர் அல்லது பலர் காணாமையால் கடவுள் இல்லை என்றே கூறுகின்றனர். மானுடம் அறிவுப் படைப்பு! அறிவின் அனுபவத் தின் எல்லையில் கடவுட்காட்சி விலங்குகள்--கால்நடைகள்! அவை சிந்திக்கும் இயல்பின அல்ல! மனிதன் காலால் நடக்கின்றான். அதனால் மனிதனைக் 'கால்நடை' என்று கூற இயலுமா? விலங்குகள் கால்களால் மட்டுமே நடக்கும் இயல்பின. மனிதன் கால்களால் நடப்பதற்கு முன் சிந்தனையால் நடந்து, கருத்தால் நடந்து பின்தான் கால்களால் நடப்பான்! ஆதலால், உயிர்தோறும் உள்ளக் கருவாய், ஒளியாய் விளங்கும். கடவுளை அறிஞராயோர், ஞானியர் சிந்திப்பர்; உணர்வர்; காண்பர்! இங்ங்ணம் கடவுளைக் காணவில்லையே என்று மாணிக்கவாசகர் கவலைப்படுகிறார். கடவுளைக் காணாததால் அந்தப் பேரொளி காட்டும். திசையில் செல்லாததால் கண்டது துன்பமே! சைத்தானுக்குப் பணி செய்தால் துன்பந்தவிர் வேறு என்ன பயன்? கடவுள் ஒளி வழி எது செயினும் இன்பமாக அமையும். ஆணவத்தின் திசைவழி நன்றே செயினும் துன்பமேயாம். ஏன்? ஆணவத்தின் வழிகாட்டுதவில் உயிர்கள் நன்று நினைத்தல் இயலாது; நன்று செய்ய இயலாது. ஒரோவழி செய்யப்படுவன நன்மை போலத் தோன்றும். ஆயினும் நன்மையல்ல. உலை. நீரில் கிடக்கும் ஆமைக்கு இளஞ்சூடு தரும் இதமான இன்பம் யாது செய்யும்? நன்மை போலக் காட்டித் துன்பம் செய்யும்!

மாணிக்கவாசகர் அனுபவம் வேறு மற்றவர் அனுபவம் வேறு! இறைவனைக் காண- அனுபவிக்கப் பலர் முயற்சி செய்தனர்; முயன்று கொண்டுள்ளனர். ஆனால், கண்டவர் சிலரே! ஆன்மாவின் அறிவு, சிற்றறிவு மறதிக்குள்ளாகும் அறிவு, பாசபந்தங்களுக்கும். ஆசாபாசங்களுக்கும் இரையாகும் அறிவு. இந்த அறிவால் தூய்மையே அறிவே வடிவாக உள்ள கடவுளை எப்படிக்காணமுடியும் நான்முகனும் திருமாலும் தேடிக் காணமுடியாத பொருள், கடவுள் என்ற வரலாறு கற்றுத் தரும் படிப்பினை என்ன? கடவுள் கருணை பாலித்தாலன்றிக் கடவுளைக் காண இயலாது. மாணிக்க வாசகருக்கு, இறைவன் ஞானாசிரியனாக எழுந்தருளி உபதேசித்தருளினான்; காட்சி தந்தான். வருக என்று அழைத்தான். ஆனால், அழைத்துக்கொண்டு போகாமல் இறைவன் மறைந்துவிட்டான்! ஏன்? மாணிக்கவாசகரின் அன்பு பெருகி வளர்தல் வேண்டும். அந்த அன்பைத் துய்க்க வேண்டும் என்ற திருவுள்ளம்தான்! கடவுள் மாணிக்கவாசகருக்கு மறைந்தான். புணர்ச்சி, அன்பை வளர்க்காது! பிரிவுதான் அன்பை வளர்க்கும். மாணிக்க வாசகர் கடவுளைக் கண்டார்; அனுபவித்தார். கடவுள் பிரிந்து போனார். மாணிக்கவாசகர் கடவுளிடம் கொண்ட பிரிவு, திருவாசகத்தைத் தந்தது.

கடவுள் ஒருவனே! வணங்குவனவெல்லாம் கடவுள் அல்ல! கடவுள் பல இல்லை. கடவுள் பல என்ற கொள்கை ஏற்புடையதுமன்று. வானிலுள்ள தேவர்க்கு எல்லாம் கடவுள் ஒருவனே! அமரர்களுக்கு எல்லாம் ஒருவனாக, தேவர்கோ அறியாத தேவதேவனாக விளங்கும் கடவுள் வலியவந்து 'வா'வென்று அழைத்து. வான்கருணை பொழிந்த பிறகும் உடன் போகாது பின்நின்று போனதை நினைத்து நினைந்து வருந்துகின்றார்! ஒன்றை அனுபவிக் காமலே இருந்துவிடலாம்! அனுபவித்துப் பின் இழத்தல் கொடிய துன்பத்தைத் தரும். மாணிக்கவாசகர். இறைவனைக் கண்டார். அந்தம் அன்றில்லா ஆனந்தத்தைப் பெற்றார்; அனுபவித்தார். இடையில் பிரிவு ஏற்பட்டுவிட்டது. ஆனந்த அனுபவத்தில் இடையீடுபட்டுவிட்டது. இதனை மாணிக்கவாசகர் ஆற்றிக் கொள்ள இயலாமல் தவிக்கிறார். கடவுள்ளின் பிரிவுத் துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றலில்லாமல் அல்லற்படுகிறார். இந்த ஆற்றாமையால் தற்கொலை எண்ணம்கூட மாணிக்கவாசகருக்கு வருகிறது! "திண்வரை உருள்கிலேன்; தீயில் புக்கிலேன்" "சாகேன்" என்றெல்லாம் அலமருகிறார்; புலம்புகிறார். மீண்டும் உண்ணவே ஆசைப்படுகிறார். பசியும் உண்ணுதலும் சுழன்று வரும் தீய வட்டமாயிற்றே! எத்தனை தடவை உண்டாலும் பசி என்று நீங்கும்! ஒருப்போதும் நீங்காது: ஞானம்பெற்றால் ஒழிய உடற்பசி தணிய வழியில்லை! பிறப்பு தொடங்கிய நாள் தொட்டு உண்ட உணவுக்கு அளவில்லை! கடவுளே! இறைவா! அருள்செய்க! வருக என்றருள் செய்க வெறுமனே செத்துப்போகும்படி விட்டுவிடாதே! உன்னால் ஆட்கொள்ளப்பட்ட நான். வெறுமனே செத்துப்போனால் சிரிப்பார்கள்! இந்த அவலம் வேண்டாம்! வேண்டவே வேண்டாம்! உன் பணி செய்ய வருக என்றருள் செய்க திருப்பெருந்துறை சிவனே அருள் செய்க! என்று உருகுகின்றார் மாணிக்கவாசகர்.

     இருகை யானையை ஒத்திருந்(து) என்உளக்
     கருணை யான் கண்டி லேன்கண்ட(து) என்னமே
    'வருக' என்று பணித்தனை வானுளோர்க்(கு)
     ஒருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே!

(திருச்சதகம்-41)